அறிவியல் ஆயிரம் : டைட்டானிக் 'லைப் ஜாக்கெட்' ஏலம்
'டைட்டானிக்' கப்பல் 1912 ஏப்., 15ல் அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. 1500 பேர் பலியாகினர். 700 பேர் காப்பாற்றப்பட்டனர். இக்கப்பலில் உயிர் பிழைத்த பயணிகள் அணிந்திருந்த 'லைப் ஜாக்கெட்' அமெரிக்காவில் சமீபத்தில் ரூ.8.39 கோடிக்கு ஏலம் போனது. நீர்நிலைகளில் பயணிக்கும் போது 'லைப் ஜாக்கெட்' அவசியம். இவை மிதப்புத்தன்மை தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும். இதிலுள்ள பிரத்யேகப் பொருட்கள் நம் உடல் எடையை விட அதிக மிதப்பு விசையை ஏற்படுத்தி தண்ணீரில் மூழ்காமல் தலைப்பகுதியை மேல் நிறுத்தி பாதுகாக்கிறது.
தகவல் சுரங்கம்
குடிமை பணிகள் தினம்
இந்தியாவின் வளர்ச்சியில் ஐ.ஏ.எஸ்., / ஐ.பி.எஸ்., / ஐ.ஆர்.எஸ்.,/ ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீஸ் (குடிமை பணி) அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. 1947 ஏப்., 21ல் டில்லி 'மெட்கால்பே' இல்லத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், சிவில் சர்வீஸ் அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) உரையாற்றினார். இதை நினைவுபடுத்தும் விதமாக 2006ல் ஏப். 21ல் தேசிய குடிமை பணிகள் தினம் தொடங்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு பணியாற்றும் சிவில் சர்வீஸ் அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.