பெரியாரும் அடிகளாரும்

0 views
Skip to first unread message

rangasamy rajaraman

unread,
Jul 12, 2024, 12:14:43 PM (10 days ago) Jul 12
to freeians - விடுதலைகள்

திராவிட ஆதீனம் குன்றக்குடி அடிகளார்.

தஞ்சை நிலமும், காவிரிக்கரையும் தமிழ் உலகத்திற்கு கொடையளித்த ஆளுமைகளின் பட்டியல் பெரியது. எழுபது ஆண்டு கால வாழ்வில் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் தமிழுக்கும், தமிழர்க்கும், அவர்தம் இறை நெறிக்கும் தொண்டு செய்து புகழ் சேர்த்த தவத்திரு குன்றக்குடி அடிகளாரும் அந்த பட்டியலில் ஒருவர்.

திராவிடர் கழகத்திலிருந்து எப்போதேனும் சைவ மடாலயங்கள் குறித்து வருகிற அறிக்கைகளில், "திராவிட ஆதீனங்கள்" என்று அவை குறிக்கப்பட்டிருப்பதை பார்க்கலாம். ஒரு இறை மறுப்பு இயக்கம் தன்னுடைய அரசியல் சொல்லைக்கொண்டு ஆன்மீக மடத்தை குறிப்பிடுவது, அரசியல் ஆச்சர்யங்களில் ஒன்றாக தெரியும். ஆனால் இன நலனை பிரதானப்படுத்தும் இந்த நுண் அரசியலை விளங்கிக் கொள்வதன் வழியாகத்தான் தமிழ்நாட்டின் ஒரு நூற்றாண்டு கால அரசியல் பண்பாட்டை நாம் புரிந்துகொள்ள முடியும்.

திராவிடர் இயக்கத்திற்கும் சைவ ஆதீனங்களுக்குமான தொடர்புக்கு நெடுங்கால வரலாறு உண்டு, அந்த உறவு ஆழ வேரூன்றி பலப்பட்ட காலமாக பெரியார் - அடிகளார் காலத்தை வரையறுக்கலாம்.

பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, தமிழ் - தமிழர் நலன் என்கிற அடிப்படைகளில் பெரியாரும் அடிகளாரும் இணைந்தனர். நாத்திகம் பேசுதல் பெரியாரின் உரிமை என்கிற அடிகளாரின் புரிதலையும், நாத்திகத்தை கடந்தது இன நலன் என்கிற பெரியாரின் தெளிவையும் கொண்டு அவர்களின் உறவுக்கு பாலம் அமைத்தது காலம். கருப்பு சட்டையை பெரியாரும் தவிர்க்கவில்லை, காவி உடையை அடிகளாரும் துறக்கவில்லை, அவரவர் நம்பிக்கைகளோடே தமிழின் பெயரில் ஒரே மேடையில் அமர்ந்து புது மரபை படைத்தனர்.

ஆதீனங்களின் பாரம்பரியத்தில் குன்றக்குடி அடிகளார் தனித்துவமானவர். இறுக்கமான சட்டகங்களுக்குள் சிக்காதவர். அதுவரையிலான ஆன்மீக மரபின் இறுக்கங்களை தளர்த்த முற்பட்டு வெற்றியும் பெற்றவர். சரியாக சொன்னால் அவருடைய முன்னோடிகளில் இருந்து மாறுபட்டு, தானே முன்னுதாரணமாகி நின்றவர். 

1925ல் பிறந்த அரங்கநாதன், தருமை ஆதீனத்தில் துறவுக்கு ஆட்பட்டு கந்தசாமி தம்பிரான் ஆனார். பின்னர் குன்றக்குடி திருமடத்தின் ஆதீன இளவரசரான போது, "அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்" என்ற திருப்பெயர் பெற்றார். குன்றக்குடி மடத்தின் நாற்பத்தி ஐந்தாவது குருமகா சந்நிதானமாக 1952ல் பொறுப்பேற்றபோது அவருக்கு வயது 27 தான். அந்த காலகட்டத்தில் புகழ்பெற்ற நாளிதழாக விளங்கிய "தமிழ்நாடு", "தவத்திரு குன்றக்குடி அடிகளார்" என்று அவரை அழைத்தது. தனித்துவமான ஆதீனமாக விளங்கிய அவருக்கு, தனித்துவமான அந்த பெயரே வரலாற்றில் நிலைத்தும்விட்டது.

