நவராத்திரி_ஸ்பெஷல்
நவராத்திரி வைபவம் பற்றி காஞ்சி பரமாச்சார்யார், ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் என்ன சொல்கிறார்?
“நவராத்திரி நாட்களில் பராசக்தியான துர்கா பரமேஸ்வரியையும், மஹாலக்ஷ்மியையும், ஸரஸ்வதி தேவியையும் பூஜிக்கிறோம். இவ்வாறு மூன்று மூர்த்திகளாகச் சொன்னாலும், முப்பத்து முக்கோடி மூர்த்திகளாகச் சொன்னாலும், அவர்கள் எல்லோருமாக இருப்பவள் பராசக்தி ஒருவளே. இந்த உண்மையை, பரதேவதையே சிருஷ்டி செய்பவள் (ஸ்ருஷ்டிகர்த்ரீ – ப்ரஹ்ம ரூபா) என்றும், அவளே பரிபாலனம் செய்பவள் (கோப்த்ரீ – கோவிந்த ரூபிணி) என்றும் அவளே ஸம்ஹாரம் செய்பவள் (ஸம்ஹாரிணீ – ருத்ரரூபா) என்றும் லலிதா ஸஹஸ்ரநாமம் வர்ணிக்கிறது. அதாவது லலிதையாக, துர்க்கையாக இருக்கிற பராசக்திதான் மஹாலக்ஷ்மியாகவும், ஸரஸ்வதியாகவும் இருக்கிறாள் என்று பொருள். ஆதி பராசக்தியான துர்க்கையைப் பொதுவாகப் பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரியாகையால் மலைமகள்; மஹாலக்ஷ்மியாகப் பாற்கடலில் தோன்றியதால் அலைமகள், சகலகலா ஞானமும் தருவதால் கலைமகள். பார்வதி, மஹாலக்ஷ்மி மற்றும் ஸரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும், எல்லோருக்கும் பொதுவாக அனுக்ரஹம் செய்யக் கூடியவர்கள். இவர்கள் என்னவோ குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே வழிபடத் தகுந்தவர்கள் என்ற வறட்டு சித்தாந்தம் சரியல்ல. ஏனென்றால், பார்வதி, கிராமப்புறங்களில் காவல் தெய்வமாக, காத்யாயினியாகக் கொண்டாடப்படுகிறாள். ‘பட்டாரிகை‘ என்று ஸ்ரீவித்யா உபாசகர்கள் குறிப்பிடும் மஹாலக்ஷ்மிதான் கிராமங்களில் ‘பிடாரி‘யாக வழிபடப்படுகிறாள். ‘பட்டாரிகா மான்யம்‘ என்று பழைய செப்பேடுகளில் காணப்படும் சொத்து, மானியம் போன்ற குறிப்புகளின் அடிப்படையில்தான் ‘பிடாரி மானியம்‘ என்று பேச்சுமொழி உருவாகி இருக்கிறது. அதேபோல ஸரஸ்வதியை ‘பேச்சாயி‘ என்றழைத்து தம் பக்தியை அர்ப்பணித்து வருகிறார்கள். அதாவது பேச்சுக்கே ஆயி, வாக்தேவி என்ற ஸரஸ்வதிதான் இந்தப் பேச்சாயி.
உலகத்தையே அச்சுறுத்தி வந்த அரக்கர்களை, அன்னை பராசக்தி, துர்க்கையாக அவதாரம் எடுத்து அழித்தாள். அசுர குணம் கொண்டவர்களேயானாலும் கடுந்தவம் இயற்றி பல வரங்களைப் பெற்றிருந்தார்கள் அரக்கர்கள். தாய்மை நிறைந்த ஒரு பெண்ணே அவர்களை அழிக்க முன் வருகிறாள் என்றால் அவர்கள் எத்தகைய கொடுமைக்காரர்களாக இருந்திருக்க வேண்டும் என்பதை உலகுக்கு நிரூபிக்கத்தான் மும்மூர்த்திகளும், பிற தேவர்களும் தங்கள் சக்தியையும், ஆயுதங்களையும், துர்க்கைக்கு வழங்கி அந்த வதம் நிகழ உதவினார்கள்.
இவ்வாறு பராசக்தியின் மூன்று அம்சங்கள் ஒவ்வொன்றுக்கும் மூன்று நாட்களாக மொத்தம் ஒன்பது நாட்கள் என்று பிரித்து நவராத்திரி என்று ஆனந்தமாகக் கொண்டாடுகிறோம்.”
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