அறிவியல் ஆயிரம் : விவசாய கழிவுகளில் கட்டுமானம்
இந்தியாவில் விவசாயத்தில் இருந்து ஆண்டுக்கு 10 கோடி மெட்ரிக் டன், உயிரி (பயோமாஸ்) கழிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் இதை பயனுள்ள வகையில் மாற்றுவது தொடர்பாக மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். இதில் நெல் உமி, கரும்புச் சக்கை கழிவுகளை வெப்ப -வேதியியல் முறைக்கு உட்படுத்தி 'பசுமை கான்கிரீட்' தயாரிப்பில் சிமெண்ட்டுக்கு பதில், ஒரு பாதியாக பயன்படுத்தலாம் என கண்டறிந்தனர். இதனால் சுற்றுச்சூழல் பாதுகாப்பதுடன், கழிவு மேலாண்மை, வளங்கள் மறுபயன்பாட்டை மேம்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : சூரியகாந்தி பூக்களின் நிலம்
சூரியகாந்தி பூக்களின் நிலம்
'சூரியகாந்தி' தாவரத்தின் பூர்வீகம் அமெரிக்க நாடுகள். இங்கிருந்து ஐரோப்பா, உலகளவில் பரவின. உலகில் 'சூரியகாந்தி' உற்பத்தியில் ஐரோப்பிய நாடான உக்ரைன் முன்னணியில் உள்ளது. இதனால் 'சூரியகாந்தி பூக்களின் நிலம்' என அழைக்கப்படுகிறது. சூரியகாந்தி செடியின் உயரம் 10 அடி. இதன் இலை அகலமாக இருக்கும். இதன் பூ தனியாக இல்லாமல், ஒரு பூங்கொத்து போல இருக்கும். சூரியன் திசை நோக்கி திரும்புவதே இதன் தனிச்சிறப்பு. இதன் விதைகள் உணவாகவும் பயன்படுகிறது. மேலும் இதிலிருந்து சமையலுக்கான சூரியகாந்தி எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.