Delhi Uttara Swamimalai

1 view
Skip to first unread message

Sundara Rajan

unread,
Sep 30, 2024, 11:13:59 AM9/30/24
to
Delhi residents might know this story. Some portions I have read in the souvenir published by the temple
 Below a very long post on Uttara Swamimalai

*ஸ்ரீ சுவாமிநாதன் என்ற பூர்வாஸ்ரம நாமத்தோடு திருஅவதாரம் செய்துள்ள தெய்வமாம் மஹாபெரியவா, டில்லி ஸ்ரீ பட்டாபிராமன் மாமா எனும் முருக பக்தருக்கு டில்லியில் அமைந்துள்ள உத்தர சுவாமிமலை கோயில் உருவாக்குவதற்கான அனுக்ரஹம் பொழிந்துள்ள அற்புதங்களை இங்கு பார்ப்போம்.*

பட்டாபிராமன் மாமாவிற்கு சிதம்பரம் அருகே ஒரு கிராமம்தான் பூர்வீகம். தன் 18வது வயதில் மத்திய சர்க்கார் உத்யோகம் கிடைத்து டெல்லி சென்று தங்கிவிட்டார். 1944 ல் இவருக்கு ஒரு முருகபக்தருடன் ஈர்ப்பு உண்டானது. அந்த பக்தர் நற்பண்புகளைக் கொண்டவர். நல்ல தபஸ்வி, அவர் ஸ்ரீ பட்டாபிராமனை தன் சொந்த இளைய சகோதரராகவே பாவித்தார். முருகப்பெருமானின் பக்தி திளைப்பில் ஆட்பட்ட பட்டாபிராமன் கந்தசஷ்டி விழாவினை டில்லியில் மற்ற சில பக்தர்களோடு கொண்டாடி மகிழலானார்.

இப்படி அவர்கள் பக்தி சிரத்தையுடன் முருகவழிபாடு செய்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு டில்லியிலும் முருகனுக்கு ஒரு கோயில் கட்ட ஆவல் உண்டானது.

ஸ்ரீபட்டாபிராமன் அவர்களுடன் இன்னும் மூன்று அன்பர்கள் சேர்ந்து நால்வராக இந்த நற்பணிக்கான முயற்சியில் ஈடுபட்டனர். டில்லியில் கந்தசஷ்டி விழா முதலில் ஒரு நாள் வைபவமாக ஆரம்பிக்கப்பட்டு வருடா வருடம் பக்தர்களின் ஈடுபாடு அதிகரித்ததில் ஏழு நாள் உற்சவமாக சிறக்கலானது.

இதற்கிடையில் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு ஒரு இடத்தை பக்தர்கள் குழு தேடலாயினர். டில்லியில் சுற்றியுள்ள எல்லா இடங்களையும் பார்த்த குழுவினர் மனதில் முருகன் கோயில் காணும் இடம் ஒரு குன்று போலான உயரமான இடமாக இருக்க வேண்டுமென விரும்பினர்.

அப்படித் தேடியபோது டில்லிக்கு வெளியே 'வசந்தகாவ்' என்ற இடத்தில் ஒரு குன்று தென்பட்டது. ஆனால் அது புதரும் எலந்தை மரக்காடாகவும் மண்டிக்கிடந்தது. நெருங்கி யாரும் அத்தனை சுலபமாக அருகே போக இயலாத நிலையில் அந்த குன்றின்மேல் ஒரு சிறிய கட்டிடமும் தென்பட்டது.

டில்லியில் அப்பகுதியில் இஸ்லாமியர் வாசம் செய்து கொண்டிருந்ததால் அந்தக் கட்டிடம் முஸ்லிம்களுக்கான கட்டிடமாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இருந்தாலும் இப்படியொரு இடம் குன்றுதோராடும் குமரனுக்கு கோயில் கட்ட பொருத்தமான இடமாக இருக்குமே என்று அதை எப்படி அடைவதென ஏக்கம் ஏற்பட்டது.

