கட்டுரை
‘தமிழ் மொழி வளர்த்தல்’ - ஓர் இலக்கியப் புலனாய்வுக் கட்டுரை
ts('body',1)
ts('body',-1)
ஆ.இரா. வேங்கடாசலபதி
‘தமிழ் மொழி வளர்த்தல் அல்லது தமிழ் பாஷையை அபிவிர்த்தி செய்யும் மார்க்கங்கள்’ என்றொரு
நெடுங் கட்டுரையைப் ‘புலமை’ ஆய்விதழ் முப்பது ஆண்டுகளுக்கு முன் (1983 ஜூன்) மறு
வெளியீடு செய்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்றப்பட்ட ஒரு பொதுச் சொற்பொழிவே
அக்கட்டுரை. தமிழை வளர்ப்பதற்குப் பல வழிகளை முன்வைத்த அவ்வுரை ‘சுயபாஷையில் கல்வியை
வளர்க்குதல் யாவருக்கும் இனிதே’ என்று தொடங்கியது. வடமொழி சிறந்த அறிவு
மொழியேயாயினும் அது பண்டித மொழி என்றும், மாறாகத் தமிழோ ‘முற்காலத்தைப் போல
இப்பொழுதும் ஜனங்களுக்குத் தாய்ப் பாஷையாக இருக்கிறது’ என்றும், ‘நம்மைப் பெத்ததும் தமிழ்,
வளர்த்ததும் தமிழ், நம்மைத் தாலாட்டி தூங்கவைத்ததும் தமிழ்’ என்றும், ’எத்தனைதான் அங்கிலேயம்
முதலிய அன்னிய பாஷைகளைப் படித்தாலும், வீட்டில் வந்தால் நமக்குத் தமிழன்றி வேறொன்றுக்கும்
இடமில்லை’ என்றும் தமிழின் சிறப்பை விதந்தோதித் தொடர்ந்தது அக்கட்டுரை. ‘நெடுங்காலம்
சிறப்புற்றோங்கி வருகிற இம்மகா பாஷை’யை இக்காலத்தில் வளர்க்க முடியாது என்போரை
‘வெற்றுரை பிதற்றுவோர்’, ‘பித்தர்’ என்றும் உரையாளர் கடிந்தார். ஆயினும் தமிழ் ஏன்
தற்காலத்தில் வீழ்ந்துபட்டது என்ற ஆராய்ச்சியைத் தொடர்ந்தவர், தமிழ் மக்கள் ‘அங்கிலேய பாஷை
கற்கப் போவது நமது சுயபாஷையைத் தலையெடுக்க வொட்டாமற் செய்கின்றது’ என்று கவலைப்பட்டார்.
இருப்பினும் ஆங்கிலம் படித்தும் அந்நன்றியைக் கொன்றவராகத் தம்மை எவரும் கருதிவிட வேண்டாம்
என்று ‘தாழ்மையாய் எச்சரிக்கை’ செய்து கொள்ளவும் அவர் தவறவில்லை.
அதுவரை பேசியதை மூன்று புள்ளிகளாகச் சுருக்கிச் சொல்லி விட்டு, ‘தமிழ் நம் தாய்
பாஷையாயிருப்பதனாலே, தமிழ்மொழி விர்த்தி செய்வதற்கு ஏற்ற பாஷையாயிருப்பதனாலே, அது
பல காரணங்களால் தற்காலம் கை தாழ்ந்து வருவதனாலே’, அதனை எவ்வழிகளில் முன்னேற்றுவது
என்பதை அடுத்து அவர் விரித்துரைக்க முற்பட்டார்.
முதலாவதாக அவர் பரிந்துரைத்த வழி, ‘நம் தேசத்துச் சிறுவர் களுக்குத் தமிழ் பாஷையில்
உயர்தரக் கல்வி பயிற்றுவிக்கும்படி தகுந்த ஏற்பாடுகளுடன் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள்
ஸ்தாபிப்பது.’ அன்றுள்ள நிலையில் ஆங்கிலமே தலைமையிடம் பெற்றிருக்க, மாணவன்
‘அதுவரைக்குந் தமிழில் வாசித்த இம்மியை அபக்கென்று வெளியே கக்கிவிட்டு’, எப்படியோ
பரிந்துரை பெற்று ஓர் அரசாங்க அலுவலகத்தின் ‘ஏதாவது ஒரு மூலையில் முடங்கிக்கொண்டு
வெள்ளைக் காகிதத்தில் இறகு ஓட்டும் விஷயத்தில் தன் சாமர்த்தியத்தையெல்லாம் செலுத்துகிறான்.
