*முருகன் அணியும் கங்கணம் !*
ஒரு செயலைத் தீவிரமாகச் செய்ய முற்படும்போது, “கங்கணம் கட்டிக்கொண்டு” என்று கூறுவது வழக்கமாகும். இது கையில் அணியும் வளையல் போன்ற ஆபரணமான கங்கணம் (கடகம்) என்பதிலிருந்து வந்த உவமை.
அதாவது, ஒரு செயலை உறுதியுடன் மேற்கொண்டு, அதை நிறைவேற்றத் தீர்மானித்த நிலையைச் சுட்டிக்காட்டும் சொற்றொடராக இது பயன்படுகிறது. விடமும் அமுதமும், ஒக்க வண்டு, இன மறை எனத் தொடங்கும் திருப்புகழ்களில் குகன் அணியும் கங்கணம் பற்றி நமக்கு குறிப்பு உள்ளது.
“இரவலர் மிடி கெட உதவிய விதரண கங்கணம் " - சிவலோக வகுப்பு.
முருகன் , அடியார்களின் (யாசகர்களின்) வறுமை அகல உதவி செய்வதையே விரதமாகப் பூண்டு, தன் கரங்களில் கங்கணம் அணிந்துள்ளார், என்று அருணகிரி யார் உறுதியாக பதிவு செய்கின்றார்.
இதை, அருணகிரியார் மற்றொரு திருப்புகழில்,உன்னை உற்ற துணையெனத் தேடுகின்ற என்னை இன்பம் அடையும்படியாக வைத்தருளுவது *உனக்குக் கடமையே* என உறுதியாகக் உரைக்கிறார்;அவ்வாறு அருளினால், அதுவே உனக்குப் பெருமை, முருகனே! என்று திடமாக பதிவு செய்கின்றார் (“களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை,சுகப்பட வேவை கடனாகும், இதுக்கன மாகு முருகோனே” - நிலையாத சமுத்திரமான)
இதை மற்றொரு திருப்புகழில், தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த மயில் வாகனனே', 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய ஈசனே', 'என் பெருமை உனது பெருமை' என்று கூறிய, ஏழை அடியார்களின் மனத்துயர் ஏன், எவ்வாறு ஏற்பட்டது என்று முறையிட்டு கேட்டும் ? நீ கேளாதிருந்தால் !, பின்பு உன்னை யார் தாம் புகழ்வார்கள்? வேதம்தான் பின்பு உன்னை என்ன சொல்லாதோ? என்று துணிவுடன் உரைக்கிறார். (“நாளும் ஏறுமயில் வாகன குகா சரவணா எனது ஈச ,எனமானம் உனதென்றும் ஓதும்,ஏழைகள் வியாகுலம் இதேதென வினாவில்,உனை யேவர் புகழ்வார் மறையும் என்சொலாதோ “- ஆறுமுகம் ஆறுமுகம்)
குகன் அணியும் கங்கணம், அடியார்களின் வறுமையைப் போக்கி, நலன் காக்கும் உறுதியின் சின்னம் என, அருணகிரியார் தெளிவாக உணர்த்துகிறார். முருகா! சண்முகா! வடிவேலவா! வயலூரா! கந்தா! கடம்பா! சுவாமி!” என்று அவன் திருநாமங்களை நாமும் உச்சரித்து, ‘அடியார்’ எனும் பதத்திற்கு தகுதியானவர்களாக ஆகிக் கொள்வோம்.அவ்வாறு ஆனபின், நம்மைக் காப்பது அவன் கடமையாகி விடும். (“ஒருகால் முருகா பரமா குமரா, உயிர்கா எனவோத அருள்தாராய்! முருகா என ஓர் தரம் ஓத அடியார், முடிமேல் இணைதாள் அருள்வோனே!”- எருவாய் கருவாய்)
ஆதிமுருக! ஆதிமுருக! ஆதிமுருகா! எனவும் ஆதிமுருகா! நினைவு தருவாயே! (சூதினுண வாசை)..
அன்புடன்
அருணன்