சொல்லின் செல்வர் இரா.பி.சேதுபிள்ளை அவர்களிடம் திருக்குறள் கற்றார். சைவ மடத் தொடர்புகளுக்கு முன்பே தமிழின்பாலும், அதன் சமத்துவ இலக்கியங்களின் பாலும் பெரும் உவகை அவருக்கு இருந்தது. அதனுடைய விளைவாகவே மடத்தின் பொறுப்புகளுக்கு அவர் வந்தவுடன் திருக்குறள் வகுப்புகளை தொடங்கினார், தமிழ் விழா, பாரி விழா போன்றவற்றை மடம் நடத்த தொடங்கியது.

சமத்துவத்தையும், வாழ்வுக்கான அறங்களையும் தமிழின் இலக்கியங்களின் வழியாக உணர்ந்திருந்தார். அவருடைய பெரும்பாலான உரைகளில் வேதங்களும், புராணங்களும், மந்திரங்களும், ஆன்மீக மேற்கோள்களும் இருந்ததைவிட வள்ளுவரும், இளங்கோவடிகளும், கனியன் பூங்குன்றனும், பாரதியாரும், பாரதிதாசனும் இருந்தது அதிகம்.

ஆதீனத்தின் தலைமைக்கு வந்த முதல் ஆண்டிலேயே, காலங்காலமாக நடைமுறையில் இருந்த, ஆதீனகர்த்தரை பல்லக்கில் சுமக்கும் "பட்டினப்பிரவேச" முறையை ஒழித்துக்கட்டினார். மானுடநேய நோக்கில் அமைந்த இந்த மரபு மீறலே பின்னாளில் முன்னெடுக்கப்பட்ட எல்லா நெகிழ்வுகளுக்கும் தொடக்கமாக அமைந்தது. அவரை பின்பற்றி பல இடங்களில் பட்டினப்பிரவேச மரபு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. தருமை ஆதீனத்தில் மட்டும் தொடர்ந்த அந்த வழக்கத்திற்கு எதிராக, திராவிடர் கழகம் போராட்டம் அறிவித்தபோது சமரசம் செய்து வைத்து அதையும் முடிவுக்கு கொண்டு வந்தார். சமீபத்தில் புதிதாக பொறுப்பேற்ற தருமபுர ஆதீனம் பட்டினபிரவேசம் அறிவித்தபோது, திராவிடர் கழகத்தின் கோரிக்கையின் பெயரில் அது கைவிடப்பட்டது என்பதும் கவனங் கொள்ளதக்கது.

ஆலயத்தின் கருவறைக்குள் தமிழ் என்கிற கால கால கனவிற்கு வடிவம் கொடுத்தவர் அடிகளார். திரு. பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த காலத்தில், "திருக்கோயில்" என்கிற இதழின் ஆசிரியரும், மறைமலை அடிகளாரின் மாணவருமான திரு. ந.ரா.முருகவேள் அவர்களோடு சேர்ந்து தமிழில் அர்ச்சனை என்பதை வலியுறுத்தி நூல் ஒன்றை தயாரித்தார். அந்த நூலையும் அவர்களின் வாதங்களுக்கான ஆதரங்களாக மேலும் பல நூல்களையும் சேர்த்து, மொத்தம் 52 நூல்களை அன்றைய முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இந்த புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்ட அடுத்த வாரத்தில், தவத்திரு சாந்தலிங்க ராசமசாமி அடிகள், இளவழகனார், கழகப் புலவர் ப.இராமநாதபிள்ளை , மகாவித்வான் ச.தண்டபாணி தேசிகர், மகாவித்வான் சி.அருணைவடிவேல் முதலியார் என்று அன்றைய தமிழகத்தின் தலை சிறந்த அறிஞர்கள் பலரையும் சேர்த்து 63 பேரை, 12 கார்களில் அழைத்து சென்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதில் 63 என்பது 63 நாயன்மார்களையும், 12 என்பது 12 திருமுறைகளையும் குறிப்பதாக பின்னாளில் "மண்ணில் மனிதர்களும்" தொடரில் எழுதினார். அவருடைய முயற்சியின் விளைவாக அக்டோபர் 4, 1961 ல் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் பி.டி.இராசன் தலைமையேற்க, அடிகளார் முன்னிலை வகிக்க, பக்தவச்சலம் தொடங்கி வைக்க ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் ஆலயத்தின் கருவறையில் தமிழ் ஒலித்தது. தமிழக வரலாற்றில் இது ஒரு திருப்புமையம் என்ற போதும் பூரண வெற்றி அல்ல என்கிற வருத்தம் அவருக்கும் காலம் முழுக்க தொடர்ந்தது.

