9.7.13
சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் சென்னை மண்டல மாநாடு 6.7.2013 சனியன்று முழு நாள் நிகழ்ச்சியாக வெகு நேர்த்தியாக நடைபெற்றது.
காலையில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்ற
பட்டிமன்றம் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கணித்தது போல
கருத்தரங்கம் என்று சொல்லும் அளவில் கருத்துச் செறிவுடன் நடைபெற்றது.
பொதுவாக பட்டிமன்றம் என்று சொன்னால்
பொழுதுபோக்குக்காக - தொழில் ரீதியாக நடை பெறுவது தான் வழமை. இரண்டு
அணிகளில் உள்ளவர்கள் எதை எதைச் சொல்ல வேண்டும்? எந்த நகைச்சுவை துணுக்கைக்
கொடுக்க வேண்டும்? அதற்கு எதிர் அணியைச் சேர்ந்தவர்கள் பதிலாக எந்தத்
துணுக்கைச் சொல்ல வேண்டும்?
இடையில் புகுந்து நடுவர் எந்தக் கதையை
சொல்லி பார்வையாளர்களைச் சிரிக்க வைக்க வேண்டும் என்பதெல்லாம் திட்டமிட்ட
வகையில், ஒத்திகை நடத்தி நடைபெறுவதுதான் நாட்டில் பெரும்பாலும் நடைபெறுவ
தாகும்.
பட்டி மன்றத்தை மக்களுக்குக் கருத்துகளை,
சிந்தனை களைக் கொண்டு செல்லும் வாகனமாக மாற்றி, புது திருப்பத்தைக்
கொடுத்தது திராவிடர் கழகமே!
மதம் என்றால் உயர்ந்தவைகளைச் சொல்லுவது,
புராணம் என்றால் புத்தியைக் கொடுப்பது என்று பக்தி என்னும் தேனில்
குழைத்துப் புகட்டி மக்களை மடையர்களாகவே கட்டிப் போடுவார்கள்.
ஆனால் அவை எல்லாம் உண்மைக்கு மாறானவை;
ஆபாசமும், மூடநம்பிக்கையும் குடி கொண்டவை என்பதை பாமர மக்களும் புரிந்து
கொள்ள ஆபாசம் - மூடநம்பிக்கைகளில் விஞ்சி நிற்பது சைவமா? வைணவமா? என்ற
தலைப்பில் நாடு தழுவிய அளவில் பட்டிமன்றத்தை நடத்தி, புத்தி தீட்டும்
பணியில் கழகம் வெற்றி பெற்றதுண்டு.
கும்மிடிப்பூண்டி மாநாட்டில் நடைபெற்ற
பட்டிமன்றத் தின் தலைப்பு இந்தியாவில் பெண்கள் மதிக்கப்படு கிறார்களா?
மிதிக்கப்படுகிறார்களா? என்பதாகும். இரண்டு அணியிலும் பெண்களும்
இருந்தார்கள்; ஆண்களும் இருந்தனர்.
நடுவராக ஸ்டெல்லாமேரீஸ் கல்லூரியின்
பேராசிரியர் முனைவர் உலக நாயகி பழனி அவர்கள் பொறுப்பேற்று பட்டிமன்றத்தை
கலகலக்க வைத்ததோடு ஆழமான கருத்துக்களையும் வாரி இறைத்தார்.
அதனையொட்டி திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியல் கருத்துக்களை வழங்கினார்.
பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு
உள்ளவராக இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தில், பயிர்ப்பு என்றால் என்ன
பொருள் என்பதை மதுரைத் தமிழ்ப் பேரகராதியிலிருந்து எடுத்துக்காட்டினார்.
குறிப்பாக பயிர்ப்பு என்றால் என்ன பொருள்?
அசுத்தம், குற்சிதம் என்று கூறப்பட்டுள்ளது. குற்சிதம் என்றால் என்ன?
அதற்கு அந்த அகராதியில் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
குற்சிதம் என்றால் அசுத்தம் - அருவருப்பு
என்று பொருள் கூறப்பட்டுள்ளது. ஒரு பெண்ணென்றால் அசுத்தம், அருவருப்பாகப்
பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே இதனை ஏற்றுக் கொள்ள
முடியுமா? என்ற வினாவை தமிழர் தலைவர் எடுத்துச் சொன்னபோது பெரும்பாலும்
பெண்களே நிரம்பி வழிந்த அந்தக் கூட்டத்தில் அந்தக் கருத்தை ஆச்சரியத்துடன்
கேட்டனர். சொல்லப் போனால் கல்லூரித் தலைமைப் பேராசிரியரும், முனைவர் பட்டம்
பெற்றவருமான உலக நாயகி பழனி அவர்களேகூட, இதன் பொருளை இன்றே அறிந்ததாகக்
கூறி, ஆவேசப்பட்டார்.
திராவிடர் கழகம் நடத்தும் எந்த
நிகழ்ச்சியாக இருந்தாலும், மக்களுக்குப் பயன் விளைவிக்கும் தன்மை
உள்ளதாகவும், வரும் மக்கள் புதிய கருத்துக்களை, தகவல்களைத் தெரிந்து
செல்லும் முறையில் இருப்பது தான் கழகப் பிரச்சார மேடைக்குள்ள தனித்
தன்மையான கருத்தியலாகும்.
பெண்கள் இன்றைக்குப் பல்வேறு வகைகளிலும்
இழிவுபடுத்தப்படுகிறார்கள், அடக்கி ஒடுக்கப்படு கிறார்கள் என்பதெல்லாம்
உண்மை என்றாலும் கல்வி, வேலை வாய்ப்பு, சொத்துரிமை, போன்ற நிலையில்
வளர்ச்சி பெற்று வரும் நிலையில் பழைய நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு
தான் வருகிறது.
அதுவும் தந்தைபெரியார் தோன்றி புரட்சி
கரமான கருத்துக்களை விதைத்த நிலையிலும், போராடிய நிலையிலும் பெண்கள்
மிதிக்கப்படுகிறார்கள் என்பது பொருத்தமானதாக இருக்க முடியாது என்று
தீர்ப்பினை வழங்கினார்கள்.
கும்மிடிப்பூண்டி பட்டிமன்றம் - இந்த வகையிலே பட்டிமன்றத்திற்கும் புதிய திருப்பத்தைக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.
தொழில் பட்டிமன்றம் நடத்துபவர்களும்கூட
வெறும் பொழுது போக்கும் அரட்டை மன்றங்களாக அமைத் திடாமல், மக்கள் சிந்தனையை
- பயனுள்ள வகையில் சாணை தீட்டக் கூடியதாக இருந்தால், சிறப்பானது
என்பதையும், பேச்சாளர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வும் தேவை என்பதையும்
வலியுறுத்துகிறோம்!
----------------------"விடுதலை” தலையங்கம் 8-7-2013