மூளையினை பற்றியும் அறிவு ஆற்றலினை பற்றியும் இரு பாலருக்கும் இடையே உள்ள
வேறுபாடுகள் பற்றியும் தவறான செய்திகளை செயற்கையாக இயற்கையின் மீது
சுமத்தி பெண்களை
மட்டம் தட்ட பல முயற்சிகள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன.
ஆண்களும் பெண்களும் மனித இனத்தின் இரண்டு இன்றியமையாத பகுதிகள்.
அடிப்படையான இரண்டு பகுதிகளுள் ஒன்றினை தாழ்த்தி ஒன்றினை சிறப்பாக்கி
அமைக்க இயற்கை விழையாது, இருப்பினும் மனித இனம் தனது விருப்பங்களை
இயற்கையின் உண்மைகள் என்று பறைசாற்ற என்றுமே தயங்கியதேயில்லை.
இவ்வகையான தவறான முயற்சிகள் நூற்றாண்டுகளை தாண்டி செழித்து வாழ்வதற்கு
முக்கிய காரணம் அவற்றினை ஏற்க மக்கள் தயங்காததே, இனி வரும் காலங்களில்
செயற்கையாக இயற்கையை பழிக்க நாம் அனுமதிக்க கூடாது.
குற்றங்களின் மீது குற்றம் சுமத்துவதை விட அறிவியலின் ஒளி கொண்டு பெண்கள்
தங்களை சூழ்ந்து உள்ள இருளினை தாங்களே அழிக்க முன்வர வேண்டும். ஒளி
பிரகாசமாக இருக்கும் நிலையினில் இருள் தானாகவே அகலும் மற்றும் அழியும்.
வரும் காலங்களில் தவறான செய்திகளை மனித இனம் களைய வேண்டும், ஏனெனில்
இவ்வாறான செய்திகளை ஏற்பது இயற்கைக்கு எதிரான செயலாகும்.
உணர்வை மையப்படுத்தி இந்த செய்தியினை காணுவதை விட , அறிவை மையப்படுத்தி
நாம் இனி காணுவோம். சைபர் தமிழ் சங்கம் தனது முயற்சியினை நிச்சயம்
செய்யும்.