அறிவியல் ஆயிரம் : வருகிறது வால் நட்சத்திரம்
'சி/2026 ஏ1 (மேப்ஸ்)' எனும் வால் நாட்சத்திரம் 2026 ஜன. 13ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது 2026 ஏப். 4ல் சூரியனுக்கு அருகில் (1.62 லட்சம் கி.மீ., துாரம்) கடந்து செல்ல உள்ளது. அப்போது பிரகாசமாக காட்சியளிக்கும். வால் நட்சத்திரம் என்பது சூரிய குடும்பம் உருவான போது எச்சங்களே. இது விண்வெளி பாறை, பனிக்கட்டிகளால் ஆன கோள வடிவில் ஆனது. வால் நட்சத்திரங்கள் நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனை நெருங்கும் போது அவற்றுக்கு வால் போன்ற பகுதி தோன்றுகிறது. இது வால் நட்சத்திரத்தில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவதால் தோன்றுகிறது.
தகவல் சுரங்கம் : பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம்
பிளாஸ்டிக், மின்னணு உள்பட பல்வேறு பொருட்களின் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்ய வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மார்ச் 30ல் உலக பூஜ்ஜிய கழிவு மேலாண்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் ஆண்டுக்கு 230 கோடி டன் திட கழிவு மனிதர்களால் உருவாக்கப்படுகிறது. இதில் 55 சதவீதம் மட்டுமே முறையாக மேலாண்மை செய்யப்படுகிறது. 2050ல் இந்த எண்ணிக்கை 388 கோடி டன்னாக உயரும் என ஐ.நா., மதிப்பிட்டுள்ளது. 2040ல் ஆண்டுக்கு உணவு கழிவு 93 கோடி டன், பிளாஸ்டிக் கழிவு 3.7 கோடி டன் கடலில் கலக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.