திருவண்ணாமலை வந்த சிறுவன் வெங்கட்ராமன் நேராக அருணாச்சலேஸ்வரர் கோவில் எங்கே இருக்கிறது என்று கேட்டுக் கொண்டு சென்றான். ஆஹா ''என் அப்பா'' என்று அவர் முன் நின்று மகிழ்ந்தான். எத்தனை நாள் ஆசை இன்று நிறைவேறியது.! அவன் ஆத்மீக தேடல், மானசீக தாகம் அந்த கணம் முடிவுக்கு வந்துவிட்டதே. சில மணி நேரங்கள் அங்கேயே நின்று தரிசித்தவன் மெதுவாக வெளியே வந்தான். யாரோ ஒரு நாவிதன் தலையை மொட்டை அடித்து விட்டான். அங்கேயே தன்னுடைய மூட்டை, ஆடை, எல்லாம் விட்டெறிந்தான். கோவணாண்டியாக சர்வ சங்க பரித் தியாகியாக இரவும் பகலுமாக அங்கேயே பலநாட்கள் மெளனமாக அமர்ந்தான். ''பிராமண சுவாமி'' என்ற பெயர் அதற்குள் பலரால் அவனுக்கு இடப்பட்டது.
திருவண்ணாமலையில் கோவிலுக்கு அடிக்கடி நினைத்த போது வருபவர் அப்போது அங்கே வாழ்ந்து வந்த ப்ரம்ம ஞானி சேஷாத்ரி ஸ்வாமிகள். ப்ராமணஸ்வாமியை பாதுகாக்கும் பொறுப்பை தானாகவே ஏற்றுக் கொண்டார். ஏனென்றால் கோவிலில் சிலையாக அமர்ந்திருந்த சிறுவயது பிராம்மண ஸ்வாமியை அங்கிருந்த மாடு மேய்க்கும் சிறுவர்களும்
மற்றவர்களும் , சப்தம் போட்டும், குச்சியாலும் கல்லாலும் அடித்து தியானத்தை கலைப்பதையும், துன்புறுத்துவதையும் சேஷாத்ரி ஸ்வாமிகள் பார்த்து விட்டார். அவர்களை பொறுத்தவரை யார் இந்த பையன், உண்மையானவனா, கல் சிலையா? என்ற சந்தேகம். ஆகவே அவனை எழுப்ப இந்த முயற்சி. கிட்டே போக பயம். சேஷாத்ரி ஸ்வாமிகள் பொல்லாத அந்த சிறுவர்களை விரட்டுவார்.
பிராமண சுவாமி இந்த தொந்தரவிலிருந்து விடுபட கோவில் வளாகத்தில் ஒதுக்கு புறமாக தரைக்கு கீழே இருந்த பாதாள லிங்க சந்நிதிக்கு சென்று மறைவாக உட்கார்ந்து கொண்டார். அங்கே எறும்புகள், புழுக்கள் மலிந்திருந்ததை லக்ஷியம் பண்ணவில்லை. அவை வெங்கட்ராமனின் உடம்பை கடித்து புண்ணாக்கி விட்டன. தேகத்தையே மறந்து தியானத்தில் இருந்த பிராமண சுவாமி இதெல்லாம் அறியவே இல்லை. அங்கே அதிக பக்தர்கள் நடமாட்டம் அப்போது இல்லை. யாரோ ஒருநாள் அங்கே பிராமண ஸ்வாமியின் ரத்தமும் சீழும் ஒழுகும் தேக நிலையை கவனித்துவிட்டு சேதி வெளி உலகுக்கு தெரிந்து அங்கிருந்து ப்ராமண சுவாமி அகற்றப்பட்டார். அப்போதிலிருந்து ப்ராமணஸ்வாமி கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்து அருணாசல மலையில் இருந்த தனித்த ஆள் நடமாட்டம் இல்லாத குகைகள், மடங்கள் ஆசிரமங்கள் வணங்களுக்கு செல்ல ஆரம்பித்தார். அங்கே இருந்த துறவிகள், தியானம் செய்பவர்கள், பக்தர்கள் பிராமண ஸ்வாமியை ஆதரித்தார்கள். அன்னம் ஆகாரம், தண்ணீர் கொடுக்க கூட தன்னை மறந்த நிலையில் இருந்த ப்ராமண ஸ்வாமியின் தோளை பிடித்து உலுக்கி விழிப்பு நிலைக்கு கொண்டு வந்து தந்தால் தான் அதை ஏற்றுக் கொள்வார். அவரைக் கட்டாயமாக குளிக்க வைத்தால் தான் ஸ்நானம். திருவண்ணாமலைக்கு வந்த முதல் நாலு மாதங்களுக்கு அப்புறம் இப்படி ஒரு குளியல். ரெண்டாவது ஸ்னானம் இப்படி கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழித்து....தலையில் சடை, அதில் கல் மண் பூச்சிகள் புழுக்கள் குடும்பத்தோடு வசித்து மலிந்திருக்கும். தலையே கனமாக இருக்கும். (இது நமக்கு இருக்கும் தலைக்கனம் போல் அல்ல).
