நேற்றைய தினம் கூடாரவல்லி வைபவம். நெய்யில் மிதந்த ஸ்வாமிக்கு சர்க்கரை பொங்கல்/ அக்காரவடிசல்
ஸ்வாமிக்கு நைவேத்தியம் செய்த பிறகு சாப்பிட்டிருப்பீர்கள். அதற்கும் கூடாரவல்லிக்கும் என்ன சம்பந்தம்?. அன்றைய திருப்பாவை பாடல் ‘கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா..’ அதில் “பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்” என்பதாகும்.
திருமாலின் அருளை பெறுவதற்காகவும், திருவடியாகிய வைகுண்ட பதவியை அடைவதற்கும் வழி செய்யும் பாவை நோன்பின் நிறைவு நாளையே கூடாரவல்லி என போற்றுகின்றோம். அதே ஆண்டாள் நாச்சியர் திருமொழியில் “நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவியில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன் நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்” என்று சொல்லுகிறார். நான் நூறு (தடா – பெரிய பாத்திரம்)
- நூறு பாத்திரத்தில் நிறைய அக்கார வடிசில் என் வாயால் நேர்ந்து கொண்டு நேர்த்திக் கடனாக வைத்தேன்
குறையாத செல்வங்களைக் கொண்டவன் இன்று வந்து இவற்றை ஏற்றுக் கொள்வாரோ ? என்று பாடியிருக்கிறார்
ஒரு ஏழை பிராமணின் பெண்ணால் இதை நிறைவேற்றிருக்க முடியுமா என்ற சந்தேகம் நமக்கு தோன்றுவது போல் திருப்பாவை ஸ்வாமி ஸ்ரீஇராமானுஜர்க்கும் தோன்றியிருக்க வேண்டும். ஆண்டாள் திருமாலிருஞ்சோலை அழகருக்குத் தருவதாக வேண்டிக்கொண்ட நூறு தடா வெண்ணையும், நூறு தடா அக்கார அடிசிலும், அவள் தந்தாளோ இல்லையோ என்று கவலையுற்று, ஆண்டாள் சார்பாக அவரே நிறைவேற்றினாராம். கூடாரவல்லி நாளின்போது, 250 கிலோ அரிசி, 120 லிட்டர் பால், 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்து, பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும், வெண்ணெயும் பெருமாளுக்கு நைவேத்தியமாக செய்யப்படுகிறது. அந்த வழக்கம் மற்ற திருமால் தலங்களிலும் பரவ இன்று இல்லங்கள் தோறும் குறிப்பாக வைஷ்ணவர் இல்லங்களில் தொடருகிறது