நம்முடைய உறவுகள் பணத்தைவிட உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கருதும் நாம் அவ்வாறு நடந்து கொள்கிறோமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ள முயற்சி செய்யும் பொழுது நாம் உணரவேண்டிய ஒன்று என்னவென்றால், நாம் இவ்வாறு நடந்துகொள்வதால் எல்லோரும் இதேபோல நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது. ஏனென்றால் நாம் நல்லவராக நடந்துகொள்ள முயலும் பொழுது நமது எண்ணத்தை கெடுக்க பல சூல்நிலைகள் தானாக உருவாகும். அதை முறியடிக்க நீங்க தவறும் பட்சத்தில், நீங்களும் அவ்வாறு மாறிவிடுகிறார்கள்.
முதலில், கொடுக்கல் வாங்கலில் எப்பொழுதும் முன் பின் யோசித்து செயல்படவேண்டும். நாம் உறவினருக்கு கொடுக்கும் பொழுது வரவில்லை என்றாலும் பரவ இல்லை என்று நினைத்து கொடுக்க வேண்டும். நாம் வாங்கும் பொழுது எப்பொழுது தர முடியும் என்று சிந்தித்து ஒரு தேதியை குறிப்பிட்டு அந்த தேதியில் கொடுத்துவிட வேண்டும். இயலவில்லை என்றால் அந்த தேதி வரும் முன்னமே மாரு தேதியை திட்டமிட்டு அவரிடம் தெரிவித்து விடவேண்டும். மீண்டும் அந்த தேதியில் எப்படியாவது கொடுத்துவிட வேண்டும்.
இரண்டாவது, உறவினர் ஒருவரிடம் பணம் சேரும் பொழுது அதை ஏன் எப்படி என்று நாமாக கேட்கக்கூடாது, அவராக சொன்னாலும் அதை மனதில் வாங்கிக்கொள்ள கூடாது. ஏனென்றால் அவரது யுக்தி அல்லது வழிமுறை நமக்கு ஒத்துவரும் என்று கூற முடியாது.
மூன்றாவது, உறவினர்களிடம் நாமாக உதவி கேட்டு சென்றுவிடக்கூடாது. நாம் உதவி செய்யும் இடத்தில் இருந்தால் அதை அவர் கேட்கும் வரை காத்திருத்தல் ஆகாது. உதவி செய்யும் பொழுது அதை யாரும் அறியா வண்ணமே செய்யவேண்டும். அதை எக்காலத்திலும் எவரிடத்திலும் சொல்லிவிடக்கூடாது.
நான்காவது, அவர் பணத்தால் மாறிவிட்டார் என்று கருதுவது பெரும்பாலும் பொறாமையின் வெளிப்பாடு ஆகும். பொறாமை நம்மை அழித்துவிடும் என்பதை நாம் அறிந்திருத்தல் அவசியம். நாம நமது வாழ்க்கையில் கிடைத்த விடயங்களுக்கு நன்றி உடையவராக இருத்தல் நம்மை பொறாமையிலிருந்து காக்கும்.
ஐந்தாவது, பணம் தொடர்பான விடயங்களில் நாம் ஏழ்மையிலும் செழுமையிலும் ஒரே விதிமுறைகளை பின்பற்றுகிறோமா என்று நாம் மீள்பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
ஆறாவது, நமது தேவைகளை நாம் கட்டுக்குள் வைத்தால், அது பணத்தின் தேவையை குறைக்கும். எனவே பணம் நமது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஏழாவது, நாம் பிறரை மாற்ற முடியாது, நம்மை தான் நாம் மாற்ற முடியும் என்கிற இயற்கையும், நமது வினைகளுக்குத்தான் நாம் பதில் சொல்லவேண்டுமே தவிர மற்றவர்களின் செயல்பாடுகளுக்கு அல்ல என்கிற அடிப்படை அறிவு ,பணம் நமது செயல்பாடுகளை மாற்றும் காரணியாக அமைவதில் இருந்து தடுக்கும்.