ஆகஸ்டு 15 - மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா - திருநாள் திருப்பலி

669 views
Skip to first unread message

Amirtha Raja Sundar

unread,
Aug 13, 2016, 4:41:27 AM8/13/16
to undisclosed-recipients
 

ஆகஸ்டு 15

தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு பெருவிழா

திருநாள் திருப்பலி

முதல் வாசகம்

 பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது.

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 11: 19; 12: 1-6,10b

விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது: பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடுந்துயருடன் கதறினார்.

வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்பு மயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன. அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப்போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண், பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்றுகொண்டிருந்தது. எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது. அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: ``இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 45: 9. 10-11. 15 (பல்லவி: 9b)

பல்லவி: ஓபீரின் பொன் அணிந்து வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி!

9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் பட்டத்து அரசி! பல்லவி

10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! பல்லவி

15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும் போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். பல்லவி

இரண்டாம் வாசகம்

 கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 20-26

சகோதரர் சகோதரிகளே, இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்பட்டார். அவரே முதலில் உயிருடன் எழுப்பப்பட்டார். இது அனைவரும் உயிருடன் எழுப்பப்படுவர் என்பதை உறுதிப்படுத்துகிறது. ஒரு மனிதர் வழியாகச் சாவு வந்தது போல ஒரு மனிதர் வழியாகவே இறந்தோர் உயிர்த்தெழுகின்றனர்.

ஆதாமை முன்னிட்டு அனைவரும் சாவுக்குள்ளானது போலக் கிறிஸ்துவை முன்னிட்டு அனைவரும் உயிர் பெறுவர். ஒவ்வொருவரும் அவரவர் முறை வரும்போது உயிர் பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர் பெற்றார். அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.

அதன் பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம் செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்து விட்டு, தந்தையாகிய கடவுளிடம் ஆட்சியை ஒப்படைப்பார். எல்லாப் பகைவரையும் அடிபணிய வைக்கும் வரை அவர் ஆட்சி செய்தாக வேண்டும். சாவே கடைசிப் பகைவன், அதுவும் அழிக்கப்படும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! மரியா விண்ணகத்திற்கு எடுக்கப்பட்டார்; வானகத் தூதரணிகள் மகிழ்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

 வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார். தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 39-56

அந்நாள்களில் மரியா புறப்பட்டு யூதேய மலை நாட்டிலுள்ள ஓர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றில் இருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார்.

அப்போது அவர் உரத்த குரலில், ``பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

அதைக் கேட்ட மரியா பின்வருமாறு கூறினார்: ``ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது. என் மீட்பராம் கடவுளை நினைத்து எனது மனம் பேருவகை கொள்கின்றது. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இதுமுதல் எல்லாத் தலைமுறையினரும் என்னைப் பேறுபெற்றவர் என்பர். ஏனெனில் வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்.

தூயவர் என்பதே அவரது பெயர். அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். அவர் தம் தோள்வலிமையைக் காட்டியுள்ளார்; உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார். வலியோரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்; தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகிறார். பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்; செல்வரை வெறுங்கையராய் அனுப்பிவிடுகிறார்.

மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழிமரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார்; தம் ஊழியராகிய இஸ்ரயேலுக்குத் துணையாக இருந்து வருகிறார்.''

மரியா ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தோடு தங்கியிருந்த பின்பு தம் வீடு திரும்பினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

15 08 2011

அன்னை மரியின் விண்ணேற்புப் பெருவிழா - பாரதத்தின் சுதந்திரத் திருவிழா

அன்னை மரியின் விடுதலை நம் அனைவரின் விடுதலைக்கு முன்சுவை. நாமும் விடுதலை பெறுவோம். மண்ணுலகில் நாம் காணும் போராட்டங்கள் நிரந்தரம் அல்ல. மரியைப் போல வியாகுலங்களில் நிலைகுலையாமல் இருந்தால் விடுதலை மகிழ்வு நம்மை சாரும்.

