வரலாற்றில் நிலைத்த வாழ்குடை!
= = =================== = =
இரண்டு நாள்களுக்கு (24.03.25) முன்பு, செய்யாறுக்கு அருகில் இருக்கிற முக்கூர் என்னும் சிற்றூரில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் செய்யாறு சென்றிருந்தேன். செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் திருஜோதி அந்தப் பொதுக்கூட்டத்தை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த ஊரில்தான், 2009 ஆம் ஆண்டு, நான் கலைஞர் தொலைக்காட்சியில், தினமும் பேசி வருகின்ற ஒன்றே சொல் நன்றே சொல் நிகழ்ச்சிக்கான ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. தோழர்கள் அசனம்பேட்டை வடிவேலு, (குரோம்பேட்டை) பொன்னுசாமி ஆகியோர் முன்னின்று நடத்திய அந்த விழாதான், அந்த நிகழ்ச்சிக்கான முதல் பாராட்டு விழாவும், ஒரே பாராட்டு விழாவும் ஆகும்!
அதற்குப் பின்னும், அய்யா (தாடி) அருணாச்சலம் அவர்கள் வீட்டுத் திருமணம், நண்பர் மணிவண்ணன் வீட்டுத் திருமணம், திரைப்பட இயக்குனர் செய்யாறு ரவி அவர்களின் புதுமனை புகுவிழா ஆகிய விழாக்களுக்குச் செய்யாறு சென்று வந்திருக்கிறேன்.
இருப்பினும், இந்த முறை செய்யாறு பயணம் புதிய அனுபவத்தைத் தந்தது !
செய்யாறுக்கு அருகில் உள்ள வாழ்குடை எனும் ஊரில்தான், ஒரு திருமண விழாவில் அய்யா பெரியார் அவர்கள் நெடு நேரம் - அதாவது 5 மணி நேரத்திற்கு மேலாக - உரையாற்றினார் என்பதும், அந்த உரை முடிந்தவுடன் திருமண மேடையிலேயே அந்தப் பெண் தன் தாலியைக் கழற்றி வைத்து விட்டார் என்பதும் நான் படித்திருக்கிற செய்திகள்! ஒரு முறை கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களுக்குத் தொலைபேசி அதனை உறுதிப்படுத்திக் கொண்டேன்! பிறகு அந்த ஊரை ஒரு முறை நேரில் சென்று பார்த்துவிட வேண்டும் எனும் என் ஆசையை, நண்பர் மணிவண்ணனிடம் தெரிவித்தேன்.
அடுத்த நாள் காலை, அவரும் அருணாச்சலம் அய்யாவின் மகன் இளங்கோவன், திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நண்பர் காமராசன் உள்ளிட்ட நண்பர்கள் பலர் வந்துவிட்டனர்.
நான் சற்றும் எதிர்பாராத வகையில், 1949 ஆம் ஆண்டு எந்த ஊரில் பெரியார் திருமணம் நடத்தி வைத்து, நீண்ட நேரம் உரையாற்றினாரோ, அந்த ஊரிலிருந்து, அன்று திருமணம் செய்து கொண்ட கிருஷ்ணசாமி - கல்யாணி ஆகியோரின் இரண்டாவது மகள், தேன் அருவியும், அவர் கணவரும் வந்திருந்தார்கள்.
அவர்கள் அனைவருடனும் சேர்ந்து, நான், என் துணைவியார் வசந்தா, என் உதவியாளர் மணிகண்டன், அவருடைய துணைவியார் அகிலா நால்வரும் புறப்பட்டோம்!
அது ஒரு சின்னஞ் சிறிய ஊர். அந்த ஊரில், இந்த வீட்டில் இந்த இடத்தில்தான் திருமணம் நடந்தது, பிறகு சற்றுத் தள்ளி இருக்கிற இந்தத் திடலில்தான் பெரியார் பேசினார் என எல்லா இடங்களையும் எங்களுக்குக் காட்டினார்கள்!
அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர் ஒருவர், அந்தத் திருமணம் பற்றி எங்கள் ஊரில் ரொம்ப நாள் பேச்சு இருந்தது ! அய்யா மதியம் மூன்று மணிக்குப் பேசத் தொடங்கினாராம்! எட்டு மணிக்குப் பிறகுதான் கூட்டம் முடிந்திருக்கிறது என்றார். தாலி என்பது ஒரு அடிமைத்தனத்தின் சின்னம் என்பதை அன்று அய்யா விளக்கிப் பேசிய போது கேட்டுக் கொண்டிருந்த அந்த மணமக்கள், அங்கேயே தாலியைக் கழற்றி விடுவது என்று முடிவெடுத்து, அதே மாதிரிச் செய்திருக்கிறார்கள்!
இதனை ஒரு நிகழ்ச்சி என்று சொல்வதை விட, ஓர் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும். ஐந்தரை மணி நேரம் அய்யா பேசினார் என்பதை விட, அதனை அந்த ஊர் மக்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதே பெரிய வியப்பு ! அந்த உரையைக் கேட்டு மனம் மாறி, தன் தாலியை ஒரு மணப்பெண் கழற்றிக் கொடுத்திருக்கிறார் என்றால், அது அதையும் விட பெரிய வியப்பு என்று சொல்ல வேண்டும். எந்த அளவுக்கு நெஞ்சில் பதியும்படி எளிமையாகவும், விளக்கமாகவும் பெரியார் பேசியிருப்பார் என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க முடிகிறது!
இப்போது அந்த ஊருக்குச் செல்வதற்குச் சாலைகள் இருக்கின்றன. ஆனால் 1949 ஆம் ஆண்டும், அதன் பிறகு அவர்களின் மூத்த மகள் தேன்மொழி திருமணத்தை நடத்தி வைக்க 1967 ஆம் ஆண்டும், பெரியார் அந்த ஊருக்கு வந்தபோது சரியான சாலைகளே இல்லை. மாட்டு வண்டியில் பெரியார் வந்திருக்கிறார். ஓரிடத்தில் அந்த வண்டி, கொஞ்சம் சேற்றுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. அப்போது கழகத்தின் தொண்டர்கள், அப்படியே அந்த மாட்டு வண்டியைத் தூக்கி கொண்டு வந்து, கரையில் சேர்த்து இருக்கிறார்கள்.
அன்று அந்த ஊரில் பெரியார் நடத்தி வைத்த மணமக்களுக்கு பிறந்த இரண்டாவது மகள் தேன் அருவி மற்றும் அவர் கணவருடன் நானும் துணைவியாரும் ஒரு படம் எடுத்துக் கொண்டோம். பெரியார் பேசிய இடத்தில் நின்றும், நாங்கள் அனைவரும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டோம்!
யார் இவர்கள், ஏன் இந்த இடத்திற்கு வந்து புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர் என்று அந்த ஊரிலேயே வாழும் பலருக்குக் காரணம் தெரியவில்லை!
வரலாற்றின் பல நிகழ்வுகள் இப்படி மறைந்தும், புதைந்தும் கிடக்கின்றன! தோண்டி எடுத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். அய்யா பெரியார் அவர்களைப் போன்ற தலைவர்களின் உழைப்பும், வியர்மையும் காற்றில் கரைந்து போய்விடக்கூடாது !
அன்புடன்
- சுப.வீரபாண்டியன்.