வணக்கம்,
பிழையின்றித் தமிழை எழுத
தமிழ்வேட்டை என்ற இணையவழிப் போட்டி சில மாதங்கள் முன்னர் சிறப்பாக நடந்து முடிந்தது. அது போலத் தமிழ்த் தொழில்நுட்பத்தை வளர்க்கவும் புதிய சிந்தனைகளை ஊக்குவிக்கவும்
தமிழி நிரலாக்கப்போட்டி (Hackathon) ஒன்றை அறிமுகம் செய்துள்ளோம்.
திரள்,
வாணி,
அக்ரிசக்தி ஆகிய தொழில்நுட்ப அமைப்புகள் முன்னெடுத்து, ஸ்டார்டப்-டிஎன், த.இ.க. ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
நிரலாக்கப்போட்டி என்பது கொடுக்கப்பட்டுள்ள சிக்கல் கூறுகளுக்குக்(problem statements) கணினி நிரல் மொழியில் தீர்வுகளை உருவாக்க வேண்டும். தமிழ் மொழி சார்ந்து ஒரு தொழில்நுட்பத் தீர்வை/மென்பொருளை உருவாக்குவதே இந்தப் போட்டியாகும். ஆர்வமுள்ளவர்கள் (எந்த நாட்டிலிருந்தும்) தமிழ் மொழி சார்ந்த தங்களது தீர்வு வரைவைச்(solution proposal) சமர்ப்பிக்கலாம். அதில் தீர்விற்கான தெளிவு, தமிழுக்கான முக்கியத்துவம், வளர்ச்சிக்கூறு போன்றவற்றின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். போட்டியாளர்கள் தொடர்ந்து தீர்வை அவரவர் இடத்திலிருந்து வளர்த்து வரலாம். இணையவழியாகப் பல மதிப்பிடல்களை நிகழ்த்தி, பல திறன்மேம்பாட்டுப் பயிற்சிகளும் இணையவழியில் வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் இறுதிப் போட்டி மதுரையில் நடக்கிறது. அதில் சிறந்த படைப்புகளுக்கு இரண்டு வகையாகப் பரிசுகளும் (இந்தியப் பணத்தில்) வழங்கப்படுகின்றன. போட்டியோடு முடிந்துவிடாமல் மேலும் அதைத் தொழில் வாய்ப்பாக வளர்த்தெடுக்க ஸ்டார்ட்ப்-டிஎன் சார்பாக வழிகாட்டலும் வழங்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கென்றே தனிப் பிரிவுள்ளது. அதில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கருவிகளையும் நிரல்களையும் படைக்கலாம். userscript, Lua script, BOT, Webapp, Mobileapp போன்று எந்த ஒரு தொழில்நுட்பத் தீர்வையும் தமிழ் விக்கித் திட்டங்களுக்கு உருவாக்கலாம். அதற்குச் சிறப்புப் பரிசுகளும் உண்டு.
தொழில்நுட்பத்தைத் தமிழில் கொண்டுவருவதும் தமிழுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்குவதும் மொழிக் கணிமையில்(Language Computing) இன்றியமையாத பணியாகும். இத்தகைய பணியில் ஆர்வமுள்ள அனைவரையும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அழைக்கிறோம்.
--