அசோகன் எழுதிய மடலின் உந்துதல் இந்த கட்டுரை. வாழ்க அவர். வளரட்டும் அவர் தொண்டு
முருகனின் வாகனம்
முருகனின் வாகனம் எது என்றால் மயில் என்று ஒரு சிறு குழந்தை கூட சொல்லிவிடும்
முருகனுக்கு பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை ஆகியவையும் வாகனங்களாக இருந்து வருகின்றது. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். அங்கு அமர்ந்த கோலத்தில் உள்ள முருகனின் கிழே யானையும் ஆடும் வாகனமாக உல்ளது. சில கோயில்களில் கோழி வாகனமும் உண்டு.
முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஞானப்பறவை.
சங்க
இலக்கியமான பரிபாடலில் முருகனின் வாகனமாக ‘மேடம்’
எனும் ஆடு குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம்
மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரகோயிலில் உற்சவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில்
பவனி வருவார்.
“முருகனுக்கு மயில், யானை, ஆடு என்று மூன்று வாகனங்கள் இருப்பதற்கு உட்பொருள்கள் உண்டு. மனம், புத்தி, சித்தம் என்று உருவகப் படுத்தியதாக வைத்துக் கொள்ளலாம். மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறது என்பர் அறிஞர்.. 'பிணிமுகம்' என்ற யானை மேலுள்ள முருகனின் கோலத்தைக் குமார தந்திரம் போன்ற பல நூல்கள் சொல்கின்றன. "வேழம் மேல்கொண்டு", " அங்குசம் கடாவ ஒரு கை" "ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி" என்றெல்லாம் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.
இரத்தன கிரியில் முருகனின் வாகனமாக இருக்கும் மயில் அசுரருர்களுக்கு பயந்த ஒடின இந்திரனே என்கிறது இரத்தனகிரி தல வரலாறு.
திருத்தணியில் உள்ள யானை வாகனம் ஸ்வாமியை பார்க்காமல் ஏன் கிழக்கு நோக்கி இருக்கிறது என்பது நாங்கள் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை
ஆமாம், ஆடு வாகனமானது எப்படி?
விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவன் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம், எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றான். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான். தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒன்று செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையை பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு கொண்டு வந்தனர் சிலர். யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர். பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.
எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் கண்ண பரமாத்மா. அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது. இந்த தகவல் முருகப் பெருமானுக்கு சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான். முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார். முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று.. ‘அசம் ( அஜம் – ஆடு) மேவிய பெருமாளே ( கனவாலங் – திருப்புகழ்) தகர் இவர் வல் (குன்றுங் குன்றுந் - திருப்புகழ்) என்று அருணகிரியார் குறிப்புடிகிறார்.
இந்த சம்பவத்தை வாழ்வியலோடு ஒப்பிடலாம். கடவுள் இருக்கிறார் என்பது தெரிந்தும், ஒவ்வொரு ஜீவனும் தங்களை உயர்ந்த ஒரு பிறவியாகக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் திரிகின்றன; அநியாயம் செய்கின்றன. இறைவன் அவற்றை தம் பக்கம் இழுக்கிறான். அவை அவனைச் சரணடைந்தால், தனக்கும் ஐக்கியமாக்கிக் கொள்கிறான். திருந்தாத ஜென்மங்களை கடுமையாகச் சோதிக்கிறான். இங்கே ஆடு அடங்கிப் போனதால், அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது. தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, ‘இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார்.’. முருகன் சிரித்தான். ‘நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையின் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும்’, என்றார்.
இன்னோரு வரலாரும் உண்டு. சிவபுராணத்தில் முருகனை பற்றிய கதை தான் அது. நாரதர் எங்கோயோ ஒடிப்போய்வீட்ட தன்னுடைய ஆட்டைப்பற்றிக் கேட்டார் ஒருமுறை. அதைக்கண்டு பிடிக்குமாறு தன்படையை அனுப்பினான் முருகன். அந்த ஆட்டை விஷ்ணு இருந்த இடத்தில் கண்டு அதை எடுத்து வந்தனர். முருகன் அதன் மீது அமர்ந்து உலகை வலம் வந்து திரும்பினான். நாரதர் அந்த ஆட்டை திருப்பித்தர வேண்ட ‘இனி ஆடுகளை பலிதர வேண்டாம்’ என கூறிவிட்டு எதற்காக ஆட்டை பலி கொடுத்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டதாக சொல்லி முடித்தார்.
அக்கினிக்கு வாகனம் ஆடு. அக்கினி சொருபமான முருகனுக்கு ஆடு வாகனம் பொருத்தம்தானே.
மயில் வாகனாமான கதை நமக்குத் தெரியும்.
மாமரமாக வளர்ந்து நின்ற சூரனை இரு பிளவாக்கி மயிலாகவும், சேவலாகவும் மாற்றிய வித்தையை வியக்கிறார். அருணகிரி பெருமான். “தச்சா, நீ என்ன சித்தனா? எக்காலமும் மக்காத சூர்க் கொத்தரித்து மயீல் சேவலாக்கிய வேலா’ (அச்சாயிறுக்காணி திருப்புகழ்). அவன் சித்தனோ அல்லது தச்சனோ நமக்கு தெரியாது. நமக்கு அவன் நம்மை ஆட்டி வைக்கும் பெருமான்
யானை எப்பொழுது வாகனாமாயிய்று.
