வேளுக்குடி வரதாச்சாரி ஸ்வாமிகள்

1 view
Skip to first unread message

Sundara Rajan

unread,
Jan 9, 2025, 10:14:19 PMJan 9
to
வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. 
இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேச வேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. 

அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒரு முறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். 

ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்தது போல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக் கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்
தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்று விட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்று விட்டான் என்பதற்கான அடையாளம் அது. 

திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்து விட்டது. நான் உனக்கு அடிமைப் பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு.

அப்படிச் செய்து விட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், 

திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றி விடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கி விட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.
நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். 
இது ஒரு சாதனை!
இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.
சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக் கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்து விட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திvவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.
ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்து விட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீ ரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்து கொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்து விட்டு, பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார்.ஸ்ரீ ரங்கம் பரமபத வாசலை அடைந்த போது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டார்..🌹
Reply all
Reply to author
Forward
0 new messages