அறிவியல் ஆயிரம் : திமிங்கல வேட்டையின் காலம்
கடல்வாழ் உயிரினங்களில் பெரியது திமிங்கலம். இதில் பல வகைகள் உள்ளன. இவை இறைச்சி, எண்ணெய் உள்ளிட்ட தேவைகளுக்காக வேட்டையாடப் படுகின்றன. திமிங்கலங்கள் வேட்டையாடப்படுவது, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தொடங்கிஉள்ளது என பிரேசிலில் கிடைத்த தொல்பொருள் எச்சங்கள் மூலம் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதற்காக பயன்படுத்திய பிரத்யேக கருவிகளையும் ஆய்வில் கண்டறிந்தனர். இது விஞ்ஞானிகள் ஏற்கனவே கணித்ததை விட 1000 ஆண்டு முந்தையதாக இருக்கிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம் : பறவைகளின் அரசன்
கழுகு இனங்களில் 80 வகை உள்ளன. இதில் 80% ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்காவில் வாழ்கின்றன. கடல் கழுகுகள், கால் வரை ரோமம் உள்ளவை, பாம்பு உண்பவை, ராட்சச என 4 வகைகள் முக்கியமானவை. இதன் பார்வை மிக துல்லியமாகவும், நீண்ட துாரத்துக்கு (மனிதர்களை விட 8 மடங்கு அதிகம்) இருக்கும். இதன் 'பிடி' மனிதர்களை விட 10 மடங்கு அதிகம். இறகுகளின் நீளம் 7.5 அடி. இது 15 ஆயிரம் அடி உயரம் பறக்கும். 100 அடி உயரத்தில் கூடு கட்டும். சராசரி ஆயுட்காலம் 35 ஆண்டுகள். மணிக்கு 60 - 200 கி.மீ., வேகத்தில் பறக்கும். இது 'பறவைகளின் அரசன்' என அழைக்கப்படுகிறது.