31 07 2016 - 18ஆம் வாரம் - ஞாயிறு

286 views
Skip to first unread message

Amirtha Raja Sundar

unread,
Jul 27, 2016, 10:43:18 PM7/27/16
to undisclosed-recipients
 

31 07 2016 - 18ஆம் வாரம் - ஞாயிறு

மூன்றாம் ஆண்டு

வருகைப் பல்லவி: சங் 69:2,6

ஆண்டவரே, எனக்குத் துணைசெய்ய அருள்கூர்வீராக் எனக்கு உதவி செய்ய விரைவீராக: எனக்குத் துணை செய்பவரும் விடுதலை அளிப்பவரும் நீNர் ஆண்டவரே, தாமதியாதேயும்.

திருப்பலி முன்னுரை

இறைஇயேசுவில் அன்பிற்குரியவர்களே,

இன்று பொதுக்காலம் 18ம் ஞாயிறு வழிபாட்டை சிறப்பிக்க வந்துள்ள உங்கள் அனைவருக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான வணக்கங்கள்.           

            இன்றைய நற்செய்தியின் தலைப்பாகஅறிவற்ற செல்வன் உவமைஎன்றே கொடுக்கப்பட்டுள்ளது. அறிவற்ற ஒருவனின் எண்ணங்கள், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை இறைமகன் இங்கே தம் உவமையின் வழியாக எடுத்துரைப்பதைக் காணலாம். “காசேதான் கடவுளடா   பணமென்றால் பிணமும் வாயைத் திறக்கும்என்றெல்லாம் பணத்தைப்பற்றிக் பழமொழிகளைக் கேட்டிருக்கின்றோம். பணம் ஒன்றுதான் தற்போது பலரின் வாழ்வின் மையமாக அமைந்து போனது. அதற்காக தன் நேரம், உடல்நலம், உறவுகள் என பாராது, ஓடி,ஓடி உழைக்கின்றனர் வாழ வேண்டிய வயதில் அனைத்தையும் விட்டுவிட்டு உழைக்கின்றனர். உழைத்தபின் பார்த்தால் அங்கே உடலில் நோய்களும், உறவுகளின் பிரிவுகளும், மனஉளைச்சல்களுமே மிஞ்சியிருக்கின்றன. மற்றும் பலர் சிற்றின்ப நாட்டங்களில் மயங்கி, பல தவறான குறுக்கு வழிகளிலே பணத்தை, செல்வங்களை சேர்க்கின்றனர். பல தலைமுறைகளுக்கு செல்வம் சேர்த்து வைக்கின்றனர். பலரை ஏமாற்றி, சுரண்டி, கண்ணீரில் அவர்கள்; செல்வந்தர்களாக குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் செல்வம் நிலைப்பதில்லை. அவர்கள் அனைவருக்கும் பணமே தெய்வமாக தெரியும். போதுமென்ற மனமற்றவர்களாய், வாழ்வின் முடிவைப்பற்றி உணராதவர்களாய் வாழ்கின்றனர். “ஆடி அடங்கும் வாழ்ககையடா, ஆறடி நிலமே சொந்தமடாஎன்ற கவிஞனின் வார்த்தைகளின் அர்த்தம் புரியாதவர்களாக, புரிந்தாலும் அதைக் கண்டுகொள்ளாதவர்களாக செல்வத்தையே மையப்படுத்தி வாழ்வைத் தொடர்கின்றனர்.

