ரூ 200 கோடி மக்கள் பணம் வீணாவதை, மாணவர் எதிர்காலம் பாதிப்பதை அரசிடம் சொல்லுங்கள்! – உயர்நீதிமன்றம்
சென்னை: சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்வதால் மக்கள் பணம் ரூ 200 கோடி வீணாவதை, மாணவர்கள் எதிர்காலம் பாதிக்கப்படுவதை அரசுக்கு எடுத்துச் சொல்லுங்கள், என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் சமச்சீர் கல்வி திட்டத்தை ரத்து செய்யும் அதிமுக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில் 08.06.2011 அன்றுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசு கொண்டுவந்த சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்க தற்போதைய அதிமுக அரசு உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஷியாம் சுந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட வழக்கறிஞரும், மனுதாரருமான ஷியாம் சுந்தர், 10ஆம் வகுப்புக்கான சமச்சீர் கல்வி திட்ட பாடங்களை மாணவர்கள் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து படித்து வருவதாகவும், இந்நிலையில் தமிழக அரசு பழைய பாடத்திட்டமே தொடரும் என அறிவித்துள்ளது மாணவர்களை குழப்பத்தில் ஆழ்த்திருப்பதாகவும்
தெரிவித்தார்.
நிபுணர் குழுவின் பரிந்துரையை ஏற்றே சமச்சீர் கல்வி திட்டம் நிறைவேற்றப்பட்டதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தி வைக்கும் அதிமுக அரசின் உத்தரவு மாணவர் நலனுக்கு எதிரானது. எனவே அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் அடங்கிய அமர்வு, 200 கோடி ரூபாய் மதிப்பில் புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ள நிலையில் மக்கள் வரிப்பணம் வீணாவதை அரசிடம் எடுத்துரைக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவர்கள் குழப்ப நிலையில் உள்ளதையும், இதனால் தனியார் பள்ளிகள் செய்யவிருக்கும் மாறுதல்கள் பெற்றோரை எந்த அளவு பாதிக்கும் என்பதை அரசிடம் தெரிவிக்குமாறும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.