1983 ஆம் ஆண்டு தில்லை ஆலயத்தின் கருவறைக்குள் நுழைய தீட்சதர்கள் அழைத்தபோது, தமிழுக்கு இடமில்லாத ஆலயத்தின் வாயிலையும் மிதிக்க மாட்டேன் என்று அறிவித்தார். இந்த நிகழ்விலிருந்து, "பூரண வெற்றி அல்ல" என்கிற அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிந்துகொள்ளலாம்.

ஆலயத்தின் கருவறைக்குள் மொழிக்கு உரிமை கோரியதோடு மட்டும் நிற்காமல், பிறப்பு பாகுபாடின்றி அனைத்து சாதியினரும் அர்ச்சராகும், கருவறை சமத்துவத்திற்காகவும் பாடுபட்டார். 1967ல் தொடங்கப்பட்ட திருப்பத்தூர் தமிழ்ச் சங்கத்தில், அதே ஆண்டில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதில் தொடங்கி. 1968 ஆம் ஆண்டு ஆலயங்களில் நுழைய தாழ்த்தப்பட்டோருக்கு உரிமை கோரி இலங்கையில் உண்ணாவிரதம் மேற்கொண்டது, 1983ல் மடாதிபதிகள் மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்து ஒருவரை மடாதிபதியாக நியமிக்க முடியுமா என்று அதிரக்கேட்டது வரை அவருடைய பணி பெரியது.

கருவறைக்குள் சமத்துவத்தை, ஒரு மடாதிபதி சட்டமன்றத்தில் பேசிய வரலாற்றையும் அவரைக்கொண்டு தான் நாம் எழுத முடியும். 1969ல் தமிழ்நாடு சட்டமேலவைக்கு தி.மு.க அரசால் நியமிக்கப்பட்டவர், 1970ல் அனைத்து சாதியினரும் அர்ச்சராக வேண்டும் என்று சட்டமேலவையில் வலியுறுத்தி பேசினார். எதை யார் மூலம் பேச வேண்டும், யாரை எதிர்க்க யாரின் துணையை நாட வேண்டும் என்கிற திராவிட இயக்கத்தின் ஆழங்கால்பட்ட அரசியல் வியூகத்திற்கு இவையெல்லாம் சான்றுகள்.

தெக்கூரில் நேருவை அழைத்து பள்ளி சீரமைப்பு மாநாடு நடத்தியது, மத்திய அரசின் சேமநலக்குழு உறுப்பினராக பொறுப்பு வகித்தது, "குன்றக்குடி மாதிரி" என்கிற பெயரில் ஊரக மறுவாழ்வு திட்டங்களுக்கு இந்தியாவிற்கே வழிகாட்டியது என்று அதுவரையில் ஒரு மதகுருவிற்கு இருந்த எல்லா வரம்புகளையும் மறுவரையறை செய்யும் விதத்தில் சமூக பங்காற்றினார்.

