|
| |||
|
30ஆம் வாரம் – சனி 03 11 2018 இரண்டாம் ஆண்டு முதல் வாசகம் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 18b-26 சகோதரர் சகோதரிகளே, எப்படியும் கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார். இதனால் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆம், இனியும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு உங்கள் மன்றாட்டும் இயேசு கிறிஸ்துவினுடைய ஆவியின் துணையும் என் விடுதலைக்கு வழி வகுக்கும் என நான் அறிவேன். என்ன நேர்ந்தாலும் வெட்கமுற மாட்டேன். இன்றும் என்றும், வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர்நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்துகொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர் நீத்துக் கிறிஸ்துவோடு இருக்க வேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம்: இதுவே மிகச் சிறந்தது: ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம்: இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. நான் உங்களோடு இருப்பதால் நீங்கள் நம்பிக்கையில் வளர்ச்சி பெற்று மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் அனைவரோடும் தொடர்ந்து தங்கியிருப்பேன் என உறுதியாக நம்புகிறேன். ஆகவே, நான் உங்களிடம் மீண்டும் வருவதால், கிறிஸ்து இயேசுவின் உறவில் வாழும் நீங்கள் என் பொருட்டு இன்னும் மிகுதியாகப் பெருமிதம் கொள்வீர்கள். இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு. பதிலுரைப் பாடல் திபா 42: 1. 2. 4யb (பல்லவி: 2ய) பல்லவி: உயிருள்ள இறைவன்மீது என் நெஞ்சம் தாகம் கொண்டுள்ளது. 1 கலைமான் நீரேடைகளுக்காக ஏங்கித் தவிப்பது போல் கடவுளே! என் நெஞ்சம் உமக்காக ஏங்கித் தவிக்கின்றது. பல்லவி 2 என் நெஞ்சம் கடவுள்மீது, உயிருள்ள இறைவன்மீது தாகம் கொண்டுள்ளது; எப்பொழுது நான் கடவுள் முன்னிலையில் வந்து நிற்கப் போகின்றேன்? பல்லவி 4யb மக்கள் கூட்டத்தோடு சேர்ந்து பவனியாகக் கடவுளின் இல்லத்திற்குச் சென்றேனே! ஆர்ப்பரிப்பும் நன்றிப் பாடல்களும் முழங்க விழாக் கூட்டத்தில் நடந்தேனே. பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 11: 29யb அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. நற்செய்தி வாசகம் தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர். லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1,7-11 அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்துகொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: ``ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், `இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், `நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும் பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.'' இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. சிந்தனை பெருமை தேடும் உலகம் இது. எல்லா இடங்களிலும் முதல் இடம் தேடும் உலகம் இது. என்ன பெற்றுக் கொண்டது உலகம் இது. முதல் இருக்கை தேடி தேடி மனிதத்தை தொலைத்து நிற்கின்றது. முதல் இருக்கை தேடி இருக்கைக்காக சண்டையிட்டு மற்றவாகளை மாண்பிழக்கச் செய்து, தான் அமர்ந்து, நிரந்தரமில்லாத இந்த உலகினிலே அவர்களும் மற்றொருவரால் புறந்தள்ளப்படுகின்ற நிலைத் தான் உருவாகின்றது. இறைவாக்கு கற்றுத் தரும் பாடத்தை பெற்று வாழ்வாக்குவோம்.
"GOD IS LOVE" Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808
Tirunelveli Dist
Tamilnadu
South India
| |||
|
|