அறிவியல் ஆயிரம்
உச்சத்தில் கார்பன் வெளியீடு
பூமி வளிமண்டலத்தில் 2025 மே மாத சராசரி கார்பன் வெளியீடு, 10 லட்சத்துக்கு 430.2 பி.பி.எம்., என்ற அளவுக்கு (1 பி.பி.எம். என்பது ஒரு லிட்டரில் ஒரு மில்லி கிராம்) அதிகரித்துள்ளது. இது 1958ல் கார்பன் வெளியீடு பதிவு செய்ய தொடங்கியதில் இருந்து, இதுவே அதிகம் என அமெரிக்காவின் ஸ்கிரிப்பர்ஸ் கடலியல் நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது. கார்பன் வெளியீடு அதிகரிப்பது, வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது. இது தொடர்ந்தால் தாங்க முடியாத வெப்பநிலையை மக்கள் சந்திக்க நேரிடும். மேலும் பல்வேறு உடல்நல பாதிப்புக்கும் வழிவகுக்கிறது.
தகவல் சுரங்கம்
பிரமாண்ட பிரம்மபுத்திரா
சீன கட்டுப்பாட்டிலுள்ள திபெத்தில் கைலாஷ் மலை அருகே மானசரோவரில் உருவாகி, இந்தியாவின் வடகிழக்கில் அசாம், அருணாச்சல், மேகாலயாவில் பாய்ந்து, வங்கதேசத்தில் கங்கையுடன் இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது பிரம்மபுத்திரா நதி. நீளம் 2880 கி.மீ. உலகின் நீளமான நதிகளில் 15வது இடத்தில் உள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. பிரம்மபுத்திரா குறுக்கே இந்தியா 4 அணை கட்டியுள்ளது. இந்தியா - ரஷ்யாவின் கூட்டு தயாரிப்பான 'பிரம்மோஸ்' ஏவுகணைக்கு இந்தியா சார்பில் பிரம்மபுத்திரா பெயர் (ரஷ்யா சார்பில் மோஸ்க்வா நதி) சூட்டப்பட்டுள்ளது.