இராண்டவது உலக தமிழ் மாநாட்டில், திருக்குறளை தேசிய நூலாக அறிக்க வேண்டும் என்று பேசியதில் தொடங்கி, வள்ளுவர் கோட்ட பணிக்குழுவில் கடமையாற்றியது வரையில் திருக்குறளுக்கான அவரது பணிகள் நீளும். எதை பேசினாலும் திருக்குறளை மேற்கோள் காட்டுவதை வழக்கமாகவே வைத்திருந்தார்.

பிறப்பால் மனிதர்கள் சமம் என்கிற வள்ளுவத்தை வழிமொழிந்து தான், "சாதிகளை சொல்பவர்கள் சழக்கர்கள்" என்று அப்பரடிகள் சொன்னதாக 1994ல் பேசினார், அதன் வழியே தமிழர்களின் வாழ்வை போலவே அவர்களுடைய இறையியலும் சமத்துவம் கொண்டது என்பதை கடைசி காலம் வரை வலியுறுத்தினார். 

ஜனநாயகத்தின் உள்ளடக்கமாக வள்ளுவர் சொன்ன, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்கிற உயர் நீதியை கனவு கண்டார். ஜனநாயகம் என்பது வாழ்க்கை முறை என்கிற அளவிற்கு மிகப்பெரிய அரசியல் புரிதலை மக்களுக்கு விதைக்க முயன்றார்.
மதுரை வானொலியில் சுதந்திர தினத்திற்கு உரையாற்றிபோது, "இன்று நம்முடைய ஜனநாயக நாடு மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு. ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை நண்பர்களுக்கிடையில் கணவன் மனைவிக்கிடையில் குடும்பச் சூழ்நிலையில் கடை வீதியில், ஊரில், நாட்டில், சட்டசபையில், பாராளு மன்றத்தில், எங்கும் ஜனநாயக மரபுகள் செழித்து வளர வேண்டும். சொல்வது சிலவாக இருக்க வேண்டும் பிறர் வாய் கேட்பது அதிகமாக இருக்க வேண்டும்.
ஜனநாயக வடிவம் போதாது ஜனநாயக உணர்வு தேவை. ஜனநாயக வாழ்க்கையின் மரபில் அலட்சியம் கூடாது." என்று அழுத்தாமாக வாதிட்டார்.

புராணங்களில் உள்ள நீதியை புறக்கணித்துவிட்டு அதன் நாயகர்களை வணங்கும் போக்கை எண்ணி வருந்தினார். புரணாங்களே கூட சண்டைகளை பற்றியே அதிகம் பேசிவிட்டன என்கிற விமர்சனத்தையும் முன்வைத்தார்.

"புராணங்களும் கூட, தெரிந்தோ தெரியாமலோ சண்டைகளை பற்றியே அதிகம் பேசிவிட்டன. கடவுள்களுக்கும், தேவர்களுக்கும் சண்டை. தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் சண்டை! மூன்று தேவர்களுக்கிடையில் சண்டை. இப்படி சண்டைகளைப் பற்றியே இந்தியா ஏன் சிந்தித்துக் கொண் டிருந்தது என்று தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்தச் சண்டைகளை மறப்பது அவசியம்." என்கிற அவருடைய வார்த்தைகளுக்கு பின்னுள்ள சிந்தனையை புரிந்துகொள்ள முற்படும்போது தான், மண்டக்காடு கலவரத்தை ஒட்டிய அமைதிப் பணியில் மீன் கூடையை சுமந்து சென்ற அவருடைய செயலை புரிந்துகொள்ள முடியும்.

கலவரத்தில் அமைதி திரும்ப வேண்டி ஒரு சைவ ஆதினம் மீன் கூடை சுமந்தார் என்பதை, இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் மதவெறி வேர் பிடித்து நிற்கும் நிலத்து மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஒருவகையில் பார்த்தால் தமிழ் சமூகத்தின் நல்லிணக்க உணர்வு குறித்து பேசுகிற எந்த பேச்சும் அடிகளார் பெயரின்றி நிறைவு பெறாது.

