இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா - நவம்பர் 9

328 views
Skip to first unread message

Amirtharaj Sundar

unread,
Nov 7, 2018, 11:33:11 AM11/7/18
to undisclosed-recipients
 

நவம்பர் 9

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

முன்னுரை

            பிரியமானவர்களே!

வணக்கம் மற்றும் நல்வாழ்த்துக்கள்.

தாயாம் திருஅவையின் தாய் பேராலயம் என்று அழைக்கப்படுகின்ற, உரோமையில் உள்ள லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு நாளை, நினைவு கூர்ந்து கொண்டாட அழைக்கப்படுகின்றோம்.

இதன் மூலம் நம்முடைய ஒன்றிப்பை உறுதி செய்திட திருஅவை அழைக்கின்றது. ஒன்றினைந்த மக்களாக மன்றாடுவோம்.

இறைவனது பிரசன்னம் வெளிப்படும் இடமாக ஆலயம் அமைகின்றது என்றும், உயிர்வாழும் ஆலயமாக நம்மிலும், அந்த இறைவெளிப்பாட்டை உணர்ந்து, வாழும் வரத்தை கேட்டுப் பெற்றுக் கொள்ளவும், பிறருக்கு அந்த இறைவனை வெளிக்காட்டும், சாட்சிகளாக இருந்திடவும் வரம் வேண்டுவோம். இறைவன் தம் ஆசீரால் நம்மை அர்ச்சித்து பலியின் பயனாக நம்மை புதுப்பிப்பாராக.

முதல் வாசக முன்னுரை (எசேக்கியேல் 47:1-2,8-9,12)

பாபிலோனியரால் நாடு கடத்தப்பட்ட யூத மக்களின் வாழ்க்கையும் உவர்ப்பு நிலையிலிருந்து இனிய நிலைக்கு மாறும் என்னும் நம்பிக்கைச் செய்தியை  இறைவாக்கினர் எசேக்கியேல் அறிவிக்கிறார். துன்பங்கள் பல அனுபவித்த மக்கள் இனிமேல் ஆறுதல் பெறுவர்; அன்பும் இரக்கமும் நிறைந்த கடவுள் நம்மை ஒருநாளும் கைவிடார் என்று  இறைவாக்கினர் எசேக்கியேல் எடுத்துரைக்கும் இன்றைய முதல் வாசகத்தை கேட்போம்.

முதல் வாசகம்

 நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன்.

இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து வாசகம் 47: 1-2,8-9,12

அந்நாள்களில் ஒரு மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது. அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார்.

இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது. அவர் என்னிடம் உரைத்தது: ``இத்தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும். இந்த ஆறு பாயும் இடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும்.

ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். பல வகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 46: 1-2,3உ. 4-5. 7-8 (பல்லவி: 4)

பல்லவி: ஆற்றின் கால்வாய்கள் ஆண்டவரின் நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன.

1 கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. 2 ஆகையால், நிலவுலகம் நிலை குலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், 3உ எங்களுக்கு அச்சம் என்பதே இல்லை. பல்லவி

4 ஆறு ஒன்று உண்டு, அதன் கால்வாய்கள் உன்னதரான கடவுளின் திரு உறைவிடமான நகருக்குப் பேரின்பம் அளிக்கின்றன. 5 அந்நகரின் நடுவில் கடவுள் இருக்கின்றார்; அது ஒருபோதும் நிலைகுலையாது; வைகறைதோறும் கடவுள் துணை அதற்கு உண்டு. பல்லவி

7 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார்; யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். 8 வாரீர்! ஆண்டவரின் செயல்களைக் காணீர்! அவர் உலகில் ஆற்றியுள்ள திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! பல்லவி

இரண்டாம் வாசக முன்னுரை (1 கொரிந்தியர் 3:9-11,16-17)

உயிர்பெற்றெழுந்த இயேசு தூய ஆவியின் வல்லமையால் கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் நடுவே வாழ்கின்றார் எனவும், இயேசுவை நம்புவோர் கடவுள் உறைகின்ற ''திருக் கோவில்களாக'' மாறுகின்றனர் எனவும் இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார் கூறுவதை கேட்போம்.

இரண்டாம் வாசகம்

 நீங்கள் கடவுளுடைய கோவில்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 9b-11, 16-17

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கடவுள் எழுப்பும் கட்டடம். கடவுள் எனக்கு அளித்த அருளின் படியே, நான் கைதேர்ந்த கட்டடக் கலைஞர் போல அடித்தளம் இட்டேன். அதன்மேல் வேறொருவர் கட்டுகிறார். ஒவ்வொருவரும் தாம் கட்டும் முறையைக் குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது.

நீங்கள் கடவுளுடைய கோவில் என்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 குறி 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

 தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-22

அக்காலத்தில் யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார். அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு, மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், ``இவற்றை இங்கிருந்து எடுத்துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்'' என்று கூறினார்.

அப்போது அவருடைய சீடர்கள், ``உம் இல்லத்தின் மீதுள்ள ஆர்வம் என்னை எரித்து விடும்'' என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவுகூர்ந்தார்கள். யூதர்கள் அவரைப் பார்த்து, ``இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?'' என்று கேட்டார்கள்.

இயேசு மறுமொழியாக அவர்களிடம், ``இக்கோவிலை இடித்து விடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்'' என்றார்.

அப்போது யூதர்கள், ``இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?'' என்று கேட்டார்கள்.

ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப் பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட போது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

          மன்றாட்டு

            பிரசன்னமாகும் இறைவனே! திருஅவையில் உம்முடைய பிரசன்னததை கண்டு, பணியாளர்கள், அதனை எடுத்துச் சொல்லும் அருட்பணியாற்ற, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            பிரசன்னமாகும் இறைவனே! எல்லாவற்றிலும், எல்லாரிலும் உம்முடைய பிரசன்னத்தை எம் பாரத மக்கள் காணவும், அதனால் சக மனிதரை மதித்து, ஏற்று வாழவும், அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            பிரசன்னமாகும் இறைவனே! கோவிலுக்கு தரும் முக்கியத்துவத்தைப் போல கோவிலுக்குள்ளும், வெளியேயும் உள்ள மனிதர்களில் உம் பிரசன்னத்தை கண்டு வாழ்த்திட அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            பிரசன்னமாகும் இறைவனே! ஓன்றுபட்ட திருஅவையை மனதிலே கொண்டு, திருஅவை முன்னெடுக்கும் எல்லா காரியங்களிலும் ஓத்துழைக்குமு; மனநிலை பெற்றவர்களாக வாழ, அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

            பிரசன்னமாகும் இறைவனே! கோவிலில் இருந்து புறப்படும் அருளை நிறைவாக பெற்று மகிழவும்ஈ அதனை பிறரோடு பகிர்ந்து வாழவும் அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

 
 

          "GOD IS LOVE"

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808 
Tirunelveli Dist
Tamilnadu
South India
BANNER1.JPG
pin_left.gif
pin_right.gif
puppy.gif
November 09.docx
மறையுரைச் சிந்தனை நவம்பர் 09 (2).docx
மறையுரைச் சிந்தனை நவம்பர் 09.docx
நவம்பர் 9.doc
நவம்பர் 9.pdf
Nov 09 Feast Fr. Maria.mp3
181109_Nov 09th Feast Readings.MP3
Nov 09 Saint of the Day.mp3
Reply all
Reply to author
Forward
0 new messages