ராமாயணம். J K SIVAN
1. இன்பமும் துன்பமும் ...
தெளிந்த நீரில் தனது தலையில் சூடிய நவரத்ன கிரீடத்தை மறுபடியும் தசரதன் பார்த்தான் . சில நாட்களாகவே ஒரு எண்ணம் மனதில் ஓடியது. என் மகன், என் ஆசை புத்ரன், ராமன் தலையில் இதை சூடி நான் அழகு பார்க்க வேண்டும். அவன் போதிய வேத சாஸ்திரம், போர்முறை பயிற்சி, யானையேற்றம், குதிரையேற்றம் வாள் ஈட்டி வேல் வில்வித்தை ஆகியவற்றை சிறந்த குருமார்களிடம் கற்றுக் கொண்டுவிட்டான். அரசனாக சகல தகுதியும் உள்ளவன். அவனது வில் வித்தை திறமையை வசிஷ்டரே என்னிடம் புகழ்ச்சியாக அடிக்கடி என்னிடம் சொல்கிறார். ''தசரதா உன் மகன் இறைவனின் அவதாரம் என்று தோன்றுகிறது'' என்று சொல்லும்போது என் கண்களில் ஆனந்தக்கண்ணீர் திரையிடுகிறது.
அன்று காலை ராமனை அழைத்தான் தசரதன்.
''அப்பா கூப்பிட்டீர்களா''. வந்து நின்ற மகனை தலையிலிருந்து கால் வரை ரசித்து மகிழ்ந்தான் சக்ரவர்த்தி தசரதன்.
''என் மகனே என் மனதில் உள்ள ஆசையைச் சொல்கிறேன் கேள். இனிமேல் இந்த அயோத்தி சாம்ராஜ்யத்துக்கு, இக்ஷ்வாகு குல திலக வீர தீரன் நீ தான் பட்டத்து இளவரசன். வெகு சீக்கிரம், நாளையே, உனக்கு பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்போகிறேன். இதற்கான முயற்சிகளை துவங்கி விட்டேன். எனக்கு இது தெய்வ சங்கல்பம் என்று தான் மனதில் படுகிறது.''
அடுத்த சில மணித்துகள்கள் தசரதன் ராமனுக்கு எப்படி ஆட்சி புரியவேண்டும் என்ற ராஜதந்திரங்களை விளக்குவதில் கழிந்தது.
அன்றிரவு ராமனும் சீதையும் தெய்வங்களை வேண்டிக்கொண்டனர்.
''பகவானே, இந்த புகழ் பெற்ற இக்ஷ்வாகு குலத்தில் இதற்கு முன் பல மிகச்சிறந்த அரசர்கள் நீதியும் நேர்மையும் இரு கண்களாக கொண்டு சிறந்த வீரர்களாக ஆண்டிருக்கிறார்கள். அவர்களைப் போல இல்லாவிட்டாலும், தசரதன், அவனுக்கு முன் ஆண்ட அரசர்களின் பெருமைக்கு இழுக்கு, களங்கம் விளையாமல் நான் அரசனாக பணி புரிய அருள வேண்டும். இதற்கு தேவையான சக்தியும், புத்தியும், திறமையும் எனக்கருளவேண்டும்''
தசரதனின் மூன்று மனைவியரில் இளையவள் அழகி கைகேயி. கேகய நாட்டு ராஜகுமாரி. பரதனின் தாய். அவளுக்கு எதகனையோ தாதிகள் இருப்பினும் மிகவும் நெருக்கமானவள், ஒருவள் முதுகு கோணலாக, கூன் விழுந்த மந்தரை. எல்லோரும் கூனி என்று தான் அவளை அழைப்பார்கள்.
அன்று காலையில் தனது வீட்டிலிருந்து வெளியே எதற்கோ சென்ற மந்தரை எங்கும் கோலாகலமாக, தோரணங்கள், மலரலங்காரம், எல்லோரும் மிக்க மகிழ்ச்சியாக கூட்டமாக சிரித்து சந்தோஷமாக பேசுவது கண்டு ஆச்சர்யம் அடைந்தாள். என்ன ஆயிற்று, இன்று என்ன விசேஷம்.? கூட்டத்தில் அலங்காரம் செய்துகொண்டிருந்த ஒருவனைப் பிடித்து ''இன்று என்ன விசேஷம்? எதற்கு இந்த தோரணம் அலங்காரங்கள் எல்லாம்?'' என்று கேட்டபோது அரசன் ராமனுக்கு அடுத்தநாள் பட்டாபிஷேகம் பண்ணப்போவது தெரிந்து கொள்கிறாள்.