பெண் கல்வியை, பெண்களுக்கான உரிமையை பேசினார் என்பதையும் தாண்டி, பணிக்கு செல்லும் பெண்களின் வீட்டு பணிச்சுமை ஆண்களால் பகிர்ந்துகொள்ளப்பட வேண்டும் என்பது வரை வலியுறுத்தினார். இந்த குணத்தின் உயரமெல்லாம் மற்றொரு முகமையில் ஆன்மீக பணி செய்த சங்கராச்சாரியார்களின் குணங்களோடு ஒப்பிடும்போது தெளிவாக தெரியும்.

புத்தத்தை அன்பு நெறி என்று சொல்லிய சைவ ஆதீனமும் அவர் தான், மாடு என்பது செல்வமாக இருப்பதால் தான் அதற்கு ஆன்மீக அந்தஸ்து உள்ளதென இறுகிப்போன நம்பிக்கைகளில் தளர்வுக்கு முயன்றவரும் அவர் தான். இராமாயண "கூனி"யின் பாத்திரத்தை வஞ்சகம் என்கிற அளவில் பார்த்தவர்களுக்கு மத்தியில், அவள் அலட்சியம் செய்யப்பட்டதே அந்த வஞ்சக உணர்வுக்கு காரணம் என்று புதிய நீதி சொன்னவரும் அவர் தான்.

கூட்டுறவுத்துறை சீரழிவதை வருத்தத்தோடு பார்த்தவரும், ஜனநாயக சோசியலிசத்தை கனவு கண்டவரும், வளர்க உற்பத்தி ! மலர்க பொதுமை ! என்று பேசியவரும் கூட அவர் தான்.

ஆன்மீகம் என்பதே பழையவற்றை வலியுறுத்தி, புதுமைகளை நிராகரிக்கும் என்று நிலவுகின்ற போக்குக்கு மாறாக புதுமைகளை வலியுறுத்தியவர் அடிகளார்.

"எந்த ஒரு நாட்டிலும் மாற்றங்களை எளிதாக யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மாற்றம் என்பது வளர்ச்சிக்குத் தவிர்க்க முடியாதது. எங்கு மாற்றம் இருக்கிறதோ, அங்கு தான் வளர்ச்சி இருக்கும். எனவே மாற்றத்தை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்" 

இவ்வாறாக தன்னுடைய எங்கே போகிறோம் சொற்பொழிவில் குறிப்பிட்டவர். 

அதே தொடரில் அமைந்த வளர்ச்சி - மாற்றம் பொழிவில்

"பழமைவாதிகள் தான் தங்களுடைய அறியாமையை மறைத்துக்கொள்ள, புதிய சிந்தனையை, புதியவற்றை எதிர்ப்பர்" 

"படித்த ஸ்லோகங்களையும், கோசங்களையும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் வளர்ச்சி பாதிக்கும். அதனால் சாதி, சம்பிரதாய, மூடப்பழக்கங்கள் நிறைந்து வறுமையில் கிடந்துழலும் கூட்டமாக மக்கள் மாறுவர். இது நாட்டுக்கு நல்லதல்ல" என்று மாற்றங்களை இன்னும் அழுத்தமாக வலியுறுத்தினார். இவையெல்லாம் ஒரு மதகுருவின் சிந்தனையாக அன்றைக்கு வெளிப்பட்டவைகளுக்கு நேர்மாறானவை. மீறல், இன்னும் சொன்னால் புரட்சியும் கூட.

சமுதாய மேம்பாட்டில் ஆன்மீகத்தின் பங்கு என்கிற பொழிவில், "இன்று பெரும்பாலும் ஆன்மிகம் கடவுளைச் சார்ந்து கூட இல்லை. மதங்களைச் சார்ந்திருக்கிறது. மதங்களைக் கூட அல்ல-மத நிறுவன அமைப்புக்களைச் சார்ந்திருப்பதையே இன்று ஆன்மிகம் என்று தவறாகப் பலர் கருது கின்றனர். மதங்கள் தம்முள் முரண்பட்டே விளங்குகின்றன.
மதங்கள் அன்பை, சமாதானத்தை, சகோதரத்துவத்தைப் போதிப்பது உண்மையானாலும் இந்தப் புனிதக் கொள்கைகளை விட, மதம் என்ற அமைப்பு-நிறுவனம் இவற்றின் ஆதிபத்திய அக்கறை மதங்களுக்கு மிகுந்து விட்டது, ஆதலால் மதங்களின் பெயரால், சண்டைகள், கலகங்கள், கொலைகள் தோன்றுகின்றன, கல்லாடம் சமயப் பிணக்கை மறுக்கிறது"

