தினம்ஒரு(தெய்வத்தின்)குரல்
ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில் நிகழ்வதால்தான் இந்த நவராத்திரிக்கே ‘சாரத’ நவராத்திரி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. சாரதா என்ற பெயர் ஸரஸ்வதி தேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. (சாரதா என்ற பேருக்கு மந்திர சாஸ்திரத்தில் தத்வார்த்தமாக வேறு பொருள்களும் சொல்லியிருக்கிறது.)
காச்மீரத்தில் பண்டிதர்கள் அதிகம். ‘பண்டிட்’ என்றே ஒரு ஜாதியாகச் சொல்வார்கள். மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு எல்லாம்கூட இப்படிப்பட்ட பண்டிட்கள்தாம். அங்கே இப்படி வித்வத் கோஷ்டி நிறைய இருந்ததற்குக் காரணம், வாக்தேவியான (வாக்குத்தேவதையான) ஸரஸ்வதி ஆராதனை காஸ்மீர மண்டலத்தில் மிக அதிகமாக இருந்ததுதான். அங்கே ‘சாரதா பீடம்’ என்றே ஒன்று இருந்தது. பாரத தேசத்தின் மகா பண்டிதர்களும் அந்த சாரதா பீடத்தில் ஏறினாலே தங்கள் வித்வத்துக்குப் பட்டாபிஷேகம் செய்ததுபோல் என்று கருதினார்கள்.
நம் தமிழ்நாட்டில், தொண்டை மண்டலத்தில் இருக்கிற காஞ்சிப் பகுதிக்கும் காச்மீர மண்டலம் என்று ஒரு பெயர் இருந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணன் அவதரித்த மதுரை இருந்தால், தெற்கே மீனாக்ஷி அவதரித்த மதுரை இருக்கிறது. அங்கே ஒரு பாடலிபுத்திரம் இருப்பது போலவே, இங்கேயும் நடுநாட்டிலே ஒரு பாடலிபுத்திரம் உண்டு; அதுதான் திருப்பாதிரிப்புலியூர். வடக்கே காசி இருப்பதுபோல், இங்கும் திருநெல்வேலியில் தென்காசி இருக்கிறது. இம்மாதிரி காஞ்சி மண்டலமே தக்ஷிணகாச்மீரம். இங்கே ஸரஸ்வதியின் அருள் விசேஷமாக சாந்நித்தியம் பெற்றிருக்கிறது என்பதை மூகரும் ‘ஸாரஸ்வத புருஷகார ஸாம்ராஜ்யே’ என்கிறார். ஊமையாக இருந்த இந்த மூகருக்கு சாக்ஷாத் காமாக்ஷியே வாக்தேவியாக வந்து அநுக்கிரகித்த விசேஷத்தால்தான் அவர் மகா கவியானார். காமாக்ஷி ஆலயத்தில் எட்டுக் கைகளோடு கூடிய பரம சௌந்தர்யமான ஒரு ஸரஸ்வதி பிம்பத்துக்கு சந்நிதி இருக்கிறது. ஆதி ஆசார்யாள் காஞ்சீபுரத்தில் சகல கலைகளிலும் தம் ஞானத்தைக் காட்டி ஸர்வக்ஞ பீடம் ஏறினார். இங்கே ஸ்தாபித்த (காமகோடி பீட) மடத்துக்கு ‘சாரதா மடம்’ என்ற பெயரிட்டார். இதெல்லாம் காஞ்சிபுரத்திற்கும் ஸரஸ்வதிக்கும் இருக்கப்பட்ட விசேஷமான சம்பந்தத்தைக் காட்டுகின்றன.
ஆதியிலிருந்தே காஞ்சியில் ‘கடிகாஸ்தானம்’ என்கிற வித்யாசாலைகள் நிறைய இருந்திருக்கின்றன. வடக்கே இருந்த நாலந்தா, தக்ஷசீலம் இவைபோல், இந்த கடிகாஸ்தானங்களும் யூனிவர்ஸிடி போலப் பெரிதாக இருந்திருக்கின்றன. திருவல்லத்துக்கு அருகே உள்ள ஒரு கல்வெட்டில் ‘கடிகை ஏழாயிரவர்’ என்று காண்பதிலிருந்து ஏழாயிரம் வித்யார்த்திகள் இங்கு கல்வி பயின்றதைத் தெரிந்து கொள்ளலாம். மைசூரில், ஷிமோகா ஜில்லாவில், ஷிகார்பூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே பிரணவேச்ரஸ்வாமி ஆலயத்தில் ஒரு மிகப் பழைய கல்வெட்டு இருக்கிறது. அதில் கி.பி. நாலாம் நூற்றாண்டில் கர்நாடகத்தை ஆண்ட மயூரவர்மன் தன் குருவான வீரசர்மனுடன் ‘பல்லவேந்திரபுரி’யான காஞ்சி கடிகையில் படிக்க வந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அரக்கோணத்தருகே வேலூர் பாளையத்தில் உள்ள ஒரு ஸம்ஸ்கிருதக் கல்வெட்டு, இன்று லோகப் பிரசித்தமாயிருக்கிற கைலாஸநாதர் கோயிலை நரசிம்மவர்மா என்கிற ராஜசிம்ம பல்லவன் கட்டினான் என்று சொல்வதற்கு முன்பாக, அவன் காஞ்சிபுரத்திலிருந்த பழைய கடிகையை மீண்டும் நிறுவியதை முக்கிய விஷயமாகச் சொல்கிறது. அப்பர் சுவாமிகளும் “கல்வியில் கரையில்லாத காஞ்சி” என்கிறார்.