நடமாடும் தெய்வமாம் மஹாபெரியவாளை தரிசிக்கப் போகும் குழுவின் அன்பர்கள் அத் தெய்வத்தை இதற்கென்று வேண்டிக் கொள்ளத் தவறியதில்லை.

தெய்வத்தின் அனுக்ரஹம் வேலை செய்யத் தொடங்கியது. டில்லியிலேயே சரோஜினி நகர் பகுதியில் ஒரு பிள்ளையார் கோயிலை இந்த முருகபக்தர்கள் கட்டி முடித்திருந்தனர். அந்த கோயிலுக்கான கும்பாபிஷேகம் 1961இல் நடக்க திருப் பணிகளில் ஈடுபட்டிருந்த அந்த பக்தர்கள் வைபவம் முடிந்த களைப்பில் அன்றிரவு தூங்கிக் கொண்டிருந்தனர்.

விடியற்காலை 4.30 மணிக்கு யாரோ கதவைத் தட்ட அசதியோடு இருந்த இவர்களுக்கு உடனே எழுந்து கதவைத் திறக்க அலுப்பாய் இருந்தது.

யார் இப்படி இந்த வேளையில் தொல்லை தருகிறார்கள் என்ற நினைப்போடு இவர்களில் ஒருவர் கதவைத் திறக்கிறார். கதவை தட்டிய நபர் அந்த அதிகாலையில் உடம்பெல்லாம் வேர்த்திருக்க பதட்டத்தோடு காணப்பட்டார். ஏதோ நடக்கக்கூடாத சம்பவம் நடந்துவிட்டதோ என்று அவரைப் பார்த்தவர்களுக்கு பயம் உண்டானது.

"என்ன? என்ன ஆச்சு?" என்று இவர்கள் கேட்க மூச்சிரைக்க நின்ற அந்த பக்தர் கொஞ்சம் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு “அது கனவா நினைவான்னு சொல்ல முடியலே" என்று ஆரம்பித்து தொடர்ந்தார்.

"ஒரு வயசான பெரியவர் என்கிட்டே வந்தார். என்னை எழுப்பினார். நான் பக்கத்து ஊர்லேர்ந்து கும்பாபிஷேகத்துக்கு வந்தேன். திரும்பி ஊருக்கு போகணும். தனியா போக பயமாக இருக்கு. எனக்கு துணையா வான்னு சொன்னார். நானும் போனேன். ஏர்போர்ட்டுக்கு அரை பர்லாங் தூரம் போனதும் அந்த கிழவர் சித்தே இருடா என்றார். 

நான் நின்றதும் அதோ பாருடா அங்கே ஜோதி தெரியுது பாருன்னு காண்பிச்சார். அவர் காட்டின திசையிலே நான் பார்த்தபோது ஒரு குன்று தென்பட்டது அங்கேதான் நான் இருக்கேன்” என்று சொன்ன  அந்தப் பெரியவர்  "இனிமே பயமில்லை, நானே போயிடுவேன் நீ போ" என்று சொல்லிக் கொண்டே ஒருபத்தடி தூரத்துக்கு நடந்தார். அப்புறம் மறைஞ்சுட்டார்.  எனக்கு பயமாயிடுத்து. உடனே எழுந்து ஓடி வந்துட்டேன்  என்று தான் அனுபவித்த சம்பவத்தின் தாக்கம் அகலாத அச்சத்துடன் சொல்லி முடித்தார்.

"சரி பயப்படாதே... அந்த இடத்தை நாளைக்குப் போய் பார்க்கலாம்" என்று சமாதானம் செய்தனர். 

அடுத்தநாள் அந்த பயந்திட்ட பக்தருடன் இவர்கள் சென்று அவர் காட்டிய இடத்தைப் பார்த்ததும் ஆச்சர்யமாகிவிட்டது.” 

"அடடா! இந்த இடத்தில்தானே நாம் முன்பே முருகனுக்கு கோயில் எழுப்ப உத்தேச குன்று" என்று நினைத்து மகிழ்ந்தனர்.

