மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

1 view
Skip to first unread message

Tholkappiyan Vembian

unread,
Feb 20, 2024, 6:31:01 AMFeb 20
to freeians
மனதைக் கவனி - இப்படி எளிமையாகவும் புரிந்து கொள்ளலாம் - 1

"மனம் ஓடுவதைத் தடுத்து நிறுத்த முயல வேண்டாம். மனம் உயரப் பழகுவோம்." - டாக்டர் மு.வ.

"மனதைத் தள்ளி நின்று வேடிக்கைப் பார்க்கக் கற்றுக் கொள்வோம்." - டாக்டர் மு.வ.

உடலை நாம் எப்படி அணுகுகிறோமோ அதே போல் மனதையும் அணுகுவதே மெய்யுணர்வின் சாரம் (the essence of spirituality) என்று சொல்லலாம்.

எடுத்துக்காட்டாக, உடலுக்குள் என்ன உணவு போகிறது என்பதில் நமக்கு விழிப்புணர்வு உள்ளது. முழுமையாக இல்லாவிட்டாலும் குறைந்த அளவாவது உள்ளது. ஆனால் அதே போன்ற விழிப்புணர்வு நம் மனதுக்குள் என்ன போகின்றது என்பதில் உள்ளதா? பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.

உடலை மனதைக் கொண்டு ஆளுகிறோம். முறையான உணவு கட்டுப்பாட்டிலோ, உடற்பயிற்சி செய்வதிலோ, பல் விளக்குவதிலிருந்து குளிப்பது, நோய் வராமல் தடுக்க முயல்வது, வந்தால் அதற்கு உரிய மருத்துவம், ஓய்வு கொடுப்பது என்று உடலைப் பராமரிப்பதிலோ நாம் மனதைப் பயன்படுத்துகிறோம்.

ஆனால் மனதை ஆள எதைப் பயன்படுத்துவது? மனதையே தான் பயன்படுத்த வேண்டும். வேறு வழியில்லை. வேறு கருவி இல்லை.

உடலை ஆள மனதைப் பயன்படுத்துவதே பெரிய சவாலாக உள்ளது.

ஆங்கிலத்தில் "The spirit is willing but the flesh is weak" என்ற சொல்வழக்கு உள்ளது.

என்றால் மனதை ஆள மனதைப் பயன்படுத்துவது மாபெரும் சவால்தானே.

சினம் இறக்க கற்றாலும் சித்தியெல்லாம் பெற்றாலும் 
மனம் இறக்க கல்லார்க்கு வாயேன் பராபரமே - தாயுமானவர்

இங்கு 'மனம் இறக்க' என்பதை 'மனதை ஆள' என்று புரிந்து கொள்வது தான் சரி. மனதை அதாவது எண்ண ஓட்டத்தை முற்றிலும் நிறுத்தி விடுவது சமாதி. அதைச் சாதிக்க முடிந்தாலும் அப்படியே இருந்து விட முடியாது. அதிலிருந்து வெளிவந்துதான் ஆக வேண்டும். எண்ண ஓட்டம் முன்பு போல் ஆரம்பித்து விடும்.

மனதைக் கவனிப்பது என்பது நமக்குத் தெரியாத புதிய வித்தை அன்று. எனக்கு கடுங் கோபம் வந்து விட்டது. எனக்கு அவமானமாகப் போய் விட்டது. நான் பெருமகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் பாராட்டியது எனக்குப் பெருமையாக இருந்தது. அதைச் செய்து முடித்தது எனக்குப் பெருமிதமாக இருந்தது. எனக்கு இருமனமாக இருக்கிறது. ஒரே குழப்பமாக இருக்கிறது. இப்படி எல்லாம் நாம் சொல்வது எதைக் காட்டுகிறது? நம் மனதை நம்மால் கவனிக்க முடிகிறது என்பதைத்தானே.

ஆனால் அப்படிக் கவனிப்பது உடனுக்குடன் இல்லாமல் பொதுவாக அம்மனநிலையைக் கடந்த பின்பே தெரிவதாக உள்ளது. குழப்பம், தயக்கம் போன்றவற்றை அவை இருக்கும் போதே நம்மால் கவனிக்க முடிகிறது.

இப்படித் தானியக்கமாக (automatically / involuntarily)  மனதைக் கவனிப்பதைச் சுய உணர்வுடன் (conscious attention) அவ்வப்போதே கவனிக்க முடியமா?

முயற்சி செய்தால் தானே முடியும் முடியாது என்பது தெரியும். அதிலும் எந்த அளவுக்குத் தெளிவு, உறுதியுடன் முயற்சி செய்கிறோம் என்பதும் முக்கியமல்லவா? ஏனோ தானோ என்று முயற்சி செய்து விட்டு இதெல்லாம் புரட்டு, ஏமாற்று வேலை, யாராலும் முடியாது என்று தீர்ப்பு சொல்லலாம். அது அவரவர் இயல்பு. 

