அறிவியல் ஆயிரம் : மழைக்காலத்தில் கதவுகள் விரியுமா...
மழைக்காலத்தில் சில நேரங்களில் மரத்தால் செய்யப்பட்ட கதவு, ஜன்னல்கள் மூடுவதற்கு சிரமமாக இருக்கும். மரத்துக்கு பொதுவாக ஈரத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. காற்றில் ஈரப்பதம் கூடினால், அதன் தொடர்ச்சியாக நீரை உறிஞ்சி மரம் விரிவடையும். இதன்படி மரக்கதவுகளும் ஈரப்பதத்தை உறிஞ்சி விரிவடைகிறது. அதேபோல வெயில் காலத்தில் காற்றில் ஈரப்பதம் குறைவதால், நீரை வெளியேற்றி மரம் சுருங்கும். அனைத்து மரங்களும் ஒரே மாதிரி இருக்காது. ஒவ்வொரு மரத்தின் சுருங்கி விரியும் தன்மை வெவ்வேறு அளவாக இருக்கும். இதைப்பொறுத்து அதன் கதவுகளும் இருக்கும்.
தகவல் சுரங்கம் : தாய்மை பாதுகாப்பு தினம்
தாய்மையை போற்றும் விதமாகவும், கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் மத்திய அரசு சார்பில் ஏப். 11ல் தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் கடைபிடிக்கப்படுகிறது. தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் முக்கியமான தருணம். இந்நேரத்தில் அவர்களது ஆரோக்கியம், பிரசவத்துக்குப்பின் தாய், குழந்தையின் பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, தரமான மருத்துவ வசதி, பிரசவத்துக்குப்பின் குழந்தைகளுக்கான தடுப்பூசி உள்ளிட்ட வசதிகளை வழங்க வேண்டும் என இத்தினம் வலியுறுத்துகிறது.