ஆயிரத்து எழுபதாம் ஆண்டுகளில் ஐந்தீவு நாடுகள் எனப்படுகின்ற ஐந்து நீர்சூழிகளைக்கொண்ட நாடுகள் தத்தம் இனக்குழுவினரோடு வாழ்ந்து வருகின்றன. பெருஞ்சாத்தி, மண்டகம், வெண்மலை, முக்காடு, அரத்தி (நினைவிலிருந்து எழுதுகிறேன்) ஆகிய அவ்வைந்து நாடுகளில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு.
ஒவ்வொரு நாட்டுத் தலைமையகமும் இயற்கை எழில்சூழ்ந்த மலைமுகடுகளில் இன்கா பழங்குடிகள் வாழ்ந்த மச்சுபிச்சு வடிவத்தில் இருக்கின்றன. அவற்றைக் கைப்பற்ற உரோமானியக் கலங்கள் வருகின்றன. அந்நீர்சூழி நாடுகளில் முதன்மையானது பெருஞ்சாத்தி அரசு. அந்நாட்டுத் தலைவனின் மகன் கங்குவன். அவனைக் கங்குவா, கங்கா என்று ‘உரக்கக் கத்தி’ அழைக்கிறார்கள். மறவலியன். நாட்டுக்குடிகட்குப் போர்ப்பயிற்சி அளிப்பவன். அனைத்திலும் வல்லான்.
உரோமானியப் படையிடம் பொற்காசுகளுக்கு விலைபோய் நாட்டினைக் காட்டிக்கொடுக்கும் வஞ்சகத்தில் இறங்குகின்றனர் இருவர். பெருஞ்சானத்திக் குடியொருவன், அதற்குத் தூண்டும் அரத்திக் குடியொருவன். நூறு நூறுவராகக் கூட்டிவந்து கொல்லும் முயற்சியில் இறங்குகின்றனர் வஞ்சகர் இருவரும். இரண்டாம் முயற்சியில் வஞ்சகர் முயற்சி கண்டறியப்பட்டுப் பிடிபடுகின்றான். அந்தப் பிடிபாட்டிற்கு ஒரு போர் நடக்கிறது.
அவனை நாட்டிற்கு அழைத்துச் சென்று வஞ்சகத்திற்குத் தண்டென மக்கள் சூழத் தீயிட்டுப் பொசுக்குகின்றனர். ‘குடும்பத்தோடு தீயிடு’ என்று குழாத்தின் முடிவு. தன் மகனைக் கங்குவனிடம் ஒப்படைத்துவிட்டு அழலேறுகிறாள் வஞ்சகனின் மனைவி.
அந்தச் சிறுவனுக்கு அந்நாட்டில் எல்லாப் பயிற்சியையும் அளிக்கிறான் கங்குவன். இருவரும் செல்கின்ற ஒரு நிலையில் தமக்கு நேரும் கொல்முயற்சியில் அச்சிறுவனே கங்குவனைக் கொல்ல மாரில் வாள்பாய்ச்சிவிடுகிறான். அவனே தன்னைக் கொல்லலாம் என்றும் அதற்கும் முன்பாக நாட்டைக் காப்பாற்றும் கடமை ஒன்றுண்டு என்றும் அதனை நிறைவேற்றிய பிறகு தன்னைக் கொன்றுவிடு என்றும் சிறுவனிடம் வாக்குத் தத்தம் தருகிறான் கங்குவன்.
நாடு திரும்புகையில் வாழ்குடிகள் அச்சிறுவன்மேல் கற்களை எறிகின்றன. அக்கற்களுக்குத் தடுப்பாகி சிறுவனைக் காக்கிறான் கங்குவான். வெறுமனே விடமுடியாதென்று அச்சிறுவனைப் புலிக்காட்டில் ஏகச்செய்யும் முடிவினைக் குடிக்கூட்டம் எடுக்கிறது. கங்குவனும் சிறுவனோடு சென்று பழகுகையில் சிறுவற்கு வெம்மை தணிகிறது.
கங்குவன் இல்லாமையால் பெருஞ்சாத்திப் பெண்குழாத்தைப் பிணைபற்றும் முயற்சியில் பகைவர்கள் ஈடுபடுகிறார்கள். அங்கே பிணைபடு நிலையில் சங்கெடுத்து கங்குவனை அழை என்று நெரிக்கின்றனர் தெவ்வர்கள் (பகைவீரர்கள்). சங்கோலம் வழியாகப் பெண்களும் கங்குவனும் காடுதாண்டி உரையாடுகின்றனர். “அவர்கள் பதினைவர். நீங்களோ முப்பதின்மர். அடித்துக்கொல்லமாட்டீர்களா ?” என்பதுதான் கங்குவனின் செய்தி. கங்குவன் வழங்கிய போர்ப்பயிற்சியின் முதன்மை மறத்திகளான அப்பெண்கள் அரத்தித் தெவ்வர்களைத் தவிடுபொடி ஆக்குகின்றனர்.
