அறிவியல் ஆயிரம் : மீன் வலையில் சாலை
அமெரிக்காவின் தீவு மாகாணம் ஹவாய். இங்கு பழைய மீன்பிடி வலைகள், மறுசுழற்சி பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு, சாலைகள் அமைக்கும் திட்டத்தை ஹவாய் பசிபிக் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது கடலில் சேரும் பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைப்பதுடன், சாலைகளின் தரத்தையும் மேம்படுத்தும். மீன்பிடி வலை, பிளாஸ்டிக் குப்பைகளை துகள்களாக்கி, சாலை அமைக்க பயன்படும் தார் கலவையுடன் சேர்த்து கலக்கப்படுகின்றன. இது வழக்கமான சாலைகளை விட, குறைந்தளவு பிளாஸ்டிக் நுண்துகள்களையே வெளியிடுவதால் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம் : தேசிய டாக்டர்கள் தினம்
டாக்டர்களின் அர்ப்பணிப்பு, அவர்களின் மகத்தான பணிகளை பாராட்டும் வகையிலும், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் டாக்டர் பி.சி.ராயின் சமூக சேவையை அங்கீகரிக்கும் வகையிலும், அவரது பிறந்த தினமான ஜூலை 1, தேசிய டாக்டர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். இவர் பிறந்ததும், மறைந்ததும் ஜூலை 1ல் தான். மருத்துவம் தவிர அரசியல், நிர்வாகம், கல்வி என தான் பங்கெடுத்த துறைகளில் முன்மாதிரியாக திகழ்ந்தார். ஏழை மக்களும் மருத்துவ வசதிபெற எண்ணிய இவர், பல மருத்துவமனைகளை தொடங்கினார்.