|
| |||
|
மே 01 தொழிலாளர் புனித யோசேப்பு இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.
திருப்பலி முன்னுரை: ஏழையாக பிறந்தாலும் ஏற்றமிகு வாழ்வு வாழ்ந்தவர்! துன்பத்தில் துவண்டாலும் தூய்மையான வாழ்வு வாழ்ந்தவர்! கஷ்டங்களுக்கு மத்தியிலும் கண்ணிய வாழ்வு வாழ்ந்தவர்! அவரே நமது புனித சூசையப்பர். இன்று நம் தாய் திருச்சபையானது தொழிலாளர்களின் தினமான இன்று தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரை நினைவு கூர்கின்றது. ஒருவர் மற்றவரின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள தினம் தினம் தம்தம் தகுதிக்கும், அறிவுத்திறனுக்கும் உடல் வலிமைக்கும் ஏற்ப, உழைக்கும் கரங்களை போற்றும் நாள் இந்நாள். இறைவனின் படைப்புத் தொழிலின் பங்காளிகளான தொழிலாளர்களை கரம் குவித்து வணங்கி வாழ்த்திடும் நன்னாள் இன்று. உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது என்ற தூய பவுலின் கூற்று தொடக்க திருச்சபை உழைப்பிற்குக் கொடுத்த மேன்மையை எடுத்துரைக்கிறது. கடவுள் அமைத்த நியதி, மனிதன் நெற்றி வேர்வை நிலத்திலே சிந்த, பாடுபட்டு உழைத்திட வேண்டும் என்பது. இதற்கு திருக்குடும்பமும் விதிவிலக்கல்ல. புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்துஇ அந்த உழைப்பை மூலதனமாக வைத்து திருகுடும்பத்தைக் காப்பாற்றகிறார். நாம் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் திறமைதான் நம் செல்வம், என்ற மனநிலை வேண்டும். தொழிலை இழிவாக கருதாமல் தொழில் செய்வோரின் நேர்மைஇ அதை செய்யும் நேர்த்தி, மேலும் அவர்கள் அளிக்கும் உழைப்பையும் போற்றிட வேண்டும். இன்று சிறப்பாக நாம் சமுதாயத்தின் அடிமட்டத்திலே நமக்காக ஒவ்வொரு நாளும் எந்தவிதப் பிரதிபலனும் எதிர்பாராது உழைக்கும் ஒவ்வொருவரையும் நன்றியோடு நினைவு கூறுவோம். எவ்வாறு புனித சூசையப்பர், அன்னையாம் மரியாளுக்கும், இயேசுவுக்கும் உறுதுணையாக இருந்தாரோ அதே போல் நம் உழைப்பால் மற்றவர்களுக்கு நன்மை செய்வோம். எனவே மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதுவதும்இ மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதுவதும், முற்றிலும் தவறானதாகும். நாம் செய்கின்ற தொழிலை மதிப்போம். அதனை அளித்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். நாம் செய்கின்ற தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும் உலகிலுள்ள தொழிலாளர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும் வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் தொடரும் திருப்பலியில் மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை (தொடக்கநூல் 1: 26 – 2:3) இன்றைய முதல் வாசககம் கடவுளை ஒரு தொழிலாளியாகச் சித்தரிக்கிறது. உலகையும்இ அதில் வாழும் அனைத்தையும் படைத்துஇ அவற்றின் வாழ்விற்கும்இ வளர்ச்சிக்கும் தொடர்ந்து உழைப்பவர் கடவுள். கடவுளோடு இணைந்துஇ உடன் உழைப்பாளியாக வாழ உழைப்பின் மேன்மையை நாம் உணர அழைக்கும் இவ்வாசத்திற்கு செவிகக் கொடுப்போம்.
முதல் வாசகம் பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள். தொடக்க நூலிலிருந்து வாசகம் 1: 26 - 2: 3 கடவுள், ``மானிடரை நம் உருவிலும், நம் சாயலிலும் உண்டாக்குவோம். அவர்கள் கடல் மீன்களையும், வானத்துப் பறவைகளையும், கால்நடைகளையும், மண்ணுலகு முழுவதையும், நிலத்தில் ஊர்வன யாவற்றையும் ஆளட்டும்'' என்றார். கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். கடவுள் அவர்களுக்கு ஆசி வழங்கி, ``பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்; அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்; கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்'' என்றார். அப்பொழுது கடவுள், ``மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும். எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்'' என்றார். அது அவ்வாறே ஆயிற்று. கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கினார். அவை மிகவும் நன்றாய் இருந்தன. மாலையும் காலையும் நிறைவுற்று ஆறாம் நாள் முடிந்தது. விண்ணுலகும் மண்ணுலகும் அவற்றில் உள்ள அமைப்புகள் அனைத்தும் உருவாக்கப் பெற்று நிறைவெய்தின. மேலும் கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார். அவர் தாம் செய்த வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து, ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். கடவுள் ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார். ஏனெனில் கடவுள் தாம் செய்த படைப்பு வேலைகள் அனைத்தையும் நிறைவு பெறச் செய்து அந்நாளில்தான் ஓய்ந்திருந்தார். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