விளைவு, அதுவரை படித்த ஆங்கிலத்தினால் ஒரு பயனும் இல்லை. ‘தான் இங்கிலீஷில் அறிந்த
அறிவை ஜனங்களுக்குத் தமிழிலெடுத் துரைத்து ஜனோபகாரம் செய்யலா மொன்றாலோ, அதற்கு அவன்
தமிழென்ற பெருவழியில் நடமாடின தேயில்லை.’
இந்த நிலையில் படிப்பதற்குக் குழந்தைகள் இல்லையென்றால் தமிழாசிரியர்கள் என்ன செய்வார்கள்?
‘தமிழ்நாடு முழுவதும் தமிழ் பாஷையாகிய சுயபாஷையை விட்டு, பிற பாஷையும் கெட்டு,
ஜனங்கள் அல்லோல கல்லோலமடைகிறார்கள்.’ தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் மூடப்படுகின்றன. இந்த
நிலையில் ‘இதுவோ தேசாபிமானம்’ ‘இதுவோ பாஷாபிமானம்’ என்று அரற்றிய உரையாளர்,
‘தமிழ்ப் பாடசாலைகளை எங்கும் ஸ்தாபிப்பதையே’ தமிழை வளர்ப்பதற்கு முதல் வழியாக முன்வைத்தார்.
இரண்டாவது வழி, ஆங்கில அரசாங்கம் நிறுவிய பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும்,
‘இப்போதிருப்பதைப் பார்க்கிலும் (தமிழை) அதிகமாகப் பயிற்றுவிக்கும்படி ஏற்பாடு செய்தல்.’
ஏனெனில் ‘பதினைந்து நாழிகையில் ஒரு நாழிகை’கூட நல்ல முறையில் தமிழ்
பயிற்றுவிக்கப்படுவதில்லை. இப்படியிருந்தால் இவர்களுக்கு எப்படி ‘தமிழ் மாது கடாக்ஷம்
செய்யப்போகிறாள்’ என்றும் அவர் ஐயுற்றார்.
‘எவ்வளவுக்குக் கற்றாலும் (ஆங்கிலத்தில்) பிழையறப் பேசுவதும் எழுதுவதும் அரிது. நாம்
எவ்வளவு வாசித்தாலும் நம்மை அங்கிலேயர் அதிலிலொரு பொருட்டா யெண்ண மாட்டார்கள். அவர்
அதில் நம்மையொரு பொருட்டாயெண்ணுவது நமக்கொரு பெருமையுமல்ல. எண்ணாதது ஒரு
குறைவுமல்ல’ என்று எச்சரித்ததோடு, ‘நாம் அங்கிலேயம் படிப்பது காலசேஷபத்திற்காகவும்
அறிவு விர்த்திக்காகவுமே’ என்று வெளிப்படையாகவே அதன் நடைமுறைப் பயன்பாட்டை,
முக்கியமாக வயிற்றுப் பாட்டுக்கான வழி என்பதை உரைத்தார்.
ஆங்கிலத்துக்கும் கிரேக்க, லத்தீன் மொழிகளுக்குமான உறவைப் பற்றி அடுத்துப் பேசிய அவர்
வடமொழிக்கும் இந்திய மொழிகளுக்குமான உறவைப் பற்றிப் பின்வருமாறு உரைத்தார்.
‘இங்கிலீஷ்க்கு கிரீக், லித்தீன் போலவே நமது சுயபாஷைகளுக்கு சகாயமாக ஸம்ஸ்கிருதம்
ஏற்பட்டிருக்கின்றது. அதன் உதவியில்லாமலே விர்த்தியடையக் கூடிய நமது தமிழுக்கு அதன்
உதவியுமிருந்தால் விர்த்தியடையத் தடையென்ன?’ என்றும் வினவினார்.