            ஆனால், உண்மைச் செல்வம் எதுவென புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதிய நூலிலே, “ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்ற செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன்;” மிக அருமையாகக் கூறியுள்ளார். “ஆண்டவரே நீரே என் செல்வம் “ தாவீதும் தம் திருப்பாடலில் கூறியிருக்கின்றார். ஆம். நமது ஒப்பற்ற செல்வம், இறைவனே. அவரை நம் வாழ்வின் மையமாக வைத்திருக்க வேண்டும், அவரைத் தவிர நமக்கு செல்வம் எதுவுமில்லை. நாம் சேர்க்க வேண்டியது நெற்களஞ்சியங்களில் அல்ல. விண்ணகக் களஞ்சியங்களில் நற்செயல்களையே. பிறர்நலனுடன் நற்செயல்களைச் செய்யும்போது, அதை பூச்சியும், துருவும் அழிக்காது. கிறிஸ்தவர்களாகிய நாம் விண்ணக வாழ்வை கண்முன் வைத்தவர்களாய், மண்ணாசை, பொன்னாசை, பொருளாசையைக் கடந்தவர்களாக,; இறைவனையே நம் செல்வமாகக் கொண்டு, இருப்பதை பகிர்ந்து, பிறர்நலம் பேணுபவர்களாய், நல்வாழ்வு வாழ்ந்திட வரம் வேண்டி, இப்பலியிலே பக்தியுடன் பங்கேற்போம்.

சபை மன்றாட்டு

          எங்களுக்குத் துணைசெய்பவரும் விடுதலை அளிப்பவருமாகிய இறைவா, உம் திருமுன் கூடிவந்துள்ள உம் ஊழியர் எம்மீது 
நீர் பெருந்தன்மையோடு பொழிந்துள்ள 
அளவிட முடியாத இரக்கத்தை எண்ணி அகமகிழ்கின்றோம். 
எங்களைப் படைத்தவரும், பராமரிப்பவரும் நீரே என்று 
பெருமைகொள்ளும் எங்களில் உம் அருள் அனுபவத்தைப் புகப்பித்து, 
அதன் பலன் எங்களில் நிலைத்திருக்கச் செய்தருளும். உம்மோடு.

முதல் வாசகம்

 உழைத்துச் சேர்த்த சொத்தை, அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார்.

சபை உரையாளர் நூலிலிருந்து வாசகம் 1: 2; 2: 21-23

வீண், முற்றிலும் வீண், என்கிறார் சபையுரையாளர்; வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண். ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.

இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும், வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? வாழ் நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 பதிலுரைப் பாடல்

திபா 90: 3-4. 5-6. 12-13. 14,17 (பல்லவி: 1)

பல்லவி: என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடம்.

3 மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; `மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4 ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன. பல்லவி

5 வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்; 6 அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்துபோகும். பல்லவி

12 எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம். 13 ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். பல்லவி

14 காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம். 17 எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-5,9-11

சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.

இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.

கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள். ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள்.

ஒருவரோடு ஒருவர் பொய் பேசாதீர்கள். ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப் புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்.

புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர் என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும், அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும் அனைத்துமாய் இருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 13-21

அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், ``போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார்.

அவர் அந்த ஆளை நோக்கி, ``என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார்.

பின்பு அவர் அவர்களை நோக்கி, ``எவ்வகைப் பேராசைக்கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார்.

அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: ``செல்வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. அவன், `நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில்லையே!' என்று எண்ணினான். `ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, `என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல்வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான்.

ஆனால் கடவுள் அவனிடம், `அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

01 08 2010

பொதுக்கால 18ம் ஞாயிறு

வாழ்வில் நம்மை வளமாக்குவது நாம் கொண்டிருக்கின்றவைகள் அல்ல. பொருளை சேகப்பதிலேயே நம் காலத்தை விரையமாக்குனிக்றோம். மாறாக நாம் செய்ய வேண்டியது, இருப்பதில் நிறைவு கண்டு, பெற்றுக் கொண்டவைகளுக்காக நன்றி கூறி, இருப்பதை கொண்டு பகிர்ந்து வாழ்வதுவே நம் வாழ்வை வளமாக்கும்.

மறையுரைச் சிந்தனை:

பொதுக்காலம் பதினெட்டாம் ஞாயிறு (ஜூலை 31)

புதிய இயல்பை அணிந்துகொள்வோம்.

மோட்டார், கார் தயாரிப்பின் தந்தை என அறியப்படுபவர் ஹென்றி போர்டு என்பவர். ஒருமுறை அவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள டப்ளின் நகரில் விடுமுறை நாட்களை செலவழித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருசிலர், அனாதை இல்லம் ஒன்று கட்டப்போவதாகும், அதற்கு நன்கொடை தரவேண்டியும் கேட்டுக்கொண்டனர்.  அவரும் அதற்கு இரண்டாயிரம் டாலர் நன்கொடையாக எழுதினார்.