இவர்கள் நால்வரும் அரசாங்க உத்யோகத்தில் இருந்ததால் அந்த குன்றின் விபரங்களையும் அதைப் பெறுவதற்கான சூழ்நிலைகளும் கைகொடுக்க கும்பகோணத்திலிருந்து பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளிடம் அந்த விபரங்களை விளக்கினர்.

அவரோ உடனேயே அந்த குன்றின்மேல் ஒரு பூஜை செய்துவிடலாமென்று அதன்படியே குன்றின் ஒரு பகுதியை சீர் செய்து மெல்ல ஏறி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்தனர். ஒரு முகூர்த்த நாளில் பூஜையை ஆரம்பித்தபோது எங்கிருந்தோ முருகபெருமானின் வாகனமான மயில்களின் கூட்டம் ஒட்டுமொத்தமாக கூவு கூவென கூவினவாம். அதோடு நில்லாமல் அங்கே கொழுகொழுவென்று
ஒரு பசு மாடு எப்படி அந்த குன்றின்மேல் ஏறியதோ என்று வியக்கும்படி பூஜை நடந்த இடத்துக்கு வந்தது.

உடனே சாஸ்திரிகள் "ஆஹா அம்பாளே வந்திருக்கா" என்று பூஜைக்கு முன் கோபூஜை செய்து அதற்கு ஒரு சீப்பு  வாழைப்பழத்தை கொடுக்க அதை முழுவதுமாக உண்ட பசுவும் மாயமாய் மறைந்த அதிசயம் நடந்தது.

கும்பகோணம் சாஸ்திரிகள் தன் ஊருக்குத் திரும்பிச் செல்லும் போது மஹாபெரியவாளைத் தரிசித்து டில்லி பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நன்றாக நடந்ததாக சொல்லிவிட்டு முருகன் கோயில் இடத்தில் நடந்த பூஜையையும் பற்றி சொல்லிவிட்டுச் சென்றார். 

அதன்பின் டில்லி பக்தர் ஒருவர் எப்போதும் போல் பெரியவாளைத் தரிசிக்க வந்தபோது முருகன் கோயிலுக்கான அனுக்ரஹம் வேண்டி நின்றார்.

அதுவரை இதுபற்றி கேட்டபோதெல்லாம் பூர்ணமாக அனுக்ரஹம் செய்யாத பெரியவா "அதுதான் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் நடந்துடுத்தோனோ, இனிமே முருகன் கோயில் கட்டலாம்" என்று அனுக்ரஹம் செய்துள்ளார்.

அதோடு அத்தெய்வம் நிற்கவில்லை. கோயில் கட்ட முடிவெடுத்து அதற்கான ரெஜிஸ்ட்ரேஷன் செய்யப்பட்டதும் இந்த நால்வரும் பெரியவாளை தரிசிக்க வந்தனர்.

காஞ்சிபுரத்தில் மகானை தரிசித்து கோயில் கட்டுவதற்கான நிதி கிடைக்க அனுக்ரஹம் செய்யும்படி வேண்டினர்.

அப்போது ஸ்ரீபெரியவா "நீங்க டில்லி முருகன் சுவாமிமலை சுவாமியாட்டம்தானே வரணும்னு ஆசைப்பட்டீங்க. அதனாலே டில்லி போறதுக்கு முன்னே சுவாமிமலை போய் தரிசனம் செஞ்சுட்டுப் போங்க" என்று உத்தரவிட்டார்.

போதிய பணம் இல்லாத நிலையில் இவர்கள் அடுத்தநாள் சுவாமிமலை சென்று ஒரு அர்ச்சனை மட்டுமே செய்ய முடிந்தது. கோயில் சன்னதியில் யாருமில்லாத நிலையில் அந்தக் காலை பொழுதில் அர்ச்சகரிடம் தேங்காய் பழத்தட்டை கொடுத்து தங்கள் கோரிக்கையை சங்கல்பமாக அறிவித்து நின்றனர்.