தமிழை வளர்க்கும் பணியை மேற்கொள்ள வேண்டியவர்கள் ‘இங்கிலிஷில் அறிவு பயின்று
வித்தியாப்பியாச பட்டங்கள் பெற்ற கனவான்களே!’ என்பதில் உரையாளருக்கு எந்த ஐயமுமில்லை
என்பதை வியப்புக்குறி போட்டு அழுத்தமாகச் சொல்லிவிடுகிறார். ஆனால், அந்தக்
கடமையிலிருந்து தவறி ‘கவர்ன் மெண்டிடத்தில் கூழைக் கும்பிடு போடும்’ அவர்களுடைய
‘துரோக’த்தையும் அவர் கண்டிக்கத் தயங்கவில்லை.
கல்வி கற்ற அறிவாளர்கள் செய்ய வேண்டிய முக்கியப் பணியாக அவர் கருதியது
‘இங்கிலிஷிலிருக்கும் சாஸ்திர சம்பந்தமான... புஸ்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தல்’ என்று
அறிவியல் நூல்களைத் தமிழாக்க வேண்டியதற்கு முன்னுரிமை வழங்கினார். ‘நாம் இங்கிலிஷ்
கற்பதெல்லாங்கூடி அதிலடங்கிய அறிவுக்காகவேயன்றி பாஷைக்காகவன்று’ என்ற தெளிவும்
அவருக்கு இருந்தது.
அடுத்து செய்ய வேண்டிய முக்கியப் பணி என்று அவர் கருதியது, ‘இந்நாளும் உலகத்திற்கு
மறைபொருளாக இருந்து வரும் பழய அரிய தமிழ்க் கிரந்தங்களை அச்சிட்டு வெளிப்படுத்தல்’.
காலப்போக்கில் யாருக்கும் உதவாமல் மறைந்துபோகும் பல்லாயிரம் நூல்களைப் பற்றிக் கவலைப்பட்ட
சொற்பொழிவாளர், சரவணப் பெருமாளையர், ‘தமிழ்மொழியை இரக்ஷிக்கத் துஜங்காட்டிய... சி.வை.
தாமோதரம் பிள்ளை’, ‘தமிழுக்குச் சலியாத பரிபாலகராக இருக்கும்... வே. சாமிநாதய்யர்’
ஆகியோர் இதன் தொடர்பில் செய்துவந்த தொண்டை மிகவும் போற்றினார்.
பழைய நூல்களை மட்டும் வெளியிட்டால் போதாது, தமிழில் புதிய நூல்களையும் இயற்ற வேண்டும்
என்பது அவருடைய கருத்து. உலகின் அறிவைப் பெறவும், நம்மவர் அறிவைப் பரப்பவும் இது
இன்றியமையாதது. ஆன்மிகத் துறைகளில் பெரும் அறிவு பெற்றிருந்த நம் முன்னோர் இம்மை சார்ந்த
அறிவியலில் முன்னேறவில்லை என்ற பழி இதனால் நீங்கும். ‘ரயில் வண்டியும், சமாசாரத்
தந்தியும், அச்சுயந்திரமுமே’ இதற்குப் போதுமான சாட்சியாகும்.
அறிவியல் நூல்களை இயற்றுவதற்கும் தமிழாக்குவதற்கும் ‘சில வார்த்தைகள் போதாவிட்டால்
அவைகளுக்கு நம் வடமொழியிலிருந்து பதங்கள் எடுத்து உபயோகித்துக்கொள்வது சாத்தியமே’
என்று கருதிய அவர், தமிழில் புதிய நூல்களை இயற்றுவதற்குப் பெருந்தடையாக உள்ளது
உரைநடை இல்லாததே என்றும் கருதினார். ‘செய்யுள் நடை, அறிவில் உண்மையைத் தனியாயுணர்த்தும்
துல்லியம் பெறுதற்கு இடையூறுகளான கடின நடை; எதுகை, மோனை, அலங்காரம், தளையென்னும்
பலவிதத் தடைகளையுடையது’. எனவே செய்யுளைக் கைவிட்டு உரைநடையைக் கைக்கொள்ள வேண்டும்.