ஆனால் அடுத்தநாள் காலை, செய்தித்தாளில் அனாதை இல்லம் ஒன்றிற்காக ஹென்றிபோர்டு இருபதாயிரம் டாலர் நன்கொடையாகத் தந்திருக்கிறார் என்று செய்தி வந்திருந்தது. இதனால் நன்கொடை வசூலித்தவர்கள், ஹென்றி போர்டிடம் சென்று,  “செய்தித்தாளில் தவறுதலாக வந்த செய்திக்காக மன்னிப்புக் கேட்கிறோம்; அதோடு செய்தித்தாளில் வந்த செய்தியை திருத்தி வெளியிட பத்திரிக்கையாளர்களிடம் சொல்லியிருக்கிறோம்” என்றும் சொன்னார்கள்.

அதற்கு ஹென்றி போர்டோ, “நீங்கள் என்னிடம் மன்னிப்புக் கேட்கவேண்டாம்; செய்தியைத் திருத்தியும் வெளியிட வேண்டாம். நான் ஏற்கனவே செய்தித்தாளில் வந்ததுபோன்று இருதாயிரம் டாலர் நன்கொடையாக தந்துவிடுகிறேன்” என்று சொல்லி, மீதி பதினெட்டாயிரம் டாலருக்கு செக் எழுதித்தந்தார். தொடர்ந்து அவர் அவர்களிடம், “அனாதை இல்லத்தைக் கட்டி முடித்துவிட்டு தயவுசெய்து என்னுடைய  பெயரைப் போட்டுவிடாதீர்கள். மாறாக ‘ஆதரவற்றோரின் புகழிடம்’ என்று அதில் எழுதுங்கள்” என்றார்.

தன்னை நாடி வந்த மக்களுக்கு வாரி வாரிக் கொடுக்கும் வள்ளலாக ஹென்றி போர்டு விளங்கினார் என்பதை மேலே உள்ள நிகழ்ச்சியானது நமக்கு எடுத்துரைக்கிறது.

ஆனால் இன்று மக்கள் தாங்கள் சேர்த்துவைத்த செல்வத்தை தனக்காக, தன்னுடைய குடும்பத்திற்காகப் பயன்படுத்தி, சுயநல வட்டத்திற்குள் சிதைந்துபோகும் ஓர் அவலநிலையைத்தான் பார்க்கிறோம். இந்நிலை மாறி, நாம் அனைவரும் பிறர்நலனில் அக்கறைகொண்டு வாழ, இறைவார்த்தையானது நமக்கு அழைப்புத் தருகிறது. பொதுக்காலத்தின் பதினெட்டாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் படிக்கக்கேட்கும் வாசகங்கள் நம்மை ‘பழைய இயல்பைக் களைந்துவிட்டு, புதிய இயல்பை அணிந்துகொள்ள அழைக்கின்றது.

முதலில் எவை எல்லாம்  பழைய இயல்புகள்? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். தூய பவுல் கொலோசேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு வரிசைப்படுத்துவார், ‘பரத்தைமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை, பொய்” என்று. இவற்றையெல்லாம் ஒரு மனிதன் தன்னுடைய வாழ்விலிருந்து களைந்துவிட்டு, புதிய இயல்பான அன்பு, பரிவு, பகிர்தல் போற்றவற்றை அணிந்துகொள்ளவேண்டும். அப்படி அணிந்து வாழ்கின்றபோதுதான்  ஒரு மனிதன் புதுப்படைப்பாக மாறமுடியும். ஆனால் நடைமுறை இது அவ்வளவு எளிதல்ல.