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 15)

மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா

ஒரு தாய் தன்னுடைய ஒருமாதக் குழந்தையுடன் தரையில் பாய் விரித்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். அப்போது திடிரென்று கருநாகம் ஒன்று வாசல் வழியே வந்து அவர்களுக்கு முன்பாக படமெடுத்து நின்றது.

இதைப் பார்த்த அக்கம் பக்கத்து வீட்டார் எல்லாரும் பதைபதைத்துப் போனார்கள். ஒரு நிமிடம் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றார்கள். பின்னர் அவளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால் ஒரு நீளமான தடியை எடுத்து அவளைத் தட்டிப் பார்த்தார்கள். அப்போதும்கூட அவள் எழுந்திருக்கவில்லை. இறுதியாக ஒரு மல்லிகைப் பூவை எடுத்து குழந்தையின்மீது எறிந்தார்கள். அடுத்த நிமிடம் தன்னுடைய குழந்தைக்கு ஏதோ ஆயிற்று என்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவள், குழந்தையின் மீது விழுந்திருந்த மல்லிகைப்பூவை எடுத்து தூர எறிந்தாள். அதன்பின் தன் முன்னால் இருந்த பாம்பிடமிருந்து குழந்தையும், தன்னையும் எந்த ஒரு பதற்றமுமின்றிக் காப்பாற்றினாள்.

அக்கம் பக்கத்து வீட்டார் தன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டபோதும், தடியால் அடித்தபோதும்கூட எழாத தாய், தன்னுடைய குழந்தைக்கு எதோ ஒன்று நடக்கிறது என்றவுடன் எவ்வளவு பதறிப்போகிறாள்!. ஒவ்வொரு நொடியும் குழந்தையைப் பற்றியே நினைத்துக்கொண்டிருகிற ஒருதாயால் தான் இப்படிச் செயல்பட முடியும். இதுதான் தாயின் உண்மையான அன்பு.

இன்றைக்கு நம் மரியன்னைக்கு விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு  விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும்.

மரியன்னையின் விண்ணேற்பு விழா என்பது உலகிலுள்ள அனைத்துக் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களாலும் கொண்டாடப்படக்கூடிய ஒரு விழா.  இயேசுக்கிறிஸ்து தனது தாயாரை நம் அனைவருக்கும் தாயாக இவ்வுலகில் விட்டுச் சென்றார். “பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்ட தாய்”, “அருள் நிறைந்த பெண்மணி” என்று பெண்குலத்திற்கு மட்டுமல்லாது உலகத்தில் உள்ள தாய்மார்களின் பொக்கிஷமாக திகழ்பவள்தான் நம் மரியன்னை. எனவே அப்படிப்பட்ட அன்னையின் விழாவைக் கொண்டாடுகிற இவ்வேளையில் அவள் நமக்கு என்ன செய்தியைத் தருகிறாள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

            மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவது கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15 ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தந்தை முதலாம் நிக்கோலாஸ் (கி.பி.858- 867) இவ்விழா வரலாற்றில் என்றும் மறையாத அளவிற்கு திருவழிபாட்டில் ஊன்றச் செய்தார்.  திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் 1954 ஆம் ஆண்டில் அன்னை மரியாள் ஆன்மாவோடும், உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்றும், திருச்சபையின் போதனையை விசுவாச சத்தியம் என்றும் பிரகடனப்படுத்தினார். இதற்கு ஓர் இறையியல் அடிப்படையென்றால், “பாவமறியாத மரியாளை மரணம் எப்படித் தீண்ட முடியும்?” என்பதுதான். இதன்வழியாக அன்னை மரியாள் மரணத்தின் பிடியில் சிக்காமல் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்ற நம்பிக்கை வேரூன்ற ஆரம்பித்தது.

திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர், தனது சாசனத்தில், அன்னை மரியாளின் மரணம் பற்றி திட்டவட்டமாக எதுவும் கூறாமல் ‘தனது வையக வாழ்வு நிறைவெய்தியவுடன் மரியா விண்ணகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள்’ என்று மட்டும் குறிப்பிடுகிறார். மரியாள் இயேசுவை தமது உள்ளத்தில் ஏற்று, உதரத்தில் தாங்கி, அவருடைய உணர்வுகளோடு ஒன்றாகி, மீட்புத் திட்டத்தில் முழுமையாகத் துணை நின்றதால், அவள் இயேசுவின் உயிர்ப்பிலும் முதன்மையாக பங்கு பெறுவது தகுதியும் நீதியுமாகும். இது நாம் அனைவரும் பெறப்போகும் விண்ணக மகிமையின் முன்னாக்கமாகவும், முன்னடையாளமாகவும் இருக்கும்.