அப்படி எழுதும்போது காலத்திற்கும் விஷயத்திற்கும் ஏற்றபடி, புதிதாய் வார்த்தைகள் பிறந்து
நடைபெற்று உலாவும்’ என்று உரையாளர் நம்பினார். பயன்படுத்தப் பயன்படுத்தவே மொழி கூர்மை
பெறும். இப்படித்தான் ஆங்கிலமும் ‘எள்ளுக்காய் பிளந்தது போல் சரிதுல்லியமாய் உரைப்பதற்கு
ஏற்ற பாஷையாகிவிட்டது’.
நூல்கள் பெருக வேண்டுமென்றால் அவற்றை இயற்றுவோரை ஆதரிப்பவர் பெருக வேண்டும். தமிழுக்கு
ஆதரவு குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் தமிழ் கற்றோர் குறைவாக இருப்பதுமாகும்.
மேலும், பலப்பல அச்சுக் கூடங்கள் நிறுவப்பட வேண்டும். ஏனெனில் அச்சுயந்திரங்கள் ‘தமிழ்
பாஷையாகிய திவ்ய ஆலயத்தைத் தாங்கும்’ தூண்களாகும்!
இதற்கடுத்து ‘பத்திரிகைகள் உதித்து, நடைபெற்று, தமிழுலகத்திலெங்கும் உலாவிப் பரவுதல்’
தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாததாம். ஆனால், தமிழ்நாட்டில் 1,500 சந்தாதாரர்கள் கொண்ட
பத்திரிகை ஒன்றுகூட இல்லை என்ற சொற்களை உரைத்தபோது சொற்பொழிவாளர்க்கு வெட்கம் மேலிட்டது.
தமிழ் நூலகங்கள் இல்லாதது மற்றொரு குறை. தமிழ் வளர்ச்சியைப் பற்றிக் கலந்து
பேசுவதற்குரிய மன்றங்களும் தமிழ்நாட்டில் இல்லை. இந்தியர்களின் அரசியல் உரிமையைப் பற்றிப்
பேச காங்கிரஸ் என்ற அமைப்பு தோன்றியிருந்தாலும், இதற்கு இன்றியமையாத சாதனமான ‘சுதேச
பாஷாபிவிர்த்தி’ பற்றிப் பேச எந்தக் கூட்டமும் இல்லை என்றும் சொற்பொழிவாளர் வருந்தினார்.
தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான வழிகளை முன்மொழியும் கட்டுரை இது என்பதில் இருவேறு
கருத்துகளுக்கு இடமிருக்க முடியாது. இதற்கு மேலும் பல சிறப்புகள் கொண்டது இவ்வுரை
என்பதைக் கற்றார் உணர்வர்.
தமிழை ஒரு பெண்ணாக உருவகித்துத் ‘தமிழ் மாது’ என்று சி.வை. தாமோதரம் பிள்ளை தம்
கலித்தொகைப் பதிப்புரையில் (1887) முதன் முதலில் குறிப்பிட்டது போலவே இவ்வுரையாளரும்
‘தமிழ் மாது’ என்ற உருவகத்தைக் கையாண்டிருக்கிறார். பெ. சுந்தரம் பிள்ளை மனோன்மணியம்
தமிழ்த் தாய் வாழ்த்தில் ‘தமிழணங்கு’ என்று 1891இல் கையாள்வதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
அதே கலித்தொகை பதிப்புரையில், ‘தேசாபிமானம் மதாபிமானம் பாஷாபிமானமென்று
இவையில்லாதார் பெருமையும் பெருமையோ!’ என்று சி.வை. தாமோதரம் பிள்ளை வருந்தி
எழுதியதில் கையாண்ட ‘பாஷாபிமானம்’ (’மொழிப் பற்று’, ‘தாய்மொழிப் பற்று’) என்ற தொடரும்
முதன்முதலில் தமிழில் வழங்கத் தலைப்படுகின்ற காலத்தில் இவ்வுரையாரும் பன்முறை
‘சுயபாஷாபிமானம்’ என்ற தொடரைக் கையாள்வதைக் காண முடிகின்றது.