மதங்களையும், மத நிறுவனங்களையும் மறுத்து பேசியது யாரோ ஒரு நாத்திகர் அல்ல. ஒரு ஆதீனத்தின் குருமகா சந்நிதானம். இதையெல்லாம் அவர் வாய்வார்த்தையாக மட்டும் பேசவில்லை. வாழ்நாளெல்லாம் செயல்படுத்த முயன்றார் என்பதற்கு அவர் வரலாறே சான்று. இத்தகைய சிந்தனைகள் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அதை கண்டித்து அவரை பேச வைத்தது.

சடங்குகள் பற்றி பேசும்போது, சடங்குகளால் விளையும் பலன் யாதொன்றுமில்லை. ஆனால் உணர்வை தூண்ட சடங்குகள் பயன்படும் என்கிறார். அவர் மதத்தலைவர் என்கிற அடையாளத்தில் அகப்படாதவர் என்பதற்கு இவற்றையெல்லாம் தாண்டி சான்றுகள் தேவையில்லை. 

தமிழரின் ஆதி சமத்துவ பண்பாடே அவனது இறை நெறியும். மனிதர்கள் தான் அங்கே பிரதானம் மற்ற யாவையும் அதற்கு பின்னர் தான் என்கிற தத்துவத்தின் வடிவமாகவே வாழ்ந்தவர் அடிகளார்.

*அரசியல் தலைவர்களும் அடிகளாரும்*

அரசியல் தலைவர்களுடனான அடிகளாரின் உறவு இன்றைக்கு பெரிதும் பேசப்பட வேண்டிய ஒன்று.

அவர் சந்நிதானமாக தலைமையேற்ற காலம், இந்த மதத்தை முச்சந்தியில் இழுத்து கடுமையாக தாக்கிக்கொண்டிருந்தார் பெரியார். அறநெறி திருக்கூட்டமும், பின்னர் தமிழ்நாடு தெய்வீகப் பேரவையும் பெரியாருக்கு எதிரான செயல்பாடுகளையே தங்களுடைய பெரும்பகுதி வாடிக்கையாக கொண்டிருந்தன. திராவிடர் கழகத்திற்கும் ஆதீனத்திற்கும் மோதல் போக்கு கடுமையான காலமும் கூட இது. இந்த நிலையில் தான் 1954ல் பெரியாரோடு அடிகளாருக்கு சந்திப்பு ஏற்படுகிறது. ஈரோட்டில் யார் யாரை சந்திப்பது என்கிற கேள்வி எழுந்தபோது, பெரியார் சற்றும் தாமதிக்காமல் சந்நிதானத்தை நான் வந்து சந்திக்கிறேன் என்று போய் சந்தித்தார். சென்னியப்ப முதலியார் வீட்டில் நடந்த அந்த சந்திப்புக்கு பிறகு அவர்களுடைய பணிகளில் பெருமளவு மாற்றம் ஏற்பட்டது.  தமிழர் நலன் என்கிற இலக்கில் ஒருங்கிணையவும் தயங்காமல் செயல்பட்டார்கள். 1956 ஆம் ஆண்டு பொன்மலையில் பெரியார் பிறந்த நாள் மேடையில் இருவரும் ஒன்றாக மேடை ஏறினர். 1925 ஆம் ஆண்டு குடியரசை, திருப்பாதிபுலியூர் ஞானியாரடிகள் தான் தொடங்கி வைத்தார் என்கிற வரலாறு எல்லோருக்கும் தெரியும். அதேபோல விடுதலை பணிமனையை குன்றக்குடி அடிகளார் தான் திறந்து வைத்தார் என்பதும், தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் "விடுதலை" இருப்பது என்று விடுதலைக்கு புகழ்மாலை சூட்டினார் என்பதும் பெரிதும் பேசப்படாத செய்திகள்.

