அறிவியல் ஆயிரம் : புகைப்பதற்கு இணையான பாதிப்பு
தினசரி நீண்டநேரம் கம்ப்யூட்டர் முன் பணி, பெரும்பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பவர்களுக்கு இதய பாதிப்பு, நீரிழிவு நோய், உடல் பருமன், முன்கூட்டியே இறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது. புகைப்பிடித்தல் ஏற்படுத்தும் பாதிப்புக்கு இணையாக நீண்டநேரம் அமர்வது இருக்கிறது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில் நம் உடல், நீண்டநேரம் உட்காரும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. நீண்டநேரம் அமர்வதால் ரத்த ஓட்டம் குறைகிறது. கொழுப்பை எரிக்கும் நொதிகள் நிறுத்தப்படுகின்றன. இன்சுலினும் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்:தேசிய நாளிதழ் தினம்
ஜனநாயகத்தின் நான்காவது துாண் நாளிதழ். உண்மை தகவல்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரிவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மாணவர்கள் அறிவு, வாசிப்பு திறனை அதிகரிக்க நாளிதழ் படிப்பது அவசியம்.1780 ஜன.29ல் 'ஹிக்கிஸ் பெங்கால் கெசட்' வார இதழ் கோல்கட்டாவில் வெளியானது. இது இந்தியா, ஆசியாவின் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள். ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி இதை தொடங்கினார். இதை நினைவுப்படுத்துதல், நாளிதழின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தியாவில் ஜன. 29ல் தேசிய நாளிதழ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.