அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் வெப்பநிலை
தொழில்புரட்சிக்கு முந்தைய சராசரியை விட, 2026 - 2030 இடையிலான உலகின் சராசரி வெப்பநிலை, 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க 75% வாய்ப்புள்ளது என ஐ.நா., பிரிட்டன் வானிலை அமைப்புகள் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. 'பூமியின் வெப்பமான ஆண்டு - 2024' என்பதை, இந்த ஐந்து ஆண்டுக்குள் ஏதாவது ஒரு ஆண்டு முறியடிப்பதற்கு 86% வாய்ப்பு உள்ளது என உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலையால் உணவுப்பொருள் உற்பத்தி பற்றாக்குறை, காட்டுத்தீ உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : உலக சைக்கிள் தினம்
சைக்கிள் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 3ல் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினமும் நடை, ஓட்டம், விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல் என ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. இதிலும் நடை, சைக்கிள் பயிற்சி ஆகியவை இதய பாதிப்பு, பக்கவாதம், புற்றுநோய், நீரிழிவு பாதிப்புகளை தடுக்கிறது. சைக்கிளுக்கு எரிபொருள் தேவையில்லை என்பதால் செலவும் இல்லை. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் உதவுகிறது. 'பசுமையான எதிர்காலத்துக்காக சைக்கிள் பயணம்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.