நற்செய்தி வாசகத்தில் பழைய இயல்பு என்று பவுலடியார் வரிசைப்படுத்தும் பேராசையால் அழிந்துபோகும் ஒரு செல்வந்தனைக் குறித்துப் படிக்கின்றோம். அவனுடைய (செல்வந்தனுடைய) வயல் நன்றாக விளைந்திருக்கிறது. அதை அவன் பிறருக்குப் பகிர்ந்து கொடுத்திருக்கலாம். ஆனால் அவன் அப்படிச் செய்யவில்லை. தான் சம்பாதித்த செல்வத்தை தான் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்ற சுயநல வட்டத்தில் சுழன்று திரிந்தான். இறுதியில் தான் சம்பாத்தித்த செல்வத்தை தானும் பயன்படுத்தாமல், பிறரையும் பயன்படுத்தவிடாமல் மண்ணோடு மக்கி அழிந்துபோனான்.

ஆக, சுயநலத்தில், பேராசையோடு வாழும் எவருக்கும் இப்படிப்பட்ட அழிவே கிடைக்கும் என்பது இறைவார்த்தை நமக்குக் கற்றுத்தரும் பாடமாக இருக்கிறது. இன்றைக்கும் பெரும்பாலான மக்கள் பணம், பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் தங்களோடு வாழும் சாதாரண மக்களை கண்டுகொள்ளாமல் வாழ்வது நமக்கு வேதனையாக இருக்கின்றது. அவர்கள் இயேசு கூறுகின்ற ‘மிகுதியான உடமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது’ என்ற உண்மையை உணர்ந்துகொள்ளவேண்டும்.

விவசாயி ஒருவர் தன்னுடைய வயலிலிருந்து மாட்டுவண்டியில் வைக்கோலை (மாடுகள் உண்ணும் உணவு) ஏற்றிக்கொண்டு வந்தார். அந்த விவசாயி இயல்பிலே தெம்மாங்குப் பாடல்களைச் சிறப்பாகப் பாடும் திறமையை பெற்றிருந்ததனால் பாடல்களை அருமையாகப் பாடிக்கொண்டு, தன்னுடைய மாட்டுவண்டியை ஒட்டிக்கொண்டு வந்தார்.

அவர் வந்த வழியில் ஓர் ஆறானது குறுக்கிட்டது. எனவே விவசாயி தன்னுடைய மாட்டுவண்டியை மெதுவாக ஒட்டிக்கொண்டு அந்த ஆற்றுக்குள் இறங்கினார். அப்போது திடிரென்று ஒரு தேவதை அவருக்கு முன்பாகத் தோன்றியது. அந்த தேவதை அவரிடம், “ஐயா!  நீங்கள் பாட்டுப் படும் அழகைக் கண்டு நான் வியந்தேன். அதனால் உங்களுக்கு இப்போது ஒரு பரிசு தரப்போகிறேன். அந்தப் பரிசு என்னவென்றால், உன்னிடத்தில் இரண்டு கற்களைக் கொடுப்பேன். அதை நீங்கள், உங்களுடைய மனதில் என்ன நினைத்துக்கொண்டு இந்த ஆற்றில் வீசி எறிகிறீர்களோ அது நடக்கும்” என்று சொல்லி தேவதை மறைந்தது.

இதைக் கேட்டு விவசாயி மிகவும் சந்தோசப்பட்டான். உடனே அவன் தேவதை தனக்கு கொடுத்த பரிசை/வரத்தை உண்மைதானா? என்று சோதித்துப் பார்க்க விரும்பினான். அதனால் அவன் ஒரு கல்லை எடுத்து ஆற்றுக்குள் வீசினான். அப்படி அவன் கல்லை எடுத்து ஆற்றுக்குள் வீசும்போது, தன்னுடைய மாட்டுவண்டியில் இருக்கும் வைக்கோல் முழுவதும் தங்கமாக மாறவேண்டும் என்று விரும்பினான். என்ன ஆச்சரியம்!. அவன் விரும்பியது போன்றே அவனுடைய மாட்டுவண்டியில் இருந்த வைக்கோல் முழுவதும் தங்கமாக மாறியது. இதைப் பார்த்து அவன் மிகவும் மகிழ்ச்சியடைந்தான். உடனே அவன் மகிழ்ச்சியோடு பாடல் பாடிக்கொண்டு, தன்னுடைய மாட்டுவண்டியை வீட்டை நோக்கி ஓட்டத் தொடங்கினான்.

