அறிவியல் ஆயிரம் : பூமிக்கு வெளியே தண்ணீர்
சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியை போல உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற புறக்கோள்கள் உள்ளனவா என விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்கின்றனர். பூமியை போல, ஒரு கோளை சுற்றி வளிமண்டலம் இருப்பதையும், அதன் தரைபரப்பில் திரவ தண்ணீர் இருப்பதற்கு வாய்ப்புள்ளது எனவும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் பெயர் 'எல்.எச்.எஸ் 1140பி'. இதன் நிறை பூமியை விட 5.6 மடங்கு அதிகம். மேலும் சுற்றளவு 70 சதவீதம் பெரியது. இந்த கோள், பூமியில் இருந்து 49 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.
தகவல் சுரங்கம் : எந்த நாட்டில் தீவுகள் அதிகம்
உலகில் தீவுகள் அதிகம் உள்ள நாடு சுவீடன். இங்கு கடல், ஏரிகளை சேர்த்து மொத்தம் 2.67 லட்சம் தீவுகள் உள்ளன. இதில் பெரும்பாலான தீவுகள், மக்கள் வசிக்காதவை. இந்நாட்டின் மக்கள்தொகை 1.06 கோடி. இதில் 16 லட்சம் பேர், தீவுகளில் வாழ்கின்றனர். சுவீடனில் உள்ள தீவுகளில் பரப்பளவில் (3000 சதுர கி.மீ.,) பெரிய தீவு கோட்லாந்து. இதன் மக்கள்தொகை 61,029. இதற்கு அடுத்து நார்வே (2.39 லட்சம் தீவுகள்), பின்லாந்து (1.98 லட்சம்), கனடா (52,455) உள்ளன. இந்தியாவில் 1382 தீவுகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை அந்தமான், நிகோபர் தீவுகளில் உள்ளன.