தெளிவான கருத்துகளை, ஆற்றொழுக்கான நடையில், நடைச் சிறப்புடன், இடையிடையே அமைந்த
பழமொழிகளுடன், உரிய இடங்களில் உணர்ச்சிப் பெருக்குடன் அமைந்த இந்த உரையை ஆற்றியவர் யார்?
நீண்ட இந்த உரையை முதன்முதலில் மறுவெளியீடு செய்து தமிழுலகுக்கு அதனை மீள் அறிமுகம்
செய்துவைத்த ‘புலமை’ ஆசிரியர் பேராசிரியர் பொன். கோதண்டராமன் (பொற்கோ) அவர்களாலும்
இத்தகவலை அறிய முடியவில்லை என்பது அதன் முகப்பில் அமைந்த பின்வரும் குறிப்பு காட்டுகிறது.
“தமிழ் வளர்ச்சி நோக்கில் அமைந்துள்ள இந்தக் கட்டுரை ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு
வெளிவந்ததாகத் தெரிகிறது. இன்றைய சூழலிலும் இந்தக் கட்டுரை பயன்படத்தக்கதாக இருப்பதால்
இதை மறு வெளியீடு செய்கிறோம். இதை வெளியிட வாய்ப்பளித்த திரு ப. இராமச்சந்திரன்
(தமிழ்த் துணைப் பேராசிரியர், பெரியார் கல்லூரி, திருச்சி) அவர்கட்கும், மறைமலையடிகள்
நூலகத்தார்க்கும் ‘புலமை’ நன்றி கூறுகிறது.” (‘புலமை’, 9 (1), சூன் 1983)
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆற்றிய உரை என்பதும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த
ஒருவர் அந்நகரில் அமைந்த ஒரு மன்றத்தில் அதனை நிகழ்த்தினார் என்பதையும் படித்த அளவில்
அறியக்கூடிய உரை ஒரு நூற்றாண்டுக்குப் பின்னும் பொருத்தமுடையதாக இருப்பதைக் கண்டு
வருந்துவதா, இவ்வளவு தொலை நோக்கோடு அவர் பேசியிருக்கிறாரே என்று வியப்பதா என்ற ஈரடி
நிலையிலும் உரையாற்றியவர் யார், எப்பொழுது உரையாற்றினார் என்பன புதிராகவே
இருந்துவந்துள்ளன.
பேராசிரியர் பொற்கோ அவர்களை உசாவியபொழுது, முகப்புப் பக்கங்கள் இல்லாத, அச்சிட்ட துண்டு
வெளியீடு ஒன்றை மறைமலையடிகள் நூல்நிலையத்திலிருந்து
ப. இராமசந்திரன் அவர்கட்குக் கிடைக்கப்பெற்றதென்றும், அதனைக் கொண்டே தாம் மறுவெளியீடு
செய்ததாகவும் உறுதிப்படுத்தினார். இந்த உரையின் தொடர்ந்த பொருத்தப்பாட்டை உணர்ந்த அவர்,
சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற காலத்தில் அதன் பதிப்புத் துறை
வழியே அதனைத் தனி நூலாகவும் 2002இல் வெளியிட்டார். அப்பொழுதும் அதன் ஆசிரியரை
இனங்காண முடியவில்லை. ஆயினும், அச்சிறு நூலுக்கு எழுதிய முகப்புரையில், ‘இந்நூலில்
காணும் அகச் சான்றுகளின் வழியாகப் பார்க்கும்போது பின்வரும் செய்தி நமக்குப்
புலப்படுகின்றது. 1885ஆம் ஆண்டில் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் தொல்காப்பியம் -
பொருளதிகாரத்தை வெளியிட்டார். இந்த உரை 1885க்குப் பிறகு நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.