அப்போது அவனுக்கு எதிரே ஒரு கும்பல் நடந்து வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் அவன் மிகவும் கலக்கமடைந்தான். மாட்டுவண்டியில் இருக்கும் இவ்வளவு தங்கத்தையும் அவர்கள் பார்த்தால், நிச்சயம் நம்மைக் கொன்றுபோட்டுவிட்டு, எல்லா தங்கத்தையும் பறித்துக்கொண்டு  போய்விடுவார்களே! என்று சிந்திக்கத் தொடங்கினான். எனவே, மாட்டுவண்டியைத் திரும்பவும் ஆறு இருக்கும் இடத்திற்கு ஒட்டிக்கொண்டு வந்து, அங்கே தான் வைத்திருந்த இன்னொரு கல்லை எடுத்து, ஆற்றில் வீசினான். அப்படி வீசும்போது ‘மாட்டுவண்டியில் இருக்கும் தங்கம் முழுவதும் மறுபடியும் வைக்கோலாக மாறவேண்டும்’ என்று நினைத்துக்கொண்டான். அவன் நினைத்தபடியே தங்கம் முழுவதும் மீண்டுமாக வைக்கோலாக மாறியது.

இப்போது அவன் கிடைத்த வரம் முழுவதும் வீணாய் போயிற்றே என்று வருத்தத்தோடு வீட்டுக்குச் சென்றான்.

விவசாயி நினைத்திருந்தால் அந்தத் தங்கத்தை எதிரே வந்த கும்பலிடம் கொடுத்துவிட்டு (ஒருவேளை அவர்கள் வழிமறித்துக் கேட்டிருந்தால்), தான் வைத்திருந்த இன்னொரு கல்லைக்கொண்டு மீண்டும் தங்கத்தைப் பெற்றிருக்காலம். ஆனால் அவனிடம் இருந்த பேராசைக் குணமும், சுயநலமும், தேவதை கொடுத்த வரத்தை யாருமே பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டது. பேராசையோடும், சுயநலத்தோடும் வாழ்கிறபோது இப்படித்தான் அழிவைச் சந்திக்கிறோம் என்பதை இந்த கதையானது நமக்கு எடுத்துக்கூறுகிறது.

ஆகவே பவுலடியார் கூறுவதுபோன்று, இன்னும் முதல் வாசகம் கூறுவதுபோன்று வீணிலும், வீணான பேராசையை; பழைய இயல்பை நம்முடைய வாழ்விலிருந்து அகற்றுவோம்.

அடுத்ததாக நாம் செய்யவேண்டிய காரியம், பழைய இயல்பைக் களைந்துகொள்வதோடு மட்டுமல்லாமல், புதிய இயல்பை அணிந்துகொள்ளவேண்டும் என்பதாகும். ஏனென்றால் கிறிஸ்தவன் என்பவன் தீமை செய்யாதவனாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நன்மை செய்பவனாக இருக்கவேண்டும். இங்கே புதிய இயல்பு என்று சொல்கிறபோது அன்பு, இரக்கம், பகிர்வு மனப்பான்மை போற்றவற்றை நாம் நம்முடைய வாழ்வில் அணிந்துகொள்ளவேண்டும். அப்படி புதிய இயல்பான பிறருக்கு உதவி செய்யும் உள்ளத்தை, பகிர்வு மனப்பான்மையை நாம் அணிந்துகொள்கிறது நாம் கடவுளுக்கு உகந்த மக்களாக வாழமுடியும். கடவுளை ள் நம்முடைய உள்ளத்தில் குடிகொள்ளச் செய்யமுடியும். ஆகவே, நாம் நமது வாழ்வில் பிறருக்கு உதவிசெய்து வாழும் மக்களாக, பகிர்ந்து வாழும் மக்களாக வாழ முயல்வோம்.

சீராக்கின் ஞான நூல் 35:10 ல் வாசிக்கின்றோம் “பிறருக்கு உதவி/ கைம்மாறு செய்கிறவர், கடவுளால் ஏழு மடங்காகத் திரும்பிச் செலுத்தப்படுவர்” என்று. ஆம், நாம் பிறருக்குக் கொடுக்கும்போது, கடவுள் நமக்கு மிகுதியாகக் கொடுப்பார் என்பதே உண்மை.