அடிகளார் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் கருப்புகொடி காட்டக்கூடாது என்றும், கடவுள் மறுப்பு உறுதிமொழி எடுக்கக்கூடாது என்றும் பெரியார் சொன்னவைகள் எல்லாம் தமிழர் அரசியல் பண்பாட்டின் பொன்னான பக்கங்களை நிறைக்கும் நிகழ்வுகள்.

"தமிழ்நாட்டில் இருபதாம் நூற்றாண்டில் சமுதாய மாற்றத்துக்கு உழைத்த பெருமை பெரியாருக்கு உண்டு. அவர் தமது வாழ்க்கையைத் தொடங்கிய காலத்தில் தேசபக்தர் தெய்வ பக்தியுடையவர். இதில் எத்துணையும் ஐயமில்லை.

வரலாறு உண்மைகளைப் பேசவேண்டும், பெரியார் தமது வளர்ச்சிப் போக்கில் சமுதாய சீர்கேடுகளை மனிதருக்குள் நிலவும் சாதி வேற்றுமைகளை, தீண்டாமையைப் பார்த்தார்; புழுங்கினார். வழக்கம்போல் இந்து மதம் நெகிழ்ந்து கொடுக்க மறுத்தது. 'இவையெல்லாம் கடவுளின் ஏற்பாடு-மாற்ற இயலாதது, மாற்றக்கூடியது அல்ல என்று சொல்லத்தொடங்கினர். பெரியாருக்குக் கோபம் வந்து விட்டது. "மனிதருள் சூத்திரனை, தாழ்த்தப்பட்டவனைப் படைத்து இழிவுபடுத்தும் கடவுள் வேண்டாம் என்றார்.
இதுதான் அவர் வந்த வழி! கூர்ந்து நோக்கினால் மாணிக்க வாசகர் அப்பர் அடிகளும், ராமானுசரும், வள்ளலாரும் வந்த வழி! அவர்கள் சாதி முறைகளை எதிர்த்தார்கள் என்பது உண்மை! ஆனால், பெரியார் மாதிரி போராடவில்லை தொடக்க காலத்தில் பெரியாரின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை நம்மால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை. ஆதலால், நமது வாழ்க்கையின் தொடக்கத்தில் எதிர்த்தோம் காலப்போக்கில் நடந்தது என்ன? அது யாருக்குத்தான் தெரியாது ?" என்று தான் பெரியாரோடு இணைந்து வரலாற்று பின்னணியை அவரே குறிப்பிடுகிறார்.

இன்னும் ஒருபடி மேலே போய், மாணிக்கவாசகரும் அப்பர் அடிகளும், ராமானுசரும், வள்ளலாரும் சொன்னவற்றை நாம் கேட்டிருந்தோமானால் பெரியாரே வந்திருக்க மாட்டார் என்று பெரியாரின் நாத்திகத்திற்கு நியாயம் சொல்லும் அளவுக்கு முற்போக்கு மணம் படைத்தவராய் இருந்தார் அடிகளார்.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னணியில் காங்கிரசின் நிர்வாக தோல்வி எப்படி பங்காற்றியது என்பதை அறிய, காங்கிரஸ் ஆட்சி கால நிதி மந்திரி சி.சுப்பிரமணியம் அவர்களின் சுயசரிதையை வாசிக்க வேண்டும் என்று தோழர் சுபகுணராஜன் அவர்கள் குறிப்பிடுவார்கள். அந்த காலகட்ட காங்கிரசையும் திமுகவையும் அறிய, அடிகளாரின் "மண்ணும் மனிதர்களும்" நூலும் கூட பயன்படும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஊர்வலம் போன அடிகளாரை, இரவோடு இரவாக கைது செய்ய பக்தவச்சலம் அரசு முற்பட்டதும், அதன் பின்னணியில் காங்கிரசின் கோஷ்டி பூசல் இருந்ததும் காங்கிரசின் நிலையை புரிந்துகொள்ள உதவும். அதேபோல காமராஜரிடம் அடிகளாரை திமுக ஆதரவாளர் என்று சொன்னபோது, அடிகளார் காங்கிரஸ் ஆதரவாளர் தான் ஆனால் அடிக்கடி தமிழ், தமிழர்னு பேசுவார் என்று காமராஜர் அளித்த பதில் குறித்து ஒரு குறிப்பு வருகிறது. அதை படிக்கிற போது 60களில் தமிழ், தமிழர் என்று பேசினாலே திமுக என்று எண்ணக்கூடிய சூழல் நிலவியதையும் அறிந்துகொள்ள முடியும்.