உ.வே. சுவாமிநாத ஐயர் அவர்கள் பத்துப்பாட்டினை 1889ஆம் ஆண்டு பதிப்பித்தார். அதற்கு
முன்பாக இச்சொற்பொழிவாளர் தம் கருத்துகளைப் பதிவு செய்திருக்கக் கூடும்’ என்று
குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், 1990களின் தொடக்கத்தில், புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்
வரலாற்றாய்வுத் துறையில் தமிழ் பதிப்புத் துறையின் சமூக வரலாற்றை முனைவர்ப் பட்டத்துக்காக
ஆராய முற்பட்டேன். மிக விரிவான ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் அமைந்த அந்த ஆய்வுக்கு
சி.வி. சாமிநாத ஐயர் என்ற அறிவாளர் 1892 முதல் நடத்திவந்த ‘விவேக சிந்தாமணி’யைப்
பார்வையிட்டேன். மனோன்மணியம் பெ. சுந்தரம் பிள்ளை, அ. மாதவையா, பி.ஆர். ராஜம் ஐயர்
முதலான தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடி அறிஞர்கள் பங்களித்த காத்திரமான மாத இதழ் இது.
அதில் 1892இல் தொடராக வெளிவந்த ஒரு கட்டுரையிலிருந்து பல குறிப்புகளை நான்
எடுத்திருந்தேன். சென்னைப் பல்கலைக்கழகம் மறுவெளியீடு செய்த ‘தமிழ் மொழி வளர்த்தல்’ சிறு
நூலைப் படித்தபொழுது ஒரு பொறி தட்டியது. நான் எடுத்துவைத்திருந்த குறிப்புகளையும்
இதனையும் ஒப்புநோக்க இரண்டும் ஒன்றே என்பதை உணர்ந்தேன். அக்கட்டுரையை வரைந்தவர் தி. லக்ஷ்மண
பிள்ளை என்று ‘விவேக சிந்தாமணி’ தெளிவாகப் பதிவு செய்திருந்தது. அதன் இரண்டாம்
இதழிலிருந்து ஆறாம் இதழ் வரை (1(2) - 1 (6), ஜூன் முதல் அக்டோபர் 1892 வரை) ஐந்து
இதழ்களில் இக்கட்டுரை தொடர்ச்சியாக வந்திருந்தது. கட்டுரையாசிரியர் பெயர், ஒவ்வொரு
பகுதியின் கடைசியிலும் ‘தி. லக்ஷ்மண பிள்ளை, பி.ஏ.’ என்று அமைந்துள்ளது.
இந்த நிலையில் 2006ஆம் ஆண்டு சென்னை உ.வே. சாமிநாத ஐயர் நூல்நிலையம் ‘தமிழ்மொழி
வளர்த்தல் - தமிழ் இலக்கணம்’ என்றொரு நூலை வெளியிட்டது. ‘தமிழ் மொழி வளர்த்தல். 1889ஆம்
ஆண்டு திருவனந்தபுரத்தில் தி. லக்ஷ்மண பிள்ளை, பி.ஏ. ஆற்றிய சொற்பொழிவு மற்றும் தமிழ்
இலக்கணங்கள் 1893ஆம் ஆண்டு எஸ். சுவாமிநாதையர் ஆற்றிய சொற்பொழிவு’ என்ற தலைப்புப்
பக்கத்தோடு அமைந்த சிறு நூல் அது. ஆனால் ‘பதிப்பாசிரியர்கள்’ எழுதிய ‘ஆய்வாளர்க்கு
அறிமுக முன்னுரை’யில் சொற்பொழிவாற்றியவரின் பெயரை ‘சு. சண்முகம் பிள்ளை’ என்று
குறித்திருந்தனர்! தொடக்கம் முதலே இலக்குமண பிள்ளைக்கு இந்நூல் தொடர்பில் பெயர் ராசி
அமையவில்லை போலிருக்கிறது!
இருப்பினும், இவ்வெளியீட்டின்வழி இச்சொற்பொழிவின் அச்சுப்படி உ.வே.சா. நூல்நிலையத்தில்
உண்டென்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அதனை எடுத்துப்பார்த்ததில் 19 ஜ் 11.5 செ.மீ.
அளவில், நான்கு தலைப்புப் பக்கங்கள் நீங்கலாக 1-41 வரை பக்க எண்ணிட்ட அச்சுப் படியாக அது
அமைந்திருந்தது. அதன் தலைப்புப் பக்க விவரங்கள் வருமாறு.
A Lecture
in Tamil
on
The Ways of Improving
The Tamil Language
or
Tamil Moli Valarthal
Delivered
At
The Trivandrum Tamil Payil Sangam
By
T. Lakshmana Pillai, B.A.
Printed
At
The Shunmukha Vilasam Press
Trivandrum
1889.
