சண்முகரின் திருக்கரங்களில் ஆயுதங்களாக திகழ்பவர்கள் யார்?
பதினொரு ருத்திரர்கள் — மஹாதேவன், ஹரன், ருத்திரன், சங்கரன், நீலலோஹிதன், ஈசான்யன், விஜயன், வீமதேவன், பவோத்பவன், கபாலி, ஸெளம்யன் — இவர்கள் சிவனின் அம்சங்களாகக் கருதப்படுகின்றனர்.
பதினொரு ருத்திரர்களும் பதினொரு படைகளாக விளங்கினர்; மேலும், வேல் ஒன்று இறைவன் சிவனால் அருளப்பட்டது. “பதினோர் உருத்திரர் தமையும்” எனக் கூறப்படுவது போல, பன்னிரு திருக்கரங்களிலும் பன்னிரண்டு படைகளோடு முருகவேள் சூரனுடன் போருக்கு எழுந்தார் என்று புராணங்கள் விளக்குகின்றன.
பன்னிரு படைகள் ஆயின: 1. தோமரம், 2. கொடி, 3. வாள், 4. குலிசம் 5. (பகழி) அம்பு. 6. அங்குசம், 7 மணி, 8. தாமரை, 9 தண்டம். 10. வில், 11.மழு, 12. சிவினார் தந்தவேல்."எப்படைக்கும் நாயக மாவதொருச் சுடர்வேல் நல்கியே மதலை கைக்கொடுத்தான்" கந்தபுராணம் I-18-36, 37-38.
பதினொரு ருத்திரர்கள், காஞ்சிபுரத்தில் உள்ள திருக்கோவிலில் சிவலிங்கங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவர்களுடைய சின்னங்கள் அவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன என்றும், நான் படித்ததாக நினைவுள்ளது. அந்த விவரத்தை ஒரு புத்தகத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். எனினும், தற்போது அதைத் தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. அது கிடைத்தவுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
அருணகிரியார் திருப்புகழ் பாடலில்:
“பதினொரு ருத்திராதிகள் தபனம் விளக்கு மாளிகை
பரிவொடு நிற்கும் ஈசுர”
கதியை விலக்கு - திருப்புகழ்
என்று குறிப்பிடுகிறார். அதாவது, பதினோரு ருத்திரர்களின் பிரகாசம் விளங்கும் திருக்கோவிலில் அன்போடு எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரனை அவர் போற்றுகின்றார். மேலும், கொலு வகுப்பு, மயில் வகுப்பு போன்ற பகுதிகளிலும், பதினொரு ருத்திரர்களின் விவரங்கள் இடம்பெறுகின்றன என்பதை காணலாம்.
சண்முகரின் திருக்கரங்களில் விளங்கும் திருப்படைகளை தரிசிக்கும் வேளையில், பதினொரு ருத்திரர்களை நினைவு கூர்ந்து துதித்து, அவர்களின் அருளால் உய்வோமாக!
அன்புடன்
அருணன்