|
| |||
|
பொதுக்காலம் 33ம் ஞாயிறு 18 11 2018
திருப்பலி முன்னுரை
“விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா!” என்று உயிருள்ள வார்த்தைகளை உள்ளத்துள் விதைக்க இன்றைய பொதுக்காலம் 33ம் ஞாயிறு நம்மை அழைக்கின்றது. இன்றைய வாசகங்கள் இறுதித்தீர்ப்பு நெருங்கி வந்துவிட்டது. அவற்றிற்கு நம்மை தயாராக இருக்க, விழித்திருந்து இறைவனிடம் மன்றாடுங்கள் என்று நம்மை அழைக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில், முடிவில்லா வாழ்வு பெறவும். முடிவில்லா காலத்திற்கு ஒளிவீசித் திகழவும் இறைவனைப் பற்றிக் கொள்ள அறிவுறுத்துகிறது தானியேல் ஆகமம். காலையில் மலர்ந்து, மாலையில் மண்ணில் விழும் மலர்கள் கூட பிறர் மனம் மகிழும் வண்ணம் மணம் வீசிச் செல்கிறது. படைப்பின் சிகரமாகிய மனிதன் பிறர் மனம் மகிழும் காரியத்தை செய்வதிலிருந்து விலகி வருத்தும் காரியத்தை செய்யும்போது முடிவில்லா வாழ்வு ஒளிவீசும் வாழ்வு முடிவில்லா வாழ்வு ஒளிவீசும் வாழ்வு என்பது கேள்விக்குறிதான். ஒளிவீசும் வாழ்வு பெற இறை வழியில் இறைவனோடு இணைந்து நடப்போம். இன்றைய இரண்டாம் வாசகத்தில், பலிகள் பாவத்தைப் போக்க இயலாதவை என்கிறது எபிரேயருக்கு எழுதப்பட்ட வார்த்தைகள். நம் பாவங்களுக்காக பலிப்பொருளாகி இறைவன் வலதுபக்கம் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவையும், அவருடைய பாடுகளையும் தியானிக்கும் போது நாம் மீட்படைந்தோம் என்று விசுவாசம் நம்மில் எழுகிறது. அதை நிலைப்படுத்த, விசுவாசத்தில் அதிகப்பட இறைவனிடம் வேண்டுவோம். இன்றைய நற்செய்தி வாசகத்தில், மானிடமகன் கதவண்டை வந்துவிட்டார். தீர்ப்பு நாள் நெருங்கி வந்துவிட்டது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெளிவாக்குகிறது. தீர்ப்பு நாளின் வருகையை அறிவுறுத்துகிறது. “விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா!” என்கிறார் ஆண்டவர். ஆண்டவரின் வார்த்தைகளை மட்டும் வாய் நிறைய பேசிவிட்டு, பிறரை வாஞ்சிக்க வேண்டிய இடத்தில் வஞ்சித்ததை மறக்கின்றோம். தவறான துலாக்கோலால் எடையிட்டு பணப்பெட்டியை நிரப்பும்போது இறைவனால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. நமது குணங்கள் மேன்மையானதாகவும், நமது தொழில்கள் நேர்மையானதாகவும், நமது பாதைகள் கறைபடாதது ஆகவும் நமது உள்ளங்கள் உண்மை அன்பு உடையதாகவும் இருக்கட்டும். அவ்வாறு இருக்கும்போது தீர்ப்பு நாளுக்காக நடுங்காமல் இறைவனைக் காண்போம் என்ற மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். இச்சிந்தனைகளை மனதில் நிறுத்தி இப்பலியில் இணைவோம்.
மன்றாட்டுகள் 1. விண்ணுக்கும் மண்ணுக்கும் அரசரே! மண்ணக மக்களை விண்ணக பேரன்புக்கு வழிநடத்தும் எம் திருச்சபை தலைவர்கள், பணியாளர்கள் மீட்பு பணியில் நேரிய பாதையில் நடக்கவும், அப்பாதையில் மக்களை வழிநடத்த வேண்டிய வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 2. தந்தையின் வலப்பக்கம் அமர்ந்து ஆட்சி செய்பவரே! எம் நாட்டை ஆட்சி செய்யும் தலைவர்கள், மக்களுக்கு சேவை செய்வதில் கட்சி மனப்பான்மை, காழ்ப்புணர்ச்சி களைந்து மக்கள் நலனில் அக்கறை கொண்டு வளம் பெறும் வழிகளில் திட்டத்தை செயல்படுத்த தேவையான ஞானம் தரவேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 3. எப்போதும் விழிப்பாய் இருங்கள் என்று அழைப்பவரே! பாவ வழிகளில் பயணித்து, வாழ்வைத் தொலைத்து கொண்டிருக்கும் இன்றைய இளம் சமுதாயத்தினர் பாவத்தினை விலக்கி தெளிவான சிந்தனையைப் பெறவும், ஆவிக்குரிய வரங்களைப் பெற்று உம்மைத் தேடி வரவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 4. நம்புவோரை கைவிடாதவரே எம் இறைவா! எம் பகுதியில் தக்க காலத்தில் தேவையான மழை பொழிந்து விவசாயம் சிறக்கவும், குடும்ப தேவைகள் நிறைவடையும், சந்தோஷம் சமாதானம் நிறைந்திருக்கவும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 4. விண்ணுலக வேந்தனே எம் இறைவா! இம்மண்ணக் வாழ்வினை முடித்து விண்ணகம் நோக்கிப் பயணித்த எம் சகோதர சகோதரிகளின் பாவங்களை மன்னித்து நிலைவாழ்வை அளித்திட வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும். 5. நம்புவோரைக் கைவிடாதவரே எம் இறைவா! எம் பகுதி வாழ் மக்களை ஆசீர்வதியும். எம் பகுதியில் தேவையான மழை பொழிந்து விவசாயம் சிறக்கவும், பொருளாதாரம் மேம்படவும், குடும்ப அமைதி சந்தோஷம் நிறையவும், படிக்கும் குழந்தைகள் ஞானத்தில் அதிகப்படவும், வேலைக்காக காத்திருப்போர் உமது அருளால் பெற்று மகிழவும், திருமணம் குழந்தை வரம் வேண்டுவோர் உமது அருளால் பெற்றுக் கொள்ளும் வரம் வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம். பதில்: எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
நன்றி: ஆசிரியை. திருமதி. ஜோஸ்பின் சாந்தா லாரன்ஸ், பாவூர்சத்திரம்.
“GOD IS LOVE” Rev. Fr. Amirtha Raj Sundar J., amirs...@gmail.com; + 91 944 314 0660; www.arulvakku.com
"GOD IS LOVE" Rev. Fr. Amirtha Raj Sundar J.,
+ 91 944 314 0660;
Parish Priest,
R C Church,
PAVOORCHATHIRAM - 627 808
Tirunelveli Dist
Tamilnadu
South India
| |||
|
|