முருகனின் யானை பிணிமுகம் எனப்படும். யானையும் மயிலும் பிரணவ சொரூபம். மயில் மீது வருவதற்கும் பிணிமுகத்தின் மீது வருவதற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், தோகை விரித்த மயில் மீது முருகன் வீற்றிருப்பது பிரணவத்தின் உட்பொருளாக முருகன் உள்ளான் என்பதையும், பிணிமுகத்தில் அமரும்போது பிரணவத்தை இயக்குபவனாக இருந்து முருகன் அதனைச் செலுத்துகிறான் எனப் பொருள்படும்.. ‘ஆனதனிமந்தர ரூபநிலைகொண்டு ஆடும் மயில்” , “ஓகார பரியின்மிசை வர வேண்டும்” என்றெல்லாம் அருணகிரிநாதர் கூறியிருக்கிறார்.
சூரனை வதைக்கும் முன் யானை வாகனம் கொண்ட முருகன் சூரனை வதைத்தப் பின் மயில் வாகனம் கொண்டான் என்பது புராணம்.
கடுஞ் சின விறல் வேள் (- கடும் கோபமும் வீரமும் கொண்ட முருகப் பெருமான்) களிறு ஊர்ந்தாங்கு (- தன் வாகனமாகிய யானையில் ஏறி ஊர்ந்து வந்ததைப் போல) செவ்வாய் எஃகம் (- சிவந்த முகத்தை உடைய உன் வேல்) விலங்குநர் அறுப்ப ( - எதிர்ப்பவரை அறுக்க) ……என வரும் ஒரு பதிற்றுப்பத்து பாடல் வரிகளிலிருந்து யானை வாகனமாக இருந்தது தெரிய வருகிறது. “உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழுக்கி”, “பிணிமுகம் ஊர்ந்த வெல்போர் இறைவ” என்பன பரிபாடல் வரிகள். தன்னை வழிபடுவோர் வரும் சமயம் யானை மேல் அமர்ந்து அருள் செய்வது அவன் இயல்பு எனபது திருமுருகாற்றுப்படை செய்தி. சிதம்பர ஆலயத்தின் கிழக்கு நுழை வாயிலில் கஜருதர் உருவத்தில் உள்ள முருகன் காணப்படுகிறார். அதைக் கண்டுதான் சிதம்பரம் திருப்புகழில் ‘உன்றன்டுக் சிந்தை சந்தோஷித் தழு கொண்டருள வந்து சிண்டுரத் தெரி’ (வந்து வந்து) என அருணகிரிநாதர் பாடியிருப்பாரோ?. போருக்குசெல்லும் பொழுதும் யானை மீது அமர்ந்து செலவதாகவும் சொல்லப்படும்.
குறிஞ்சி நிலப் பறவையாகிய மயிலை விட முருக வழிபாட்டுடன் அழுத்தமான தொடர்பைப் பெறுகிறது யானை. கி.பி. 7ஆம் நூற்றாண்டு முதல் 10ஆம் நூற்றாண்டு வரையிலான முருகன் சிற்பங்களிலெல்லாம் முருகனின் வாகனமாக யானையே சித்திரிக்கப்படுகிறது. இந்த யானை பிணிமுகம் என்ற பெயருடையது என்று சங்க இலக்கியங்களால் தெரிய வருகிறது.
இந்த கோலத்தில் உள்ள முருகனின் வாஹனம் யானை ஆகும். ஆகவே அவரை கஜவாஹனர் என்றும் கஜாருதர் என்றும் அழைக்கின்றார்கள். இப்படிப்பட்ட முருகனின் கோலங்கள் பண்டைக் கால முருகனின் ஆலயங்களில் மூலவருக்கு முன்னால் அமைத்திருந்தார்கள்.
ஒருசமயம் தாரகன் என்ற அசுரன் யானைமீது அமர்ந்து விஷ்ணுவை எதிர்த்தான். தன்னை யானையாக மாற்றி முருகனை தன் மீது அமர்த்திக் கொண்டு அவனை வதைத்தார் . முருகன் கயாரூட மூர்த்தியானார்
( அத்திக்குப் பலமீவாய் – சுத்தசித்த, திருப்புகழ்). கந்த புராணத்தின்படி இந்திரனின் வாகனமான யானை முருகனுக்கும் வாகனமாக இருந்துள்ளது.
திருத்தணி, ஸ்வாமி மலை, உத்தர ஸ்வாமிமலை, மத்திய ஸ்வாமிமலை ( போபால்) உத்திரமேரூர், குமரன் குன்றம் போன்ற ஆலயங்களில் முருகனுக்கு வாகனம் யானைதான்.
ஆண்டார் குப்பம் பாலசுப்பிரமணிய ஆலயத்தில் சிம்மத்தின் மேல் இருக்கும் மயில் மீது முருகன் இருக்கிறான்.
ஆடு வாகனமாக அமைந்த கோயில் இருக்கிறதா?