தமிழ் மொழி வளர்த்தல்
அல்லது
தமிழ் பாஷையை அபிவிர்த்தி செய்யும் மார்க்கங்கள்
இஃது
திருவனந்தபுரம்
தமிழ் பயில் சங்கம்
முன்பாக
தி. லக்ஷ்மண பிள்ளை, பி.ஏ.
அவர்களால் இயற்றி வாசிக்கப்பட்ட
உபந்நியாசம்
திருவனந்தபுரம்
ஷண்முக விலாசம் அச்சாப்பீஸில்
பதிப்பிக்கப்பட்டது (Copyright Reserved) 1889.
இந்தப் பக்கத்தின் இடையில் வில்லிபாரதத்தில் இடம்பெறும் புகழ்பெற்ற ’பொருப்பிலே பிறந்து ஞ்’
என்ற தமிழ் வாழ்த்துப் பாடலும் அச்சிடப்பட்டுள்ளது.
தி. லக்ஷ்மண பிள்ளை என்ற பெயரை அறிந்த மாத்திரத்தில் இச்சொற்பொழிவை ஆற்றியவர் அவரே என்ற
செய்தியை மேலும் உறுதிப்படுத்துவது மிக எளிதானது. எடுத்துக்காட்டாக, எம்.எஸ்.
பூர்ணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் எழுதிய புகழ்பெற்ற தமிழ் இலக்கிய வரலாற்றில் (Tamil
Literature, முதல் பதிப்பு 1904; விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு 1929; தமிழ்ப்
பல்கலைக்கழக நிழற்படப் பதிப்பு 1985) தி. லக்ஷ்மண பிள்ளையைப் பற்றி ஒன்றரைப் பக்க அளவில்
அமைந்த குறிப்பில் (ப. 356-7), ‘His first prose essay on “how to develop
Tamil” is of perennial interest’ (‘இவருடைய முதல் உரைநடைக் கட்டுரையான ”தமிழை
வளர்த்தல் எப்படி” எந்நாளும் ஆர்வமூட்டுவது’) என்று பதியப்பட்டுள்ளது. Who’s Who in
Madras (The Pearl Press, Cochin, 1937) என்ற நூலும் அவருடைய எழுத்துகளின்
பட்டியலில் இதற்கு முதலிடம் தந்துள்ளது. படித்தவர்களெல்லாம் நினைவில் கொள்ளும் கட்டுரையாக
இது இருந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. சுமதி இராமசாமி எழுதிய (Passions of
the Tongue: Language Devotion in Tamil India, 1891-1970, University of
California Press, 1997) நூலிலும் ‘விவேக சிந்தாமணி’யில் வெளிவந்த கட்டுரை
துணைநூற் பட்டியலில் இடம்பெற்றிருப்பதைக் காண முடிந்தது.
தி. லக்ஷ்மண பிள்ளை யார்? வடமொழிச் சொற்களை வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று
1889இல் கருதிய இவர்தான் பின்னாளில் தம் பெயரைத் தமிழ் ஒலிமரபுக்கேற்பத் தி. இலக்குமண
பிள்ளை என்று தற்பவப்படுத்திக் கொண்டவர். திருநெல்வேலியிலிருந்து திருவிதாங்கூருக்குக்
குடிபெயர்ந்த ஒரு பாரம்பரியமிக்க வேளாளக் குடும்பத்தில் 1864இல் பிறந்தவர் இவர்.
திருவிதாங்கூரின் கணக்குத் துறையில் Accountant General ஆகப் பணியாற்றியதால் ‘வலிய
மேலெழுத்துத் திரவியம் பிள்ளை’ என்று அறியப்பட்டவர் இவர் தந்தை. பி.ஏ. பட்டம் பெற்ற
இலக்குமண பிள்ளை, கணக்கியலில் பயிற்சி பெறச் சென்னைக்குச் சென்றபொழுது பூண்டி அரங்கநாத
முதலியார், டி.வி. சேஷகிரி சாஸ்திரி முதலானோரின் தொடர்பு ஏற்பட்டது. திருவிதாங்கூர்
அரசில் Major Treasury Officer ஆக உயர்பதவி பெற்று ஓய்வு பெற்றார். திருவிதாங்கூர்
சட்டமன்றத்திலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். ‘நினைவாட்சி’ என்ற செய்யுள் நூலை
எழுதியதோடு, கிரேக்க மொழியிலமைந்த பைலாக்டெட்டிஸ் என்ற நாடகத்தை ஆங்கிலவழியாக ‘வீல
நாடகம்’ என்று மொழியாக்கினார். ‘ரவி வர்மா’ என்று தாமே ஒரு நாடகமும் எழுதினார்.
