அறிவியல் ஆயிரம் : பனி இல்லாத நாடுகள்
பூமியின் வட, தென் துருவங்களுக்கு இடையே, நடுப்பகுதியில் பூமியைச் சுற்றி வரும் ஒரு கற்பனைக் கோடு தான் நிலநடுக்கோடு. இதன் அருகிலுள்ள கொலம்பியா, பிரேசில், உகாண்டா, மாலத்தீவு, இந்தோனேஷியா, கிரிபாதி உள்ளிட்ட நாடுகளில் ஆண்டு முழுவதும் சூரிய ஒளி கிடைப்பதால் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ்க்கு மேல் இருக்கும். இதனால் இப்பகுதிகளில் பனிப்பொழிவு இருக்காது. பனி என்பது மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் உறைந்து பனிக்கற்களாக மாறும்போது உருவாகிறது. வெப்பநிலை குறைவாக இருக்கும்போது மட்டுமே இது நிகழும்.
தகவல் சுரங்கம் : உலக மக்கள்தொகை, குதிரை தினம்
* மக்கள்தொகையை கட்டுப்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக மக்கள்தொகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1987 ஜூலை 11ல் உலக மக்கள்தொகை 500 கோடியை தொட்டது. இதை நினைவுபடுத்தும் விதமாக இத்தினம் தொடங்கப்பட்டது. 1950ல் 253 கோடியாக இருந்த மக்கள்தொகை 2021ல் 790 கோடியானது. 2050ல் 970 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* விளையாட்டு, தொழில்துறையில் குதிரைகள் முக்கிய பங்காற்றுகிறது. இதை வெளிப்படுத்த ஐ.நா., சார்பில் ஜூலை 11ல் உலக குதிரை தினம் கடைபிடிக்கப்படுகிறது.