அவளுக்கு ராமனையும் அவன் தாய் பட்டத்து ராணி கௌசல்யாவையும் அவ்வளவு பிடிக்காதோ ? இந்த பட்டாபிஷேகம் விஷயம் அவளுக்கு ரசிக்கவில்லையோ? நேராக .தனது எஜமானி கைகேயியின் மாளிகைக்கு சென்றாள். இயற்கையாகவே மந்தரை குறுகிய மனப்பான்மை, சுயநலம் கொண்டவள். எவரையும் வெறுப்பவள். தீய எண்ணம் என்கிறோமே அது நெஞ்சில் நிறைந்தவள். நம்மை ஆண்ட வெள்ளைக் காரனைப் போல பிரித்தாளும் சூழ்ச்சி தெரிந்தவள். சினிமாவில் வரும் வில்லியாக செயல்பட்டாள்.
கைகேயி அரசனின் தாயாகிவிட்டால், பரதன் ராமனுக்கு பதிலாக அரசனானால் , தனக்கு நிறைய பதவி, வசதி, சன்மானங்கள் அதிகாரம், மதிப்பு கிடைக்கும் என்று தீர்மானித்தாள் .
முதலில் ராமனுக்கு பட்டாபிஷேகம் என்று கூனி மூலம் அறிந்து கைகேயி மகிழ்ந்து முதல் முதலாக அந்த இனிய செயதியைச் சொன்ன மந்தரைக்கு ஒரு முத்துமாலை பரிசளிக்கிறாள். அவ்வளவு நல்லவள் கைகேயி. ஆனால் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் மெதுவாக, அவள் மனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக த்வேஷம் எனும் விஷத்தை பாய்ச்சி, ராமன் அரசனானால் அவளும் பரதனும் சிறைப் படுவார்கள், உயிருக்கே ஆபத்து என்று எல்லாம் சொல்லி ராமனின் பட்டாபிஷேகத்தை நிறுத்தும் அளவுக்கு கைகேயியின் மனதை மந்தரை சாமர்த்தியமாக முழுதும் மாற்றிவிட்டாள் . இதற்கு வழியும் யோசித்து வைத்திருந்தாள் மந்தரை.
முன்பு ஒரு யுத்தத்தில் கைகேயி தசரதனுக்கு தேரோட்டி உதவினாள். தசரதன் உயிரைக் காப்பாற்றினாள் . அதனால் மகிழ்ந்த தசரதன் ''கைகேயி உனக்கு என்ன வேண்டுமோ கேள் வரம் தருகிறேன் என்று வாக்களித்தான். அவன் கொடுத்த இரு வரங்களை பின்னர் ஒரு சமயம் பெற்றுக்கொள்வதாக கைகேயி அதை ரிசர்வில் reserve ல் வைத்திருந்தாள் . அதை இப்போது கையிலெடுக்க வைத்தாள் மந்தரை. அவளுக்கு அரச குடும்ப ரகசியங்கள் அனைத்தும் அத்துபடி.
வேலைக்காரர்கள், வண்டி ஓட்டிகள், சிப்பந்திகளை வைத்துக்கொண்டு குடும்ப விஷயங்கள், ரஹஸ்யங்கள் வெளிப்படையாக பேசுவதால் எத்தனையோ ஆபத்துகள், விளைவுகள் உண்டு. அதில் இது ஒன்று என்று அக்காலத்திலேயே நிரூபணம் ஆகி இருக்கிறது.