“மனித இனம் மகிழ்ச்சியைப் பெறுவதற்கான ஒரே வழி பிறருக்கு உதவுவதுதான்” என்பார் குன்றக்குடி அடிகளார். ஆகவே நாம் நம்மிடம் இருப்பவற்றை அறிவற்ற செல்வந்ததனைப் போன்று பதுக்கிவைத்து வாழாமல், எல்லாரும் நலம்பெற கொடுத்து வாழுவோம்.

உலக பணக்காரர்களில் முதன்மையான பணக்காரராக இருப்பவர் மைக்ரோசாப்ட்  நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பில்கேட்ஸ் என்பவர். சில ஆண்டுகளுக்கு முன்பாக இளைஞன் ஒருவன் அவனிடத்தில் ஒரு கேள்விகேட்டான். அந்தக் கேள்வி இதுதான், “இன்றைய தேதியில் உங்களுடைய சொத்து மதிப்பு 70 பில்லியன் கோடி டாலர். இவ்வளவு பணத்தையும் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யபோகிறீர்கள்” என்று கேட்டான் அந்த இளைஞன்.

அதற்கு பில்கேட்ஸ், “என்னிடம் இருக்கும் இவ்வளவு பணத்தைக் கொண்டு நான் பல தர்ம காரியங்கள்/ அறப்பணிகளைச் செய்துகொண்டிருக்கிறேன். அதோடு மட்டுமல்லாமல், நான் இறப்பதற்குள் என்னிடம் இருக்கும் பணத்தில் பெரும்தொகையை அறக்கட்டளை ஒன்றிற்காக எழுதி வைக்கப்போகிறேன்” என்றார். உலக பணக்காரார்களில் முதன்மையானவராக இருந்தாலும் பிறருக்குக் கொடுக்கவேண்டும், உதவவேண்டும், பகிர்ந்துவாழ வேண்டும் என்ற எண்ணம் பில்கேட்சிடம் இருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது.

ஆதலால் கடவுள் நமக்குக்கொடுத்த ஆசிர்வதங்களை நம்மோடு வைத்துக்கொள்ளாமல் பிறரோடு பகிர்ந்து வாழ்வோம்; வறியவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வோம். இதன்வழியாக புதிய இயல்பை அணிந்தவர்களாய் இறையருள் நிறைவாய் பெறுவோம்.

“குறைவாக வைத்திருப்பவன் ஏழை கிடையாது. எல்லாம் இருந்தும், பிறருக்குக் கொடுக்க மனமில்லாமல், இன்னும் வேண்டும், வேண்டும் என்று நினைப்பனே உண்மையில் ஏழை” – சிசரோ.  - Fr. Maria Antonyraj, Palayamkottai.

மன்றாட்டுக்கள்:

நேர்மையற்ற வழிகளில் செல்வம் சேர்ப்போர், தாம் இடாத முட்டைகளை அடை காக்கும் கௌதாரி போன்றோர்என்ற இறைவா,

            பலர் இன்று திடீர் பணக்காரர்களாக மாறிக் கொண்டு இருக்கின்றனர். அவர்கள் ஆடம்பர வாழ்வின் உச்சத்தில், வாழ்கின்றனர். அவர்கள் அத்தகைய வாழ்வை அடைய சட்டத்தை ஏமாற்றி, மக்களை ஏமாற்றி, சுரண்டி, தவறான, குறுக்கு வழிகளை, நேர்மையற்ற பாதையை தேர்ந்தெடுத்து, செல்வத்தைச் சேர்க்கின்றனர்.. தன் பரம்பரைக்கும் சொத்து சேர்த்து வைக்கின்றனர். நேர்மையற்ற வழியில் சேர்த்து வைக்கும் செல்வமும், நேர்மையற்ற வழியைப் பின்பற்றுவோரும் நீண்ட நாட்கள் அது நிலைத்திருக்கும் என்ற  அவர்களின் தப்புக் கணக்கை, நீர்தாமே சீர் செய்து, அவர்களுக்கு தகுந்த பாடத்தைக் கற்றுக் கொடுத்து, நேரிய வழியில் உழைத்து வாழக்கூடிய, உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்: ஆனால், ஆண்டவரது திட்டமே நிலைத்து நிற்கும்

