"சரி, நான் ஒரு விஷயம் கேட்கறேன். உண்மையைச் சொல்லணும்!" - பெரியவா 🅚🅝
திருச்சி பக்கத்துல உள்ள கிராமம் ஒண்ணுல மகாபெரியவா 'முகாமிட்டிருந்த காலகட்டம் அது. அந்த சமயத்துல ஒருநாள், கும்பகோணத்துல இருந்து நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாமி ஒருத்தரும் மகானை தரிசிக்க வந்திருந்தா.
பார்க்கறதுக்கு சர்வ லட்சணத்தோட இருந்தாலும், அவர் வதனத்துல ஏதோ ஒரு சோகம் அப்பிண்டு இருந்தது எல்லாருக்குமே பட்டவர்த்தனமா தெரிஞ்சுது.
வரிசைல நின்னு தன்னோட முறை வந்ததும் பெரியவாளை நமஸ்காரம் பண்ணினா அந்த மாமி. "பெரியவா, எனக்கு ஒரு மனக்குறை!" அப்படின்னு தயக்கத்தோட ஆரம்பிச்சா.
அதைப் புரிஞ்சுண்ட பெரியவா, "பரவாயில்லை சொல்லு!" அப்படின்னார்.
"பெரியவா, எனக்குக் கல்யாணம் ஆகி அஞ்சு வருஷம் ஆகறது. அன்னிலேர்ந்து இன்னிக்கு வரைக்கும், நான் எப்போ புதுசு கட்டிண்டாலும், அந்தப் புடைவை கிழிஞ்சுடறது, இல்லைன்னா கறையாகிடறது. இது எதாவது கெட்ட சகுனமா இருக்குமோன்னு மனசு படபடக்கறது!" தழுதழுப்பாகச் சொன்ன பெண்மணி, சில விநாடிகளுக்குப் பிறகு தொடர்ந்தா.
"பண்டிகை நாள், விசேஷ நாள்லன்னு இல்லை, சாதாரண நாள்ல புதுசு கட்டிண்டாலும் இப்படித்தான் ஆகறது. இதோ, நீங்களே பாருங்கோ... இது கார்த்தால கட்டிண்ட புதுப்புடைவை. இங்கே வர்ற வழியில், பஸ்ஸுல இருந்த ஆணியில மாட்டி எப்படிக் கிழிஞ்சிருக்கு, பாருங்கோ!" சொன்னவர், தன் புடைவையின் தலைப்பை மகானிடம் காட்டினா.
"இப்படி நடக்கறது ஏதாவது தோஷமா? இல்லை, ஏதோ கெட்டது நடக்கப்போகுது என்பதற்கான அறிகுறியா? இதை நினைச்சு நினைச்சே என் தேக பலம் பாதியாகிடுத்து." என்று படபடத்தா.
எல்லாத்தையும் அமைதியா கேட்டுண்ட பெரியவா, "சரி, நான் ஒரு விஷயம் கேட்கறேன். உண்மையைச் சொல்லணும்!"னு சொன்ன பெரியவா, "நீ கல்யாணமாகி புக்ககத்துக்கு வந்த புதுசுல நவராத்திரி சமயத்துல, நீ தெரிஞ்சே ஒரு தப்பை செஞ்சே இல்லையா?"ன்னு கேட்டாரோ இல்லையோ, அந்த பக்தையோட கண்ணுல இருந்து ஜலம், பொலபொலன்னு கொட்ட ஆரம்பிச்சுடுத்து.
"ஆமா பெரியவா... ஆமா... நவராத்திரி சமயத்துல கொலுவுக்கு வந்தவாள்ல ஒருத்தருக்கு ரவிக்கைத் துணி வைச்சுக் கொடுத்தப்போ, அது ஓரத்துல லேசா கிழிஞ்சிருக்கறதைப் பார்த்தேன். சும்மாதானே குடுக்கறோம்... அதுவும் ஒரு ஓரத்துல லேசாதானே கிழிஞ்சிருக்குன்னு நினைச்சு, அதை அப்படியே உள்பக்கமா திருப்பி மடிச்சுக் குடுத்துட்டேன்."
சொன்ன பக்தை அப்படியே கதற ஆரம்பிச்சுட்டா, "பகவானே... அந்தப் பாவம்தான் என்னை இப்படித் துரத்தறதா? இதை எங்கே போய் எப்படித் தொலைக்கறது? நீங்கதான் வழிகாட்டணும்"ன்னு அவ கெஞ்சினது அங்கே இருந்தவா மனங்களையே கரைய வைச்சுது. மகானுக்கு மனசு இளகாம இருக்குமா, ஆதுரத்தோட அவளைப் பார்த்தார்.
"எப்போ இத்தனை பெரிய சபைல நீ செஞ்ச தப்பை மறைக்காம சொல்லி, மன்னிப்பு கேட்டியோ, அப்பவே அந்தப் பாவம் தொலைஞ்சுடுத்து. இனிமே நீ செய்ய வேண்டியது பிராயச்சித்தம்தான்.
அதனால், அகத்துக்குப் போனதும், நல்ல வெள்ளிக்கிழமையா ஒரு நாளைப் பார்த்து, ஒன்பது சுமங்கலிகளை அழைச்சு, நல்ல ரவிக்கைத் துணியை தாம்பூலம் தட்சணை மங்களப் பொருட்களோட வைச்சுக்குடு. உன்னோட பாவம் முழுசா விலகும். அதுக்கப்புறம் நீ சந்தோஷமா புதுப்புடைவை கட்டிக்கலாம்."னு சொல்லி முடிச்சார்.
மன நிறைவோட, பெரியவாளை மறுபடியும் நமஸ்காரம் செய்துட்டு, பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டா அந்த பக்தை,
அதுக்கப்புறம் அவ புதுசு உடுத்தின்ட போதெல்லாம் எந்தப் பிரச்னையும் ஏற்படலைங்கறதைச் சொல்லணுமா என்ன? "
💫🅚🅝💫