அறிவியல் ஆயிரம்:வானிலை - காலநிலை வித்தியாசம்
வானிலை, காலநிலை இரண்டும் வெவ்வேறானது. வானிலை என்பது குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறுகிய நேரத்துக்குள் (24 மணி) நிலவும் வளிமண்டலத்தின் நிலை. அவை வெப்பம், காற்றழுத்தம், ஈரப்பதம், மழையளவு, மேகமூட்டம், காற்றின் வேகம், திசையால் வரையறுக்கப்படுகிறது.
இதன் வேறுபாடுகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் விழும் சூரிய கதிரின் கோணத்தை பொறுத்து அமைகிறது. இவை வெப்ப மண்டலத்திலிருந்து ஒவ்வொரு அட்ச ரேகைக்கும் வேறுபடுகிறது. காலநிலை என்பது நீண்டகாலத்தில் (பத்தாண்டு முதல் நுாற்றாண்டு) ஒரு பெரும் பரப்பளவில் காணப்படும் வானிலை சராசரி.
தகவல் சுரங்கம்:தேசிய இளைஞர்கள் தினம்
இளைஞர்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய சுவாமி விவேகானந்தர், 1863 ஜன., 12ல் கோல்கட்டாவில் பிறந்தார். இவரது பிறந்த தினம், தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. சிறுவயதிலேயே ஆன்மிக சிந்தனை கொண்ட இவர் பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். 1881ல் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தார்.
1886ல் துறவியாக மாறினார். 'துறவிகள் என்றால் சாது மட்டுமல்லாமல் வீரமாகவும் இருக்க வேண்டும்' என்பார். இந்தியா முழுதும் சென்று பண்பாடு, கலாசாரம் குறித்து போதித்தார். அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் சொற்பொழிவு நடத்தியுள்ளார்.