அப்போது அவர்களின் பின்னால் வயசான இரு பெரியவர்கள் வந்து நிற்பதை இவர்கள் கவனிக்கவில்லை. அர்ச்சனையை முடிந்து பிரசாதத்துடன் வந்த அர்ச்சகர் அந்த இரு பெரியவர்களைப் பார்த்து மரியாதையுடன் கும்பிடும் பாணியில் இயங்கியதை இவர்கள் காணமுடிந்தது.

அப்போதுதான் இவர்களும் அந்த இரு பெரியவர்களைப் பார்த்தனர். நல்ல வாட்டசாட்டமான உடல் அமைப்பில் காவி வஸ்திரம் பூண்டு முகத்தில் தீட்சை வளர்த்து ருத்ராக்ஷ அணிகலன்களுடன் சிவ சின்னங்களை நெற்றியில் பூசிய தீர்க்கத்துடன் காட்சி தந்த அந்த பெரியவர்களைப் பார்த்ததும் இவர்களுக்கும் மரியாதை உண்டானது.

மேலும் ஒரு அதிசயம் நடந்தது. அந்த பெரியவர்கள் அர்ச்சகரிடம் "இந்த பக்தர்கள் என்ன சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்தார்களென கேட்டுவிட்டு, "அப்போ டில்லி முருகன் கோயில் வரணும்னு சங்கல்பம் செஞ்சே இன்னிக்கு அபிஷேகம் பண்ணிடுங்க என்று இவர்களை வியப்பிலாழ்த்தினர்.

ஸ்தம்பித்து நின்ற இவர்களிடம் "உங்களாலே முடிஞ்சா நாளை காலை பக்கத்திலே திருப்பனந்தாள் மடம்னு இருக்கு. அங்கே வர முடியுமா?" என்று கேட்டனர்.

முருகன் சன்னதியில் இரு துறவிகள் போலிருக்கும் இவர்களின் கட்டளையை மீறமுடியாமல் அப்படியே வருவதாக கூறினர்.

அதேபோல் அடுத்த நாள் சென்றனர். அப்போதுதான் அந்த இருவரும் புகழ்பெற்ற மடத்தின் மடாதிபதிகள் என்று தெரிந்தது. நல்ல உபசாரம் செய்து இவர்களிடம் மடாதிபதிகள் ஒரு பத்திரத்தைக் காட்ட இவர்களின் வியப்பு பன்மடங்கானது.

அந்த பத்திரத்தில் இந்த இடத்திற்கு சொந்தமான நிலப்பரப்பின் சூரியமூலையில் இருக்கும் நிலங்களின் வருமானம் முழுவதும் டெல்லியில் உருவாகும் முருகன் கோயிலுக்கு சேர்வதாகவும், கோயில் கட்டி முடிக்கும்வரை அந்த இடத்தில் ஒரு வேலோ, அல்லது முருக அடையாளமோ வைத்து வழிபடும் ஏற்பாட்டிற்கு, ஒரு அர்ச்சகரையும் ஒரு ஓதுவாரையும் டில்லிக்கு அனுப்பி அவர்களுக்கான சம்பளத்தையும் திருப்பனத்தாள் மடமே ஏற்கும் என்றும் அந்த பத்திரத்தில் காணப்பட்டது.

நால்வரும் பெருமகிழ்ச்சியோடு உணர்ச்சிவசப்பட்டதில் அதில் ஒருவர் மடாதிபதிகளை நமஸ்கரிக்க விழைந்தார். "நீங்கள் அந்தணர்கள், எங்களை நமஸ்கரிக்க வேண்டாம்" என்று ஒதுங்கி தங்கள் மேன்மையைக் காட்டினர்.

சுவாமிமலைக்கு போய்விட்டு டெல்லி செல்லுமாறு தெய்வமாம் மஹாபெரியவா உத்தரவிட்டதன் காரணம் இவர்களுக்கு அப்போது புரிந்தது. தெய்வத்தின் கருணை மேலும் தொடர்ந்தது.

