நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு. ( நிலையாமை) (குறள் எண் 336)
நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இவ்வுலகு. இப்படித்தான் அனைவரும் உரை எழுதுகிறார்கள். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பது சாதாரண ஒன்றுதானே. இயல்பாக நிகழ்வது தானே. அதில் என்ன பெருமை இருக்கிறது இந்த உலகிற்கு?
ஒவ்வொரு திருக்குறளிலும் ஒரு சொல் நுட்பமாக வள்ளுவரால் கையாளப்பட்டுள்ளது என்று நான் தொடர்ந்து சொல்லி வருகிறேன். இந்தக் குறளில் நுட்பமாக உள்ள சொல் "உளனொருவன்" என்ற சொல். இதுவே வணங்குதற்குரிய சொல். உளனொருவன் என்று எழுதாமல் "வாழுமவன்", "இருக்குமவன்", "தோன்றுமவன்", "பிறக்குமவன்" என்று எழுதி இருக்கலாம் அல்லவா?! இலக்கணமும் ஒட்டி வருமே.
"உளனொருவன்", உள்ள ஒருவன்., தான் "உள்ளேன்".., என்று பல்வேறு வகைகளிலும் நிறுவி, பெருமை பேசி, ஆர்ப்பரித்து, ஆட்டம் ஆடி, அலையை வீசுகிறான். தனக்காக ஆடுகிற அவன் அருகில் உள்ள அனைவராலும் போற்றப்படுகிறான். வணங்கப்படுகிறான்.
இப்படி எத்தனை பெருமைகளோடு அவன் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், இருந்தாலும், ஒரு நாளில் அவன் இறந்து போவான். இல்லாமல் போய்விடுவான். அவன் பெருமை உலகில் நிற்காது. (நிலையாமை)
உலகு நிலையானது. உலகில் உள்ள ஒருவன் (உளனொருவன்) எத்தனை பெருமை உடையவனாக மேலேறி நின்றாலும், தனக்காக வாழும் அவனை, இந்த உலகு, வணங்கி, வாழ்த்தி, நீடுவாழ வழி செய்யாது. இதுவே இந்த உலகின் பெருமை.
"உளனொருவன்" என்பதற்கான மறைபொருள் இது. உயிர்களிடம் அன்பு, ஒழுக்கமொடு வாழ்தல், வேண்டுவோர்க்கு ஈதல், ஆய்ந்து அறிதல், அறிந்தது பகிர்தல், என்கிற வகையில் வாழும் ஒருவன் பெயர் இந்த உலகில் நிற்கும். இதுவும் இந்த உலகின் பெருமையே.