சமயம் வந்துவிட்டது இப்போது கைகேயி முன்பே பெற்ற அந்த இரு வரங்களைக் கேட்க. அன்று மாலை
அவளைத்தேடி அவளிடம் ஆசையாக தனது ராம பட்டாபிஷேக ஏற்பாடுகளை, முடிவைச் சொல்ல வந்த தசரதன் பிடிபட்டான். அதிர்ச்சியும் ஆச்சரியுமாக கைகேயின் கோலம், ஆத்திரம், அலங்கோலம் , அவள் தீர்மானமாக வரங்களை உரிமையோடு கேட்டது அனைத்தும் அவனைதிதிக்கு முக்காட வைத்தது. கொடுத்த வாக்கை காப்பாற்றும் மனிதன், அரசன் அவன். என்ன உன் வரம் கேள், பெற்றுக்கொள் என்றான்:
இரு பேரதிர்ச்சிகளை வரமாக வெளியிட்டாள் கைகேயி:
வரம்: 1 : ராமனுக்கு பதிலாக பரதன் பட்டத்து இளவரசன் முடிசூட வேண்டும்.
வரம் 2: உடனே ஒரு வினாடியும் வீணாகாமல் ராமன் பதினான்கு வருஷம் அயோத்தியை விட்டு வெளியேறி, கானகம், வனவாசம் செல்ல வேண்டும்''
துளியும் இதில் மாற்றம் இல்லை. அதிர்ந்து விழுந்தான் அரசன். மறுநாள் காலை கைகேயி ஆளைவிட்டு ராமனை அழைத்து வரச்சொன்னாள்
வணங்கிய ராமனிடம் ''ராமா, இது உன் தந்தையின் கட்டளை. அவருக்காக நான் இடுகிறேன்: எனக்கு அவர் கொடுத்த வரம் பற்றி உன்னிடம் நேரே சொல்ல அவருக்குத் தயக்கம். மேற்சொன்ன வரங்களை தெளிவாக உணர்த்தினாள் .
''அம்மா, அரசன் சொல்வாக்கு தவறக்கூடாது. நீங்கள் பெற்ற இரு வரங்களும் மதிக்கப்படவேண்டும், செயல் பட வேண்டும். பரதன் உடனே முடி சூடி அயோடத்தி மன்னனாக வேண்டும். அம்மா நீங்கள் சொல்வது சரியானது. பரதன் மன்னனாவதில் எனக்கு தான் முதலில் மகிழ்ச்சி. அடுத்து நான் உடனே 14 வருஷம் கானகம் செல்ல தயாராகிறேன்' கைகேயியை வணங்கி விடைபெற்று தனது தாய் கௌசல்யாவிடம் சென்று முடிவைக் கூறுகிறான். வேறு வழியின்றி கணவனின் வாக்கை காக்க மகனைப் பிரிய மனமில்லாமல் தவிக்கிறாள் கௌசல்யா. சீதையும் கணவனை பிரிந்து வாழ இயலாது என்று முடிவாக கானகம் செல்ல தயாராகிறாள்.
உடலை விட்டு நிழல் எப்படி பிரிந்திருக்க முடியும் என்று லக்ஷ்மணனும் கூடவே தன்னை யாரும் போகச் சொல்லா மலேயே அவனாகவே, ராமனோடு 14 வருஷம் மரவுரி தரித்து கானகம் செல்ல கிளம்பிவிட்டான். முதல் நாள் விழாக்கோலம் பூண்டிருந்த அயோத்தி மாநகரம் மறுநாள் சோக உருவெடுத்தது. மக்கள் கண்ணீர் வெள்ளத்தில் காணப்பட்டனர். அரண்மனை முடிவுகள் அவர்கள் உள்ளத்தை உடைத்திருந்தது. ராமன், லக்ஷ்மணன் சீதை மூவரையும் தேரோட்டி சுமந்திரன் கங்கைக்கரை வரை கொண்டு விட்டு வந்தான். அயோத்தியின் தென் கரை கங்கை. அக்கரை சென்றால் தான் அயோத்தியை விட்டு வெளியேறி யது ஆகும்.
வெறும் தேர் காலியாக ராம லக்ஷ்மணர்கள் இல்லாமல் திரும்பியதைக் கண்ட தசரதன் மீண்டும் மயங்கி வீழ்ந்தான். மாண்டான்.
மேலே சொன்னது ராமாயண சுருக்கம். எத்தனை தடவை படித்தாலும் மனதைத் தொடும் இதிகாசம் அல்லவா? ஹிந்துக்களின் இரு கண்கள் மஹா பரதமும் ராமாயணமும்.
மேற்கொண்டு ராமாயண கதைச் சுருக்கம் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.