Iambic pentametre என்ற ஆங்கிலப் பா வடிவுக்கு ஈடான தமிழ் பா வடிவம் இல்லை என்று
கருதி, ‘கட்டளைக் கலித்துறையை எதுகை மோனைகளை நீக்கி அமைத்தார்’ என்று வையாபுரிப்
பிள்ளை குறிப்பிடுகிறார். 1930களில் இ.மு. சுப்பிரமணிய பிள்ளை தலைமையில் அமைந்த
தமிழ் வேர்ச் சொற்களின் அடிப்படையில் வடமொழி தவிர்த்த கலைச் சொல்லாக்க முயற்சிகளிலும் அவர்
ஈடுபட்டிருக்கிறார்.
இருப்பினும் இன்று தி. இலக்குமண பிள்ளை பெரிதும் அறியப்படுவது அவர் இசைத் தமிழுக்கு
ஆற்றிய தொண்டுகளுக்காகவே. தமிழில் பல கீர்த்தனங்களை இயற்றிய இவருடைய பெருமை
1930-40களில் தோன்றிய தமிழிசைக் கிளர்ச்சியின்பொழுது நன்கு அறிமுகமானது. ‘தமிழ்ச்
சுடர்மணிக’ளில் ஒருவராக இவரைக் கருதிய வையாபுரிப் பிள்ளை, ‘இசைத் தமிழ்ச் செல்வர்’
என்றே இவரைக் குறிப்பிடுகிறார். நிறைவாழ்வு வாழ்ந்த தி. இலக்குமண பிள்ளை 1950இல்
காலமானார்.
1889இல் தி. இலக்குமண பிள்ளை ‘தமிழ் மொழி வளர்த்தல்’ என்ற தலைப்பில் உரையாற்றியபொழுது
அது ஒன்றேகால் நூற்றாண்டுக்குப் பிறகு நினைவுகூரப்படும் என்று அந்த 25 வயது இளைஞர்
கருதியிருக்க மாட்டார்!
இந்தச் சிறு கட்டுரையின் மூலம் ஒரு புதிர் அவிழ்ந்துள்ளது. நவீன காலத்திற்கேற்பத் தமிழை
எவ்வாறு வளப்படுத்துவது என்று பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொலைநோக்கோடு,
நடைச் சிறப்புடன் முன்வைத்தவர் யார் என்பது இனங்காணப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நூல்களை நன்கு பேணும் நூலகங்களும், நூற்பட்டிகளையும் நூற்றொகைகளையும்
அணியம் செய்யும் நூலகவியலாளரும் இருந்திருந்தால் இந்தக் குழப்பமே ஏற்பட்டிருக்காது என்று
சொல்ல முடியும். புதுக்கோட்டையில் ஞானலாயா என்ற தமிழ்க் கருவூலத்தை உருவாக்கியிருக்கும்
பா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெருமையை உணர்வதற்கு இத்தகைய புதிர்கள்தான் வழிசெய்கின்றன.
மின்னஞ்சல்:
arvcha...@gmail.com
உள்ளடக்கம்
--
--
இருள்கவிந்தால் ஒளிகிளம்பி விரட்டுதல்போல் இன்னுயிராம் தமிழ்க்கின்னல் சூழுமென்றால் திரள்திரளாய் ஒளிப்பிழம்புத் தீரர் கூட்டம் திரண்டெழுந்தால் பகையிருட்டுத் தூள் பறக்கும்.
இவன்
கெ. குமார்
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை மாநிலக் கல்லூரி தன்னாட்சி சென்னை-5.
அலைபேசி எண் – 9444218357.
kaviku...@gmail.com