கோயில் ஓரளவு பூர்த்தியடைந்திட்ட நிலையில் அந்த பக்தர்கள் பெரியவாளை தரிசித்து கோயிலில் அருளப்போகும் சிலைக்காக அனுக்ரஹம் பெற வந்தனர்.

சுவாமிநாதர் சிலைவடிக்க எங்கே கல் எடுப்பதென்பதை பெரியவாளே சொன்னார்.

"திருநெல்வேலி பக்கத்திலே குறுக்குத்துறைன்னு ஒரு இடமிருக்கு. அங்கேர்ந்து எடுங்கோ” என்று அருளி அதற்காக நல்ல நாள் நல்ல லக்னம் இவைகளையும் ஸ்ரீ பெரியவாளே குறித்துக் கொடுத்தது இவர்களின் பாக்யம்தான்.

மேலும் திருப்பனந்தாள் மடாதிபதி அவர்களும் அதே இடத்தை குறிப்பிட்டதில் இவர்கள் கல்லை எடுத்துவர புறப்பட்டனர். ஆனால் குறுக்குத்துறை சென்றபோது இவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

அங்கே கல் இருக்கும் தடயமே தெரியவில்லை. பூராவிலும் ஒரே மணல் மயமாக காட்சிதர கல்லை எங்கே தேடுவதென்று குழப்பமானது.

அங்கே குளித்துக் கொண்டிருந்த ஜனங்களை இதுபற்றி கேட்டபோது அவர்கள் சிரிக்காத குறையாக "என்ன சாமி யாரோ எதையோ சொன்னாங்கன்னு இங்கே கல்லை தேடிட்டு வந்திருக்கீங்களே. எங்களுக்கு தெரிஞ்சி இங்கே எங்கேயும் கல் எடுக்கிறதா தெரியலே" என்று ஏளனமாகக் கூறினர். 

டில்லி பக்தர்களுக்கு இதைக் கேட்டதும் மனம் நொந்தது. செய்வதறியாமல் திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் சன்னதிக்குச் சென்று உருகி நின்றனர். அதில் இருவருக்கு கண்ணில் நீரே முட்டிவிட்டது. இதைப் பார்த்த குருக்கள் இவர்களை விசாரிக்க இவர்களும் தாங்கள் வந்து ஏமாந்த கதையைக் கூறினர்.

நெல்லையப்பராம்  மஹாபெரியவாளின் அனுக்கிரஹம் சன்னதியிலிருந்த குருக்கள் வாயிலாக வெளிப்பட்டது.

"நீங்க சொல்றதெல்லாம் வாஸ்தவம்தான். அங்கே கல்லே கிடையாதுங்கறது உண்மைதான். ஆனா வடக்கு தெருவிலே சுந்தரேஸ்வர ஐயர்ன்னு ஒரு எண்பது வயது பெரியவர் இருக்கார். அவரைக் கேட்டால் ஏதாவது வழி கிடைக்கும்னு தோன்றது. போய் அவரைப் பாருங்கோ" என்று திக்குத் தெரியாமல் நின்றவர்களுக்கு ஒரு திசை காட்டுவதுபோல் சொன்னார்.

கொஞ்சம் தெம்பு உண்டானதில் இவர்கள் உடனே அவர் வீட்டைத்தேடிச் சென்றனர். அந்த வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தவரை சுந்ரேஸ்வர ஐயர் என நினைத்து கல் எடுக்க வந்த விபரங்களைச் சொன்னார்கள்.

அதற்கு அவரோ "உங்க தாபத்தை எல்லாம் சொன்னீங்க. நீங்க தேடிண்டு வந்தவர் நானில்லை. அவர் என் தகப்பனார். அவர் உள்ளே என் தாத்தாவுக்கு சிரார்த்தம் பண்ணிண்டிருக்கார். மூனு மணிக்கு வெளியே வருவார். உங்களுக்கு இன்னிக்கு உங்களை எங்காத்திலே சாப்பிட சொல்ல முடியாது… நாலு வீடு தள்ளி ஒரு மாமி இருக்கா.. நான் சொன்னேன்னு சொல்லி  சாப்பிட்டுட்டு வாங்க. பணம் கொடுக்க வேண்டாம்.. திரும்பி வந்து அப்பாவை பார்க்கலாம்" என்றார்.