அவர்களைக் குறை சொல்வதோ அவர்களை எடை போடுவதோ அவர்களின் அங்கீகாரத்தை எதிர்பார்ப்பதோ நமக்கு அவசியமில்லை. அவர்கள் சொல்வதை வைத்து, இது போன்றவற்றில், நாம் முடிவு செய்வது நம் சுய மரியாதை அன்று.

இதை எழுதுவதால் மனதைத் தொடர்ந்து கவனிப்பதில் முழு நேர வெற்றி பெற்று விட்டேன் என்று நினைத்து விடக் கூடாது. ஆனால் இதை எழுத எனக்குத் தகுதி இருக்கிறதா?

நிச்சயமாக இதை உபதேசிக்க எனக்குத் தகுதி இல்லை. ஆனால் பின்பற்றி ஓரளவு பலன் கண்டவன் என்பதால் நட்பு முறையில் பகிர்ந்து கொள்ளத் தகுதியுள்ளது.

பிறர் படிக்க வேண்டும், பின்னூட்டம் தர வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருக்கக் கூடாது. அது அவரவர் உரிமை. ஒரு வகையில் இவை போன்றவற்றை அவர்கள் மனதிற்குள் அனுமதிப்பதா என்று முடிவு செய்வதே இப்பகிர்வின் படியாகும், படித்து விட்டோ அல்லது படிக்காமலோ.

சுய உணர்வுடன் மனதைக் கவனிப்பது என்றால் என்ன?

இரண்டு மணி நேரம் போல் திரைப்படம் பார்க்கிறோம். அதில் வரும் காட்சிகளில் மனதைப் பறி கொடுக்கிறோம். ஆடல், பாடல், மகிழ்ச்சி, சோகம், நகைச்சுவை, காதல், பாசம், வேதனை, அச்சம், ஆபத்து என எல்லா உணர்ச்சிகளிலும் திளைக்கிறோம். ஆனால் ஒரு விநாடி கூட நாம் பார்ப்பவை அத்தனையும் உண்மையல்ல என்பதை நாம் மறப்பதில்லை. அதே சமயம் நினைப்பதும் இல்லை, அதாவது 'நான் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறேன், இவை எல்லாம் நடிப்பு, உண்மையல்ல' என்று வாய் வார்த்தையாக, எண்ணமாக மீண்டும் மீண்டும் நினைத்துக் கொண்டிருப்பதில்லை, நமக்கு நாமே மனதிற்குள் சொல்லிக் கொண்டிருப்பதில்லை. ஆனால் அவ்வுண்மையை, அதாவது அது திரைப்படமே, நிஜமன்று என்ற உண்மையை மறப்பதும் இல்லை.

நினைப்பதும் இல்லை. மறப்பதும் இல்லை. இது என்ன புதுக் கரடி என்று என்று கேட்கலாம். புதுக் கரடியோ பழைய கரடியோ, இது சரியா என்று அவரவர் யோசித்து முடிவு செய்து கொள்ளலாமே.

இதே போல் மனதைக் 'கவனிக்காமல்' கவனிக்க முடியுமா? அதாவது ஓர் எண்ணம் தோன்றும் போது, இந்த எண்ணம் எனக்குத் தோன்றுகிறது என்று அதைப் பற்றி நினைக்காமல் கவனிக்க முடியுமா? அப்படித் தோன்றும் அந்த எண்ணத்தையும் கவனிக்க முடியுமா?

(தொடரும்...)




Virus-free.www.avg.com

Tholkappiyan Vembian

unread,
Feb 20, 2024, 6:40:02 AMFeb 20
to freeians
நண்பர்கள் லோகேஷ், தேவராஜ் கொடுத்த, என் எழுத்தில் ஆங்காங்கு வாக்கியங்களுக்கு இடையில் அடைப்புக்குறிக்குள் கூடுதல் விளக்கங்களை எழுதுவது படிப்பின் ஓட்டத்திற்குத் தடையாக உள்ளதால் தவிர்ப்பது நல்லது என்ற ஆலோசனையின் படி இதை எழுதியுள்ளேன். அவர்கள் ஆலோசனைக்கு நன்றி. அவ்வண்ணம் இவ்வாக்கம் படிக்க எளிமையாக இருக்கிறதா என்பது குறித்துப் பின்னூட்டத்தை வரவேற்கிறேன்.

--
You received this message because you are subscribed to the Google Groups "freeians - விடுதலைகள்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to freeians+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/freeians/646728156.7244570.1708428513198%40mail.yahoo.com.
Reply all
Reply to author
Forward
0 new messages