இவற்றிடையே அரத்தி நாட்டு அரசன் உரோமானியரோடு சேர்ந்து படைநடத்தி கங்குவனின் நாட்டு மேலாண்மையைத் தகர்க்கத் துணிகிறான். கங்குவனைக் கொல்வதற்காக அரத்தி மன்னனின் இளவரசர்கள் இருவரும் செல்கின்றார்கள். அந்தப் போரில் அரத்திய இளவாடிகளைக் கங்குவன் கொன்று திருப்புகிறான். தம்மக்கள் வெறுமெய்யாய் உயிரற்றுத் திரும்பியதைக் கண்டதும் அரத்தியன் வெஞ்சினம்கொண்டு இறுதிப் போரைத் தொடுக்கிறான்.
தாங்கள் நினைத்தவற்றுக்கு மாறாகவே கொடுந்திக்கில் எல்லாம் செல்கின்றன என்பதால் உரோமானியர் தலைவன் அரத்தியனிடம் தங்களை விடுபடுத்தவும் பொற்காசுகளைத் திருப்பியளிக்கவும் வேண்டுகிறான். “எம்மக்கள் இறந்துவிட்ட பிறகு இனி அது உன்போரில்லை. என்போர்” என்று அறிவிக்கும் அரத்தியன் உரோமானியர் தலைவனைக்கொன்று அவன் படைகளையும் கலங்களையும் எடுத்துக்கொள்கிறான்.
இந்தக் காட்சிகள் யாவும் பத்தாம் நூற்றாண்டில் நடந்துகொண்டிருக்கின்றன. இவற்றிடையே நிகழ்காலத்துக் காட்சிகளாக கோவாப் பட்டினத்தில் காவல்துறைத் தலைவர் ஒருவர் சில்வண்டாடிகளாய்த் திரியும் இளைஞன், இளைஞி ஆகிய இருவரையும் பயன்படுத்தித் தாம் பிடிபடுத்தவேண்டிய குற்றவாளிகளைச் சிறைப்படுத்துகிறார். அவ்விளைஞனும் இளைஞியும் முன்னாள் காதலவர்கள். இந்நாள் ஊடலவர்கள்.
முதற்காட்சியில் உருசிய ஆய்வகம் ஒன்றில் மூளை நரம்புகட்கு ஆற்றலூட்டும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட சிறுவன் ஒருவன் சிறைதப்பி எப்படியோ கோவாப் பட்டினத்திற்கு வந்துவிடுகிறான். காவல்தலைவர் புதிய செயல்திட்டமாகப் பெரும்போக்கிரி ஒருவனைப் பிடிக்க உதவக் கோருகிறார். அம்முயற்சியில் ஈடுபட்டது யாரென்று அவன் தமையனுக்குத் தெரிந்துவிட்டால் கொல்ல வருவான். அத்தகைய இடர்கோளுடையது அம்முயற்சி எனினும் இளைஞனும் இளைஞியும் துணிந்து இறங்குகின்றனர்.
போக்கிரியைப் பிடிக்க நடந்த கொலையில் அவ்விடத்தே புதிதாய்த் தோன்றும் சிறுவன் ஒருவன் இளைஞனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறான். கொலையில் மறைபதிவன் காட்சிகளைத் தாம் அழித்துவிட்டதாகவும் ஆட்சான்றாய்ச் சிறுவன் ஒருவன் பார்த்திருக்கிறான் என்றும் இளைஞனிடம் தெரிவித்துவிடுகிறார் காவல் தலைவர். ‘அச்சிறுவனைக் கையாண்டுகொள்’ என்பது அவரது அறிவுரை.
கொலைச் செயல் பரிசுகளைத் தானே பெறவேண்டும் என்ற வேட்பில் அப்பெண் தன் காதலனுக்குக் கைக்கட்டு போட்டுவிட்டு அகலும் வேளையில் அச்சிறுவன் இளைஞனைக் காண்கிறான். சிறுவனைத் தேடி உருசியப் படை வீரர்கள் அவ்விடத்திற்கே வந்துவிடுகின்றனர். அவர்கள் சிறுவனைத் தூக்கிக்கொண்டு செல்கிறார்கள். அச்சிறுவனின் ஆழ்ந்த பார்வையால் முன்னம் செய்த வினைநினைவுகள் தூண்டப்படும் இளைஞன் உருசியர்களைத் துரத்திக்கொண்டு செல்கிறான்.
வானூர்தியகத்தில் கிளம்புவதிலிருந்து வானத்தில் பறப்பதுவரைக்கும் ஆட்போர். விசைக்குண்டுத் துளைப்புகள். அவ்விளைஞனும் சிறுவனுமே முற்காலத்தில் கங்குவனும் சிறுவனுமாவர்.