பெரியாரை தாண்டி அண்ணாவிடம் மிகப்பெரிய மதிப்பீடு அடிகளாருக்கு இருந்தது. அண்ணாவை நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் வருகிறது என்று நெகிழ்ந்தவர் அவர். கலைஞரோடு பல கட்டங்களில் இணைந்து பணியாற்றியவர். திமுகவும் அதிமுகவும் பிளவுபட்டபோது துடித்து போய் பெரியாரிடம் சமரசம் பேச வலியுறுத்தினார். அவர் இறந்தபோது கலைஞர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பதெல்லாம் வரலாறு.

தமிழ் சமூகம் கண்ட பண்பாட்டு மாற்றத்தில் அடிகளாரின் பங்கு தவிர்த்துவிட முடியாத அளவுக்கு ஆழமானது. இன்றைக்கும் திராவிட இயக்க தலைவர்கள் யாரை பற்றி சிறப்பு நூல் வெளியிட்டாலும், அதில் காவி உடுத்திய ஒருவரின் கட்டுரை இடம்பெற்றுவிடுகிறது. தமிழின் பெயரால் நடத்தப்படும் எந்த அரசியல் மேடையிலும் மாச்சார்யங்களை கடந்து ஆதீனங்கள் வந்து அமர்கிறார்கள். இவையெல்லாம் மதவாத அரசியல் சக்திகளுக்கு வேரில் அமிலம் வார்க்கும்
வேலையாகவே இருக்கிறது. இன்னும் சொன்னால் இந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ளவும் கூட அவர்களால் முடியவில்லை. இவை அத்தனைக்கும் விதை நட்டவர் அடிகளார்.

ஒரு நாடு எது குறித்து அதிகம் பேசுகிறதோ, அந்த திசையில் தான் செல்லும் அதனால் வளர்ச்சி குறித்து பேசுங்கள் என்று இந்துத்துவ அரசியல் அடர்ந்து விரிவடைய தொடங்கிய 90களின் தொடக்கத்தில் பேசியவர் அடிகளார். அவர் நேரடியாக அந்த சக்திகளை நோக்கி பேசவில்லை என்றாலும், இன்றைக்கு இருந்திருந்தால் கண்ணீர் வடித்திருப்பார். ஆனாலும் அந்த அடர்மேகங்கள் தமிழ்நாட்டில் சூழாமல் இருக்க அவருடைய பணியும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க வாய்ப்பில்லை.

மக்களோடு அந்நியப்பட்டே பழகிய மதத் தலைமைகளுக்கு மத்தியில், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று வாழ்ந்து நிறைந்தவர் அடிகளார்.

மதவாத சக்திகள் அரசியல் அதிகாரம் பெற்று, பண்பாட்டில் ஊடுருவும் ஒரு காலகட்டத்தில். தமிழ் - தமிழர் - தமிழ்நாடு என்று உழைத்து ஓய்ந்த அடிகளாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அடிகளார்களுக்கான தேவையை காலம் உணர்த்திக்கொண்டிருக்கிறது. அவரது பிறந்த நாளில் அவர் வாழ்வை புரட்டி பார்ப்பதன் வழி நாமும் கொஞ்சம் உணர முயல்வோம்.
Reply all
Reply to author
Forward
0 new messages