            நாம் வாழ்க்கையை எப்படியெல்லாம் வாழ வேண்டுமென பல்வேறு எண்ணங்களோடு, கனவுகளோடு இருந்தாலும், அவையெல்லாம் கடந்து இறைவனின் திருவுளம் எதுவோ, அதன்படியே நடக்கும். ஏனென்றால், நம் எண்ணங்கள், அவர் எண்ணங்கள் கிடையாது. நம் வழிகள் அவர் வழிகள் கிடையாது. அன்று, கிறிஸ்தவ மக்களை ஒழித்து விட சவுல் புறப்பட்டார். ஆனால், அவரைப்பற்றிய ஆண்டவரின் எண்ணங்களும், திட்டமும் வேறுவிதமாக அமைந்து, அவரை புறஇனத்தார்க்கு நற்செய்தி அறிவிக்கக்கூடிய பவுலாக மாற்றினார். நம் வாழ்விலும், நாம் எதை நினைத்தாலும், செய்தாலும், அதை ஆண்டவரின் கரத்தில் ஒப்புக்கொடுத்து, அவர் திருவுளம் உணர்ந்து, அதை ஏற்று வாழ்ந்திட, ஞர்னம் நிறைந்த உள்ளத்தைத் தந்தருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

நம்பிக்கைக்குரிய நண்பர்களுக்கு ஈடான செல்வம் எதுவுமில்லைஎன்ற இறைவா,

            வாழ்வில் ஆயிரம் நண்பர்கள் இருக்கலாம். ஆனால், அனைவரும் உண்மையான அன்புடன், என்ன நடந்தாலும் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கின்ற அளவிற்கு நட்பில் பிரமாணிக்கமாக இருக்கின்றார்களா, அல்லது துன்பம் வரும் போதும், நெருக்கடி நேரங்களிலும் நம்மை விட்டு ஓடிப்போகும் சுயநலமுள்ளவர்களாக, நம்மை ஏளனம் செய்வர்களாக, நம்பிக்கைத் துரோகம் செய்பவர்களாக, போலியான அன்பைக் கொடுக்கின்றார்களா என்பதையெல்லாம், அறிந்தே நாம் நட்பைத் தொடர வேண்டும். நாம் தடுமாறும்போது கரம் கொடுப்பவனும், தடம் மாறும்போது தட்டிக் கேட்பவனுமே நல்ல நண்பனாக இருக்க முடியும். தவறான நட்பை களைந்து, உண்மையான, தூய்மையான அன்பைக் கொடுத்து, நல்ல ஆலோசனைகளைத் தந்து, முறையான, நல்ல நட்பைப் பேணுகின்ற நண்பர்களை, இறைவன் நிறைவாக ஆசீர்வதித்து, காத்து வழிநடத்திட வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

 “ உன்னைப் படைத்த ஆண்டவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதேஎன்ற இறைவா,

             வளர்கின்ற இளந்தலைமுறையினர், இந்த உலகின் பொய்யான, போலியான மாயக்கவர்ச்சியில் தங்கள் வாழ்வை அடிமைப்படுத்தியவர்களாக வாழ்;ந்து கொண்டிருக்கின்றனர். இறைபக்தி, செபம், திருப்பலி, உண்மையான, பரிசுத்தமான வாழ்வு இதையெல்லாம் ஒரு கடமையாக மட்டும் கருதுபவர்களாக, தங்கள் வாழ்வை ஆடம்பர, உல்லாச வாழ்வில் தொலைத்தவர்களாக, குடி, போதை, வன்முறை இவற்றிற்கு அடிமையானவர்களாக, மாறி தங்கள் வாழ்வை சீரழித்துக் கொண்டிருக்கும் அவல நிலையிலிருந்து அவர்கள் வாழ்வை மாற்றி, உண்மைக் கடவுளாகிய உம்மையே என்றும் நாடித் தேடுபவர்களாக, உம் அன்பை உணர்ந்தவர்களாக, உண்மையான, நேர்மையான பாதையில் அவர்கள் பயணப்பட நீர் கரம் கொடுத்து வழிகாட்டிட வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல்கள், முகில்களை ஊடுருவிச் செல்லும்என்ற இறைவா,

