அறிவியல் ஆயிரம்:விமானத்துக்கு ஏற்ற நிறம் எது
அதிவேக போக்குவரத்துக்கு விமானம் பயன்படுத்தப் படுகிறது. பெரும்பாலான விமானத்தின் வெளிப்புற நிறம் வெள்ளை தான்.
இது நிதி, பாதுகாப்பு, வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளிட்டவை அடிப்படையில் தீர்மானிக்கப் படுகிறது. ஏனெனில் விமானம் பறக்கும் போது சூரிய ஒளியை அதிகம் எதிர்கொள்கிறது.
எனவே சூரியனின் புற ஊதாக்கதிர்களால், மற்ற நிறங்கள் விரைவில் மங்கி விடும். மேலும் வெப்பத்தை உள்வாங்குவதால் விமானம் சூடாகும் வாய்ப்பு உள்ளது. ஆனால் வெள்ளை நிறம், ஒளியின் அலைநீளத்தை பிரதிபலித்து வெப்பம் உள்வாங்காமல் தடுக்கிறது.
தகவல் சுரங்கம்:ஆரவல்லியின் அற்புதம்
உலகின் பழமையான மலைகளில் ஒன்று ஆரவல்லி மலைத்தொடர். இது தென் மேற்கு திசையில் 670 கி.மீ., துாரத்துக்கு பரவியுள்ளது.
டில்லியில் தொடங்கி ஹரியானா, ராஜஸ்தான் வழியாக குஜராத்தின் ஆமதாபாத்தில் நிறைவடைகிறது. இம்மலைத்தொடரில் உயரமான சிகரம் 'குரு சிஹார்'. சராசரி கடல்நீர் மட்டத்தில் இருந்து இதன் உயரம் 5650 அடி. ஆரவல்லி மலையில் இருந்து பனாஸ், சாஹிபி, லுனி ஆறுகள் உற்பத்தியாகின்றன.
இம்மலைத்தொடரில் ராஜஸ்தானில் உள்ள'மவுன்ட் அபு' மலைப்பகுதி சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இதன் மக்கள்தொகை 23 ஆயிரம்.