நிகழ்காலத்தில் வானூர்திச் சண்டை நடக்க நடக்க, கங்குவனுக்கும் அரத்தி மன்னனுக்குமிடையே கடலிடையே கலமொன்றில் பெருமழைக்கு நடுவே பெருஞ்சண்டை நடக்கிறது. சிறுவனைப் பிணைபற்றிய அரத்தியனுக்கும் கங்குவனுக்கும் அடிதடிப்புரளல். கலத்தின் எல்லா மரக்கட்டைகளும் தும்பு தும்பாய்ப் பெயர்ந்து வந்து முத்திரட்சிக் கண்ணாடிக்குள் விழுகின்றன. போரில் அரத்தியன் இறக்கிறான்.
அரத்தியன் வெறுமெய்க்குத் தீமூட்டும் உரிமையில் இளவரசர்கள் இல்லை என்னும்நிலை. அரத்தியனின் மணந்தாண்டிய பெண்ணுறவில் பிறந்து தள்ளிவைக்கப்பட்ட கொடிய மகனொருவன் அவ்வுரிமை தனக்கேயென்று தீவட்டியை ஏந்துகிறான். மேடைமீது அரசிருக்கை தென்படுகிறது. அதனை நோக்கிச் செல்கையில் மக்கள் குழாம் எதிர்த்துக் கூக்குரலிடுகிறது.
“தந்தை செத்ததால் அரசிருக்கை எனக்குரியது, ஆனால் தந்தையின் பகையொன்று மீதமிருப்பது. தந்தையைக் கொன்றவனைக் கொன்றுவிட்டுத்தான் அமரும்போதுதான் அது முற்றிலும் எனக்குரியது” என்றதும் மக்கள் மகிழ்ந்து வெறிக்கூச்சல் இடுகிறார்கள். தம் பகை வென்றுதர வந்துவிட்டான் என அவனைத் தம் ‘ஐ’ என ஏற்கின்றனர்.
படம் முடிகிறது.
இனி படத்தைப் பற்றி…
(1). இப்படத்தைப் பற்றிப் பரப்பப்பட்ட எதிர்மொழிகள் பலவும் மிகை.
(2). தமிழில் ஏன், இந்திய அளவில்கூட, வெளிவந்த முத்திரட்சிப் படங்களில் இப்படத்தினளவுக்குக் காட்சியின்பம் தந்த படம் வேறில்லை.
(3). ஒரு திரைப்படமாக அளப்பரிய உள்ளடக்கச்செறிவு கொண்ட படம்.
(4). தமிழைத் தொன்மக்கள் பேச்சுமொழியாக உருவாக்கியுள்ளனர். எடுத்துக்காட்டாக அழைப்பதற்குச் ‘சே’ என்ற விளியைப் பயன்படுத்துகின்றனர். அதனை விளங்கிக்கொள்வதற்குச் சுவைஞர்திரள் முயலவில்லை.
(5). உரையாடல்களில் செந்தமிழைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய புதிய வரலாற்றுத் தன்மை மிக்க பெயர்ச்சொற்களை ஆக்கி ஆண்டுள்ளனர். “மண்தொடா, மண்டியிடா ! எதிர்கொள்வோம் எதிரிகொல்வோம்” என்று சொற்றொடர்கள் செல்கின்றன. ஈராயிரக் குழவிகட்கு அவை எப்படி எட்டும் ? கொட்டும்.
(6). ஒவ்வொரு சொல்லின் ஈற்றிலும் நெடில்நீட்டம் பெற்று ஒலிக்கின்றனர். “வாஆஅஅஅஅஅஅ” என்று நெடுங்கணக்கில் கத்துகின்றனர். ஒட்டுமொத்தப் போர்க்குரலாக நீட்டொலியைப் பயன்படுத்தியுள்ளதால் எல்லாரும் ‘கத்துவதாகத்’ தெரிகிறது.
(7). இசையமைப்பாளர் சில தொன்மை இசைக்கருவிகளை, ஒலிகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வேறுபாடு ஊன்றிக் கவனிக்கத்தக்கது.
(8 ). ஒவ்வொரு சுடுவையும் எப்படிக் கற்பனை செய்தனர், கட்டமைத்தனர், திரையில் கொண்டுவந்தனர் என்று வியக்குமளவுக்கான கூட்டுழைப்பு.
(9). இணைய ஊடகங்கள் எவ்வளவு எளிதில் வெறுப்பை விதைத்துவிடும், ஒன்றை விதைமுளைப்பிலேயே கருக்கிவிடும், ஒருவர் எத்தகைய கும்பல் ஏளனத்தாரிடையே தத்தளிக்க நேரும் என்பதனை அறிவதற்காகவே இப்படத்தைப் பார்க்கலாம்.
(10). அனைத்திற்கும் மேலாக ஒரு பெயர் இந்தப் படத்தால் மாழையென ஒளிரவேண்டியது. சூர்யா !
- கவிஞர் மகுடேசுவரன்