             உள்ளத்தில் ஆணவமும், செருக்கும் நிறைந்த மனதுடன் உம்மிடம் நாங்கள் ஒப்புக் கொடுக்கும் வேண்டுதல்கள், உம் பார்வையில் அருவருக்கத்தக்கதாக காணப்படும். எங்கள் வேண்டுதல்கள் நிறைவேற அவையே தடையாகவும் இருக்கின்றன என்பதை உணர்ந்து, “தான்என்ற ஆணவத்தினை அகற்றி, உயர்வு மனப்பான்மையில்லாது, இதயத்தில் தாழ்ச்சியோடு, உமக்கேற்றவர்களாக வாழ்ந்து, எங்கள் வேண்டுதல்கள் உம்மால் நிறைவேற்றப்பட்டாலும், தாமதானாலும், இல்லையென்றாலும், “அனைத்தும் எங்கள் நல்வாழ்விற்காகவேஎன்பதை மனதார ஏற்று, எங்கள் விசுவாச வாழ்வில் உறுதியுடன் வாழ்ந்திட, வரமருள வேண்டுமென்று, இறைவா, உம்மை மன்றாடுகின்றோம்.

காணிக்கைமீது மன்றாட்டு

இரக்கமுள்ள இறைவா, 
நாங்கள் கொண்டுவரும் இக்காணிக்கைகளை அர்ச்சித்தருளும். 
நாங்கள் ஒப்புக்கொடுக்கும் இப்பலியை ஏற்றுக்கொள்வதன் வழியாக, 
எங்களையே உமக்கு என்றும் உகந்த பலிப்பொருளாக 
மாற்றியருளும். எங்கள்.

திருவிருந்துப் பல்லவி ஞானா 16:20

ஆண்டவரே, எல்லா வகையான இனிமையும் சுவையும் தன்னுள் கொண்ட உணவை விண்ணம் நின்று எங்களுக்கு அளித்தீர்.

அல்லது அரு 6:35

நானே உயிர்தரும் உணவு: என்னிடம் வருகிறவர்க்குப் பசியே இராது; என்னில் விசுவாசம் கொள்பவருக்கு என்றும் தாகம் இராது, என்கிறார் ஆண்டவர்.

நன்றி மன்றாட்டு

ஆதரித்தாளும் இறைவா, இனிமையும் சுவையும் 
தன்னகத்தே கொண்ட திருவுணவால் நிறைவுபெற்ற நாங்கள் 
மகிழ்வோடு உமக்கு நன்றி செலுத்துகிறோம். 
உம்முடைய நிலையான ஆதரவினால் நாங்கள் பற்றற்றவர்களாய் வாழவும், 
ஏழை, எளியவர்களின் பசியைப் போக்கத் தன்னலமின்றி உழகை;கவும் 
ஆற்றல் பெறுவோமாக. எங்கள்.

Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808 
Tirunelveli Dist
Tamilnadu
South India
00 91 4633 250 763
FREE Animations for Your Email - by IncrediMail! Click Here!
BANNER1.JPG
14_a_phone.gif
en2.gif
18ஆம் வாரம் ஞாயிறு - C.doc
18ஆம் வாரம் ஞாயிறு - C.pdf
Ordinary time 18th week sunday 31.07.2016 NET.pptx

Amirtha Raja Sundar

unread,
Jul 30, 2016, 3:31:36 AM7/30/16
to undisclosed-recipients
BANNER1.JPG
14_a_phone.gif
en2.gif
18ஆம் வாரம் ஞாயிறு - C.doc
18ஆம் வாரம் ஞாயிறு - C.pdf
Mass Prayers.docx
Ordinary time 18th week sunday 31.07.2016 NET.pptx
பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு.docx
Reply all
Reply to author
Forward
0 new messages