கீதாச்சாரம்

4 views
Skip to first unread message

rangasamy rajaraman

unread,
May 25, 2024, 5:41:54 AMMay 25
to freeians - விடுதலைகள்

கரு.ஆறுமுகத்தமிழன் முகநூலில்

பாரதப் போர்க்களத்தில் அருச்சுனன் போரைத் துறந்து தேரை விட்டிறங்க, கண்ணன் அவனை மறித்து நிறுத்தி அறிவுறுத்திப் போரிடச் சொல்கிறான்: போர் என்பது தருமத்தை நிலைநிறுத்துவதற்கானது; போரைக் கைவிடுவது என்பது தருமத்தையே கைவிடுவதாகிறது; ஆகவே துணிந்து நில்; தொடர்ந்து செல்; காண்டீபம் எடு; கணைகளைத் தொடு; கொல்; பொய்யுரைத்தாலும் குற்றமில்லை. 

இது ஒருபுறம் இருக்க, தேர்த்தட்டில் பணிந்து அமர்ந்திருக்கும் அருச்சுனனுக்குக் நெடுமாலென நின்றிருக்கும் கண்ணன் அறிவுரைக்கும் படத்துடன் அச்சிடப்பட்ட கீதாசாரம் நாம் அறியாததில்லை. நினைவூட்ட இது:

கீதாசாரம்
--------------
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையது எதை நீ இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் அது வேறொருவருடையது ஆகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமும் ஆகும்.
பகவான் சிறீ கிருட்டிணர்.

இனி, கேள்வி இது: 
முதலில் சொல்லப்பட்ட பகவத் கீதைக்கும் இரண்டாவதாகச் சொல்லப்பட்ட கீதாசாரத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? கீதாசாரம் என்று சொல்லப்படுவது உண்மையிலேயே கீதையின் சாரமா?
 
'நடந்தது கொஞ்சமும் சரியில்லை; தொடர்ந்து அதை அப்படியே நடக்க விடமுடியாது; இனி இது நடக்கவும் கூடாது் ஆகவே அதை மாற்ற முனை; கணை விடு; குத்திடு; கொல்; எதிராளியை இழக்கச் செய்; அதை நீ எப்படியேனும் பெறு' என்று போருக்குத் தூண்டி வழிநடத்துகிற கீதைக்கும்,

'உன்னுடையது எதையாவது இழந்திருந்தால் நீ போர் செய்வதற்கு ஏதேனும் ஒரு சிறிய ஞாயம் இருந்திருக்கும். ஆனால் உன்னுடையது என்று எதுவுமே இல்லையே? நீ பிறந்து விழுகையில் எதையேனும் கொண்டுவந்தாயா? உன்னுடையதே உன்னுடையதென்று அறிவுரிமையும் படைப்புரிமையும் பெறும்வகையில் எதையேனும் நீ படைத்து வைத்திருந்தாயா? இல்லையே? எடுத்தவற்றையெல்லாம் இங்கேயே எடுத்தாய். கொடுத்தவற்றையெல்லாம் இங்கேயே கொடுத்தாய். எடுத்ததும் உன்னுடையதில்லை; கொடுத்ததும் உன்னுடையதில்லை. ஆற்றில் போகிற நீரை ஐயா குடி அம்மா குடி வகைதானே? பிறகென்ன கொந்தளிக்கிறாய்? கொல்லக் குமைகிறாய்? சும்மா இரு' என்று சொல்கிற, 'கீதாசாரம்' என்று பிழையாக வழங்கப்படுகிற, கீதாசாரம் அல்லாத ஒன்றுக்கும். ஏதேனும் குளியல் தொடர்பாவது (சுநானப் பிராத்தி) இருக்கிறதா? 

கீதாசாரம் என்று பெயரில் வழங்கப்படும் அறிவுரை ஐயத்திற்கு இடமில்லாமல் மிகவும் சிறந்தது. ஆனால் அது கீதையின் சாரம் இல்லை; மாறாக அதன் நேர் எதிர். 

போரைத் தொடு என்கிற மரபையும், போரை விடு என்கிற மரபையும் ஒன்றாக்கிக் குழப்புவது மொல்லமாறித்தனமில்லையா? கீதைக்குத் தொடர்பில்லாத ஒரு கருத்தைக் கீதையோடு தொடர்புபடுத்திப் பதிவு செய்வது கருத்துக் களவாணித்தனமில்லையா? அதைக் கீதை படித்த கீதாசாரியார்கள் பேசாமல் கடந்துபோவது அறிவு அடக்கம் (பணிவு இல்லை; அறிவைப் புதைத்துவிடுதல்) இல்லையா?

சரி. இது எதற்கு இப்போது? தற்குறித்தனத்தை, குழுவாதச் சார்பை, சல்லித்தனத்தை நிறுவத்தான்.

.
Reply all
Reply to author
Forward
0 new messages