இவர்கள் அப்படியே சாப்பிட்டு விட்டு வந்து காத்திருக்க சுந்தரேஸ்வர ஐயரும் வெளியே வந்தார். மிகவும் மரியாதைக்கு உரிய முதியவராக இருந்தார்.

இவர்கள் வந்த விபரத்தைச் சொன்னதும் “ஆமாம்! அங்கே கல் இருப்பது யாருக்கும் வெளிப்படையாத் தெரியாது. நீங்க உடனே உங்க ஸ்தபதியை தந்தி கொடுத்து நாளை மறுநாள் வரச்சொல்லுங்கோ. அவாதான் கல்லை எடுக்க முடியும். கல்லை வெட்டி எடுக்க அவரை ஆட்களையும் அழைச்சுண்டு வரச் சொல்லுங்க. அதுக்கு முன்னாலே அந்த இடத்துக்கு நான் உங்களை அழைச்சுண்டு போறேன். முதல்லே அங்கே பத்தடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டணும்" என்றார். 

அதன்படி இவர்கள் கணபதி ஸ்தபதிக்கு தந்தி கொடுத்து விட்டு ஸ்ரீ சுந்தரேஸ்வர ஐயருடன் அங்கே சென்றனர். "இங்கே கல் இருப்பது ஒரு சூட்சமமான விஷயம், நான் சின்ன வயசுலே பார்த்ததாலே ஞாபகம் இருக்கு" என்று இடத்தைக் காட்டி தோண்டச் சொன்னார்.

அங்கே ஆட்களை வைத்து பள்ளம் தோண்ட பத்தடி ஆழத்தில் ஒரு கல் ஒட்டிக் கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. அதில் மூன்றில் ஒரு பகுதி ஏற்கனவே வெட்டி எடுக்கப்பட்டிருந்தது. 

ஸ்தபதியும் ஆட்களும் வந்ததும் முருகன் சிலைக்கான கல்லை இவர்கள் வெட்டி எடுத்தனர். 

மஹாபெரியவா காட்டிட்ட புனித இடத்திலிருந்து எடுக்கப்பட்ட கல்லில் சிலை வடிக்கவும்  அத்தெய்வமே வழிகாட்டினார் பெரியவாளை கணபதி ஸ்தபதி தரிசித்தபோது. 

அந்த சுவாமிநாத சுவாமி இங்கே சுவாமிமலை முருகன் மாதிரியே இருக்கணும்..

 அதனாலே நீ சுவாமிமலை போய் சன்னதியிலே  நான் சொன்னேன்னு போய் மூனு நாள் உட்கார்ந்து உள்வாங்கின்டு வா. 

 அங்கே  எதையும் வரைஞ்சுக்காதே . மனசுல நல்லா வாங்கிக்கோ. அதே போலத்தான் முருகன் அமையும் என்று உத்தரவு நல்கினார். 

அதன்படியே மிக சிரத்தையாக கணபதி ஸ்தபதியும் சுவாமிமலை கருவறையில் மூன்று நாள் தவம்போல் அமர்ந்து,

அந்த லட்சணங்களை மனதில் வாங்கிக் கொண்டு ஆறுமாதத்தில் டில்லி முருகர் சிலையை வடித்துவிட்டார்.

முருகர் சிலையை டில்லிக்கு எடுத்துச் செல்லுமுன்  மஹாபெரியவாளிடம் கொண்டு வந்தனர்.

 தேனம்பாக்கத்தில் அருளிக் கொண்டிருந்த தெய்வத்தின் முன் முருகர்சிலை வைக்கப்பட்டது.

