அறிவியல் ஆயிரம் : ஆழ்கடலிலும் பிளாஸ்டிக்
பூமியில் மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் எல்லாம் பிளாஸ்டிக் நுண் துகள்கள் சென்றடைந்து விட்டன. கடலில் 2500 அடி ஆழத்தில் வாழும் நத்தைகள், சிப்பிகள் உள்ளிட்ட உயிரினங்களிடம் தென்கொரிய உயிரி அறிவியல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் 92 சதவீத உயிரினங்களிடம் பிளாஸ்டிக் நுண்துகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அளவு என்பது தென்மேற்கு பசிபிக் கடலில் உள்ள வடக்கு பிஜி படுகையை விட, இந்திய பெருங்கடலில் உள்ள மத்திய இந்திய பெருங்கடல் முகட்டில் 14.7 மடங்கு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் சுரங்கம் : நீர்நிலைகளில் இருந்து பாதுகாப்பு
உலகில் ஆண்டுதோறும் 2.36 லட்சம் பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். இதை தடுக்க வலியுறுத்தி ஐ.நா. சார்பில் ஜூலை ௨௫ல் நீர்நிலைகளில் இருந்து பாதுகாப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. நடுத்தர வருமானம் உடைய நாடுகளில் ஆறு, ஏரி, கிணறு, வீடுகளில் உள்ள நீர் பிடிப்பு தொட்டிகள் போன்றவற்றில் தான் 90 சதவீத உயிரிழப்புகள் நிகழ்கின்றன. நீச்சல், நீர் பாதுகாப்பு, நீர்நிலைகளில் இருந்து மீட்கும் பணி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். கப்பல், படகு பயணங்களில் பாதுகாப்பு உபகரணங்களை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.