இன்றைய இரண்டாம் வாசகத்தில்கூட பவுலடியார், “இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பட்டது போன்று நாமும் உயிர்த்தெழுவோம்” என்று உறுதிபடுத்துகிறார். ஆக ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவை போன்று – அன்னை மரியாளைப் போன்று – இறைவனின் திருவுளத்தின் படி நடக்கின்ற நாம் ஒவ்வொருவருமே விண்ணக மகிமையைப் பெறுவோம் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை.

நற்செய்தி வாசகத்தில் அன்னை மரியாள் தான் இயேசுவைக் கருவுற்றிருந்த போதிலும், தன்னுடைய உறவினரான எலிசபெத் பேறுகால வேதனையில் தவிக்கிறார் என்பதை அறிந்து ஓடோடிச் சென்று உதவுகிறாள். தூய ஜெரோம் அன்னை மரியாளைக் குறித்துச் சொல்கிறபோது இப்படியாகச் சொல்வார், “அன்னை மரியாள் இந்த மண்ணுலகில் வாழ்ந்தபோது பிறர் படக்கூடிய துன்பத்தை தன்னுடைய துன்பமாகப் பார்த்தாள். மேலும் அத்துன்பத்தைக் களைய பெருதும் பாடுபட்டாள்”. ஆம் அன்னை மரியாள் பிறரின் துன்பத்தை தனது துன்பமாகப் பார்த்தார்.

மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 15)

மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா

பிரபல பிரஞ்சு எழுத்தாளரான விக்டர் பூகோ என்பவர் சொல்லும் நிகழ்ச்சி இது.

1700 களின் தொடக்கத்தில் பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். ஒரு தாயானவள் தன்னுடைய இரண்டு மகன்களோடு வீட்டிலிருந்து வெளியே தப்பித்து ஓடினாள். கலகக்காரர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அவள் ஒரு அடர்ந்த காடு வழியாகப் பயணமானாள். இரண்டு மூன்று நாட்களாக உணவு எதுவுமே சாப்பிடக் கிடைக்காததால் அவளும், அவளுடைய இரண்டு மகன்களும் உடல் தளர்ந்து காணப்பட்டார்கள்.

அப்பொழுது அந்த வழியாக வந்த இரண்டு இராணுவ வீரர்கள் அவர்களின் நிலைகண்டு, அவர்களுக்கு தங்களிடம் இருந்த ஒரு பெரிய துண்டை எடுத்துக் கொடுத்தனர். உடனே அந்தத் தாயானவள், ரொட்டித் துண்டை இரண்டாக உடைத்து, அதை தன்னுடைய மகன்களுக்கும் உண்ணக் கொடுத்தார்.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு நின்ற அந்த இரண்டு இராணுவ வீரர்களில் ஒருவர், “ஏன் இவள் இப்படிச் செய்கிறாள். தனக்குக் கிடைத்த ரொட்டித் துண்டை, தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்துவிட்டு, இவள் சாப்பிடாமல் இருக்கிறாளே, ஒருவேளை இவளுக்குப் பசிக்கவில்லையா?” என்று கேட்டார். அதற்கு இன்னொரு இராணுவ வீரர் அவரிடம், “அவளுக்குப் பசிக்காமல் இருக்காது, தன்னுடைய பிள்ளைகள் இருவரும் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே அவள் இப்படிச் செய்கிறாள்” என்றார்.

ஆம், தாயானவள் எப்போதுமே தன்னுடைய பிள்ளைகள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டிருப்பவள். அந்த வகையில் பார்க்கும்போது, அன்னை மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது எப்போதும் அன்பும், கரிசனையும் கொண்டவளாய் விளங்குகிறாள்.