"பெரியவாளின் அருள்பார்வை சிலையை தழுவியது "எப்போ டில்லி எடுத்துண்டு போறதா இருக்கேள்?" என்று பெரியவா கேட்க இவர்கள் "நாளை" என்றனர்.

"ஒண்ணு பண்ணுங்கோ ... விக்ரஹம் இங்கேயே இருக்கட்டும். நீங்க நாளைக்கு எடுத்துண்டு போலாம். போய் மடத்திலே தங்கிட்டு நாளைக்கு வாங்கோ" என்று கூறி அனுப்பினார். 

அவர்கள் சென்றபின் *தன் திருக்கரங்களால் அந்த முருகனை தடவித் தடவி வினோதமான அனுக்கிரஹத்தை பெரியவா செய்ததாக கைங்கரியம் செய்பவர்கள் மூலம் பின்பு தெரிந்தது.*

அடுத்தநாள் காலை இவர்கள் தேனம்பாக்கம் சென்றனர். 

அப்போது பெரியவா முதல்நாள் பார்த்தது போலில்லாமல், 

அச் சிலையுள் முருகனையே தரிசிப்பதுபோலான பாவனையுடன் பார்த்தது போலிருந்தது.

அந்த அபூர்வ காட்சியை புகைப்படம் எடுத்தனர்.

 கருணாமூர்த்தி பெரியவா கணபதி ஸ்தபதியிடம் ஒரு புதிரான கேள்வி கேட்டு திகைக்க வைத்தார்.

"நான் உன்னை சுவாமிமலை முருகனைப் போலத்தானே செய்யச் சொன்னேன்... அப்படித்தானே செஞ்சே" என்று கேட்டார்.

ஸ்தபதி மிக கவனமாக சிலையை அப்படியே அச்சு அசலாக வடித்திருக்க, 

பெரியவா இப்படிக் கேட்டதால் ஏதோ ஒரு தவறு நேர்ந்துவிட்டதோ என்று ஸ்தபதிக்குப் பதட்டமானது. 

"இல்லே.... சுவாமிமலை சுவாமிக்கு ருத்ராக்ஷமாலை போட்டிருப்பா...

 வெள்ளிக் கம்பியிலே கோத்து போட்ட அந்த மாலை மாதிரி நீ கல்லிலேயே செதுக்கியிருக்க.

 நாளைக்கு யாராவது சுவாமிமலை முருகனையே டில்லிக்கு கொண்டுபோய் வச்சுட்டான்னு சொல்ல முடியாதபடி இந்த வித்யாசம் அமைஞ்சது நல்லதுக்குத்தான்.

 உன்னை அறியாமே அப்படி செஞ்சிருக்கே" என்று முக்காலமும் அறிந்த பெரியவா, கணபதி ஸ்தபதிக்கு மறைமுகமாக புகழாரம் அருளினார்.

டில்லி அன்பர்களுக்கு இப்படி ஒரு. அபூர்வமான ஒரு அனுக்ரஹம் கிடைத்ததில் பெருமகிழ்ச்சி. 

பிரதிஷ்டை செய்வதற்கு முன் பீடத்தில் யந்திரம் வைப்பதற்கு பெரியவாளிடம் அனுக்ரஹம் கேட்டபோது,..

 "இவருக்கு யந்திரம் தேவைன்னு நீங்க நினைக்கிறேளா"..

 என்று அத்தெய்வம் கேட்டதில் தன் முழு தபோ சக்தியையும் தடவி தடவி முருகருக்கு ஏற்கனவே உயிரூட்டியுள்ளதை பூடகமாக அறிவித்துவிட்டு யந்திரம் அமையவும் அருளினார்.

இப்படி தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதனுக்கு,

 டில்லியில் அந்த தந்தையான  பெரியவாளெனும் சங்கரரே அனுக்ரஹித்துள்ள கோயிலாக,

இந்த உத்தர சுவாமிநாதசுவாமி கோயில் திகழ்வது விசேஷமன்றோ!

🙏🏻🙏🏻🙏🏻
Reply all
Reply to author
Forward
0 new messages