பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினைகளுக்கு தீர்வு தருகிறது ரயில்வே ஹெல்ப்லைன் 99625 00500
ரயில்
பயணங்களின்போது... உடன் பயணிப்பவர்களாலோ, ரயில் நிற்கும் இடத்திலோ,
ரயில்வே பிளாட்பாரத்தில் நிற்பவர்களாலோ ஏதேனும் பிரச்சினை எனில்,
பிரச்சினை எங்கே நடந்ததோ அந்த இடத்தில் இறங்கி, ரயில்வே காவல்துறையிடம்
புகார் செய்ய வேண்டியிருக்கும். பயணத்தையும் பாதியில் கைவிட
வேண்டியிருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் புகார்
செய்யவே தயங்குவார்கள். இப்போது அந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு
வந்துள்ளது. ஓடும் ரயிலிலேயே புகாரளிக்கக் கூடிய வசதிதான் அது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கவே இந்த வசதி
ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயணத்தின்போது ஏற்படுகிற பிரச்சினை குறித்து
புகாரளிக்க வேண்டுமெனில், ரயிலில் இருக்கும் பாதுகாப்பு போலீசாரிடம்
கூறினால் புகாரைப் பெற்றுக்கொண்டு ரசீது கொடுப்பார்கள். இது குறித்து
குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட ரயில்வே போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளித்து
புகாரின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். புகாரின்போது உங்களின் முழு
முகவரியையும் வாங்கிக்கொண்டு தேவைப்பட்டால் முதல் தகவல் அறிக்கையை
வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள்.
இதுதவிர ரயில்வே ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. 99625
00500 என்ற இந்த எண்ணில் தொடர்புகொண்டு புகார் தரலாம். ஒருவேளை, ரயிலில்
இருக்கும் பாதுகாப்பு போலீசாரை உங்களால் சந்திக்க முடியவில்லை என்றால்,
மேற்கண்ட எண்ணுக்கு தகவல் கூறினால், அடுத்த நிறுத்தத்தில் இருக்கும்
ரயில்வே போலீசாரையோ அல்லது அதே ரயிலில் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டிருக்கும் போலீசாரையோ நீங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி
வைப்பார்கள்.
ரயில்களில் தொல்லைப்படுத்தும் நபர்கள் முதல் கோச்சில் தண்ணீர் இல்லை
என்றாலும், யாருக்காவது உடனடி மருத்துவ உதவி தேவை என்றாலும் இந்த எண்ணுக்கு
தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் அனைத்து
ரயில்களுக்கும் இந்த எண்ணில் உதவி கிடைக்கும். அதுமட்டுமின்றி, வேறு
மாநிலத்தில் பயணம் செய்யும்போது உதாரணமாக, எர்ணாகுளம் எக்ஸ்பிரஸில் பயணம்
செய்கிறோமெனில் வேற்று மொழிக்காரர்கள் இந்த ஹெல்ப் லைனில் பேசினால் அந்த
ரயிலில் பயணம் செய்யும் பகுதியில் உள்ள ரயில்வே காவல்துறையின் எண் உதவிக்கு
தரப்படும். அந்தக் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்படும். ஒருநாளைக்கு
50 அழைப்புகள் வரை ரிசீவ் செய்யப்படுகிறது. இதில் மூன்று ஷிஃப்ட்டாக
வேலைசெய்யும் அனைவரும் மென்மையாகப் பேசக் கூடிய பெண்களே. எந்த ஒரு
அழைப்புக்கும் தேவையான பதிலை தெளிவாகவும், சுருக்கமாகவும் சொல்கிறார்கள்.
இதே எண்ணுக்கு மூன்று இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதனால், லைன்
கிடைப்பதில் பிரச்சினை வருவதற்கான வாய்ப்பும் குறைவே.
|