இன்று திருச்சபையானது அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. அன்னை மரியாள் தன்னுடைய மண்ணக வாழ்வை முடித்துகொண்ட உடன், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற உண்மை இவ்விழா எடுத்துரைக்கிறது.

கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து கீழைத் திருச்சபையில் இவ்விழா டார்மிஷன் என்ற பெயரில் அதாவது ‘அன்னை ஆண்டவரில் துயில் கொள்கிறாள்’ என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருவதற்கான வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. அதன்பிறகு எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த யோவான் டமாசின் என்பவர், “அன்னை மரியாள் ஆண்டவர் இயேசுவைப் பெற்றெடுப்பதன் பொருட்டு, கருவிலே பாவக்கறையின்றி உதித்ததால், அவள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்” என்று கூறுவார்.

1568 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பத்திநாதர் என்பவர் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். 1950 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி, மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்ற விசுவாசப் பிரகடனமானது இயற்றப்பட்டது. பின்னர் இரண்டாம் வத்திக்கான் சங்கமானது, “மாசற்ற கன்னி மரியாள் மண்ணக வாழ்வை முடித்ததும், உடலோடும், ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று கட்டியம் கூறியது (திச 59). இவ்வாறுதான் மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா உலக முழுவதும் கொண்டாடும் நிலை உருவானது.

இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்க்க அழைக்கப்பட்டிருக்கிறோம். இவ்விழா தரும் முதலாவது சிந்தனை மரியாள் புதிய உடன்படிக்கையின் பேழை என்பதாகும்.

திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ‘விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது’ என்று வாசிக்கின்றோம். இந்த உடன்படிக்கைப் பேழை என்னவாக இருக்கும் என்று சிந்தித்துப் பார்த்தோமேயானால் அன்னை மரியாள்தான் என்ற உண்மை நமக்கு விளங்கும்.

மரியாளின் பிராத்தனையில் மரியாளை நாம் ‘உடன்படிக்கையின் பேழையே’ என்றுதான் சொல்கிறோம். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குறிப்பிடப்படும் உடன்படிக்கைப் பேழையில் மன்னாவும், பத்துக்கட்டளைகள் அடங்கிய இரண்டு கற்பலகைகளும், ஆரோனின் கோலும் இருந்தன. புதிய உடன்படிக்கைப் பேழையான மரியா, உலகிற்கு வாழ்வளிக்கும் உணவும், வார்த்தையுமான இயேசுவை தன்னுடைய உதிரத்தில் தாங்கி இருந்தாள். எப்படி பழைய ஏற்பாட்டுக் காலத்தில் எங்கெல்லாம் உடன்படிக்கைப் பேழை இருந்ததோ, அங்கெல்லாம் மகிழ்ச்சியும், கடவுளின் ஆசிர்வாதமும் இருந்தtது. அதுபோல, புதிய உடன்படிக்கைப் பேழையான மரியாள் இருந்த இடத்தில் கடவுளின் ஆசிரும், மகிழ்ச்சியும் நிறைவாக இருந்தது. எனவே தான் மரியாவை புதிய உடன்படிக்கைப் பேழை என்று சொல்வது மிகவும் பொருத்தமானதாக இருக்கின்றது.

இவ்விழா நமக்குத் தரும் இரண்டாவது சிந்தனை மரியாள் தேவையில் இருப்போருக்கு உதவுபவளாக விளங்குகின்றாள் என்பதாகும். மரியாள் தூய ஆவியினால் கருவுற்று ஆண்டவர் இயேசுவை தன்னுடைய உதிரத்தில் தாங்கி இருக்கிறாள். அப்படிப்பட்ட தருணத்திலும் தன்னுடைய உறவுக்காரப் பெண்மணி எலிசபெத்து கருவுற்றிருக்கிறாள் என்பதைக் கேள்விப்பட்டு, அவளுக்கு ஓடோடிச் சென்று உதவுகிறாள்; அவளுக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து தருகிறாள்.

மரியாள் எப்போதும் ‘தான் ஆண்டவரின் தாய் அதனால் தனக்கு மற்றவர் உதவி செய்யவேண்டும்’ என்று நினைக்கவில்லை. அவள் தேவையில் இருப்பவர் யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுவதுதான் இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தாள். அதனால்தான் கடவுள் அவருக்கு மேலான கொடைகளை வழங்கினார், அவரை உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொண்டார்.

ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவைக் கொண்டாடும் நாமும் அன்னை மரியாவைப்  உடன்படிக்கைப் பேழையாக/கடவுளின் பிரசன்னை மற்றவருக்கு தரும் கருவியாக வாழ்வோம். அதோடு மட்டுமல்லாமல் தேவையில் இருப்பவருக்கு ஓடோடிச் சென்று உதவும். அப்போது நாம் அன்னையின் அன்புப் பிள்ளைகளாக மாறுவோம்.

அன்னை தெரசா தன்னுடைய வாழ்வில் நடந்ததாகப் குறிப்பிடும் நிகழ்ச்சி இது.

ஒருமுறை அன்னைத் தெரசா கல்கத்தா வீதிகளில் வலம்வந்தபோது சிறுவன் ஒருவன் கிழிந்த ஆடையோடும், வற்றிய தேகத்தோடும் தரையில் சுருண்டு கிடந்தான். இதைப் பார்த்த அன்னை அவனை தோள்மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு, தன்னுடைய இல்லத்திற்கு கொண்டு சென்றான். அங்கே அவனுக்கு நல்ல உணவு கொடுத்து, உடையும் கொடுத்து, அங்கேயே தங்கச் சொன்னாள். ஆனால் அவனோ அங்கிருந்து தப்பித்து வெளியே ஓடிப்போனான்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அதே சிறுவன் அன்னைத் தெரசா வீதியில் வலம்வந்தபோது தரையில் சுருண்டு படுத்துக்கிடந்தான். உடனே அன்னையானவள் அவனை மீண்டுமாக இல்லத்திற்கு தூக்கிச் வந்து, பராமரித்து வந்தாள். இந்த முறை தன்னுடைய அருட்சகோதரிகளிடம், “ஒருவேளை அவன் எங்காவது ஓடிச்சென்றால், அவன் எங்கே செல்கிறான் என்று பின்தொடர்ந்து பாருங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து, அவன் வெளியே ஓடத் தொடங்கினான். ஏற்கனவே அன்னை சொன்னதுபோன்று, அருட்சகோதரிகள் அவனைப் பின்தொடர்ந்து சென்றார்கள். அப்போது சிறுவன் ஒரு மரத்தடிக்குக்கீழ் போய் நின்றான். அந்த மரத்தடியில் அழுக்கு உடையில், உடலெல்லாம் புண்ணாக இருந்த ஒரு பெண்மணி படுத்துக்கிடந்தாள். அவள் அவனுடைய தாய் போன்று இருந்தாள்.

இந்த வேளையில் சிறுவனைப் பின்தொடர்ந்து வந்த அருட்சகோதரிகள் அவனிடம், “எதற்காக வீட்டை விட்டு, இப்படி அடிக்கடி ஓடிவந்து விடுகிறாய், உனக்கு என்ன ஆயிற்று” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எது என்னுடைய வீடு? அதுவா?. நிச்சயமாக அதுவல்ல, என்னுடைய தாய் இருக்கும் இந்த இடம்தான் என்னுடைய வீடு, மகிழ்ச்சி எல்லாம்” என்றான்.

ஆம், மரியா என்னும் விண்ணகத் தாயிருக்கும் இடம்தான் நமது மகிழ்ச்சி, நிம்மதி எல்லாம். ஆகவே, மரியாளின் விண்ணேற்புப் பெருவிழாவில் நாம் தாயோடு இருப்போம், தாயின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம். – Fr. Maria Antonyraj, Palayamkottai.

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808 
Tirunelveli Dist
Tamilnadu
South India
00 91 4633 250 763

Virus-free. www.avast.com
BANNER1.JPG
14_a_phone.gif
emoticons_left.gif
emoticon_right.gif
Assension of Mary 15.08.2016 NET.pptx
ஆகஸ்டு 15 - Feast Mass.doc
ஆகஸ்டு 15 - Feast Mass.pdf
Reply all
Reply to author
Forward
0 new messages