அல்லது அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 14-15,17,23-24 சகோதரர் சகோதரிகளே, அனைத்துக்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும். கிறிஸ்து அருளும் அமைதி உங்கள் உள்ளங்களை நெறிப்படுத்துவதாக! இவ்வமைதிக்கென்றே நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டீர்கள். நன்றியுள்ளவர்களாய் இருங்கள். எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் செய்கின்ற அனைத்து வேலைகளையும் மனிதருக்காக அல்ல, ஆண்டவருக்காகவே செய்கிறீர்கள் என உணர்ந்து உளமாரச் செய்யுங்கள். அதற்குக் கைம்மாறாக ஆண்டவர் உங்களுக்கு உரிமைப்பேறு அருளுவார் என்பது தெரியும் அல்லவா? நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல் திபா 90: 2. 3-4. 12-13. 14,16 (பல்லவி: 17உ) பல்லவி: ஆண்டவரே, நாங்கள் செய்பவற்றில் வெற்றி அருளும்! அல்லது: அல்லேலூயா. 2 மலைகள் தோன்றும் முன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்கும் முன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே! பல்லவி 3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்து போன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி 12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி 14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 16 உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 68: 19 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் போற்றி! போற்றி! நாளும் நம்மை அவர் தாங்கிக் கொள்கின்றார்; இறைவனே நம் மீட்பு. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம் இவர் தச்சருடைய மகன் அல்லவா? +மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58 அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ``எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவை எல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை. இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
சிந்தனை: இவன் தச்சனின் மகன் தானே! இந்த அலட்சிய மொழிக்கு தொழில் தான் காரணமா? எந்த தொழிலையும் அலட்சியப்படுத்துவது என்பது அழகாகுமா? அந்த அந்த தொழிலை செய்து பார்த்தால் தான் அதன் பாரம் தெரியும். எந்த நல்ல தொழிலுமே வாழ்வுக்கு அவசியமானதே. அதனையோ, அதனை செய்வோரையோ அலட்சியப்படுத்துவது என்பது மனிதாபிமானத்திற்கு எதிரானதே. சில தொழில்களை மிக முக்கியமானது என்று சொல்லி மற்ற தொழிலை அலட்சியப்படுத்தும் போது, இன்றைக்கு விவசாய தொழிலுக்கு ஆட்கள் இல்லை. யாரும் மிகவெ விருப்பத்துடனே வருவதும் இல்லை. நான் ஒரு விவசாயின் மகன் என்று சொல்ல வெட்கப்படுகின்ற பிள்ளைகள், இன்றைக்கு எங்க அப்பா பைனான்ஸ் நடத்துகிறார் என்று சொல்ல மகிழ்ச்சியடைகிறார்கள். உண்மையென்ன? வட்டிக்கு பணம் கொடுத்து, பிறரை சுரண்டாதே என்கிற வேதம் சொல்லுகின்றது, சீராக் 07: 15 கடும் உழிப்பையும் உழவுத் தொழிலையும் வெறுக்காதே. இவை உன்னத இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை. மனித சமூகத்திற்கான எல்லா தொழிலையும், அதனை செய்வோரையும் உயர்வாக, சமமாக மதிப்போம்.
விசுவாசிகள் மன்றாட்டுகள்: 1) அன்பே உருவான இறைவா, திருச்சபையின் மக்கள் அனைவரும் இறையன்பிலும் பிறரன்பிலும் வளர, தேவையான ஆர்வத்தையும், உற்சாகத்தையும் அளிக்குமாறு, எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் உமது அன்பில் வழி நடத்த வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். 2) “உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது” என்பதற்கேற்ப உழைக்கும் எண்ணம் எங்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படையிலே உருவாக வேண்டுமென்றும், உழைப்பு கடவுளால் தரப்பட்ட கொடை என்பதை உணர்ந்து, அதை நல்ல முறையிலே நற்செயல்களுக்காகப் பயன்படுத்த வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். 3) என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன் என்றுரைத்த தந்தையே இறைவா! கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர்கள், முதலாளிகளின் முரண்பாடுகளில் சிக்குண்டவர்கள், கூலித் தொழிலாளர்கள் இவர்களின், உரிமைக்காய், விடுதலைக்காய் நாங்கள் அனைவரும் குரல் கொடுக்கவும், அவர்களின் வாழ்வு மேம்படவும், உரிமைகள் மதிக்கப்படவும் வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம் 4) என்றென்றும் பேரன்பை நிலையாகக் கொண்டுள்ள தந்தையே! புனித சூசையப்பரின் குனநலன்களான நேர்மை, வாய்மை, பகிர்வு மனப்பான்மை, முழு ஆர்வம், கடின உழைப்பு போன்ற பண்புகளால் தொழிலாளர்களாகிய நாங்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாயத் திகழ வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம். 5) மனநிறைவின் ஊற்றே இறைவா, மனித உழைப்பை ஒரு வியாபார பொருளாக கருதாமல், மனிதனை உற்பத்தி செய்யும் இயந்திரமாக கருதாமல், நாம் செய்கின்ற தொழிலை மதிக்கவும், அத்தொழிலை இறைவன் நிறைவாக ஆசீர்வதிக்கவும், உலகிலுள்ள தொழிலாளர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்கப்படவும், வேலையின்றியிருப்போர்க்கு நல்ல வேலை கிடைக்குபடியாகவும் வேண்டுமென்று இறைவா உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம் “God seems to do nothing of Himself which He can possibly delegate to His creatures.” - C.S. Lewis
'GOD IS LOVE'
Rev. Fr. Amirtha Raj Sundar J.,
Parish Priest,
R C Church,
ILAYARASANENDAL - 627 713
Tirunelveli Dist
Tamilnadu
South India
00 91 4632 247302 00 91 944 314 0660 | |||
|
|
|
This email is free from viruses and malware because avast! Antivirus protection is active. |