க்ஷவரம் இல்லாத தாடி மீசை முகம். நீண்டு வளர்ந்த நகங்கள். பார்ப்பதற்கே பயங்கரமான தோற்றம். சில பக்தர்கள் தாமாகவே அவருக்கு க்ஷவரம் பண்ணிவிட்டால் உண்டு.
பிற்காலத்தில் சூரி நாகம்மாவிடம் ரமண மகரிஷி ''யாராவது மொட்டை அடித்துவிட்டால் எனக்கு தலையே இருப்பது தெரியாது. தலை இருந்த இடம் லேசாக இருப்பது வேடிக்கையாக இருக்கும்''என்று சொல்லியிருக்கிறார்.
ஒரு வருஷத்துக்கு அப்புறம் 1897ல் பிப்ரவரி மாசத்தில் குரு மூர்த்தம் என்ற மடத்துக்கு சென்று அங்கே 19 மாதம் இருந்தார் ப்ராமண சுவாமி. அங்கே உத்தண்டி நாயனார் என்கிற சாதுவும், அவர் நண்பர் அண்ணாமலை தம்பிரான் என்பவரும் ப்ராமண ஸ்வாமியை ஆதரித்தனர். பிராமண ஸ்வாமியின் சமாதி நிலை, தியானம் தொடர்ந்தது. அங்கே வரும் பக்தர்கள் அவரை நமஸ்கரித்து வணங்கினார்கள். சிலர் வரம் கேட்டார்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பார்த்தவர்கள் அறிந்தவர்கள் மூலம் கூட்டம் சேர ஆரம்பித்தது. சுவாமி இருக்கும் இடத்தை சுற்றி மூங்கில் வேலி . யாரும் நெருங்கி தொடாமல் இருக்க. பக்தர்கள் உணவு கொண்டு வந்து அளிக்க தொடங்கினார்கள்.
பழனி சாமி எனும் மலையாள பிள்ளையார் பக்தருக்கு ஸ்ரீனிவாச அய்யர் என்ற நண்பர். ''பழனி சாமி நீ ஏன் இப்படி கல்லைக்கட்டிக்கொண்டு பிள்ளையார் என்று அலைகிறாய். அருணாச்சலத்தில் மலைமேல் குரு மூர்த்தம் மடத்தில், உயிருள்ள ஒரு ஒரு பிள்ளையார் இருக்கிறாரே தெரியாதா? இளம் பாலகன் துருவன் மாதிரி தவத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறாரே. நீ அங்கே போய் அவருக்கு சிஷ்ருஷை , உதவி பண்ணினால் உன் வாழ்க்கை பயனுள்ளதாக இருக்குமே'' என்று சொன்னார். பழனி சாமி குருமூர்த்த மடம் வந்து பிராமண ஸ்வாமியை பார்த்தார். தனது ப்ரத்யக்ஷ தெய்வம், நான் தேடிய குரு இவரே'' என்று ஏற்றுக்கொண்டு விட்டார். அடுத்த 21 வருஷங்களுக்கு ரமண மஹரிஷியின்
ஆஸ்ரமத்தில் அவரது அணுக்க தொண்டராக இருந்தவர் இந்த பழனி சாமி.
பிராமண சுவாமி தேகத்தை லட்சியமே பண்ணாமல் ரொம்ப இளைத்து விட்டது. இளம் வயதிலும் எழுந்து நடக்க கூட முடியவில்லை. எழுந்திருக்க முயற்சித்து சில அங்குலங்கள் தான் எழுந்திருக்க முடிந்து சக்தி இல்லாமல் துவண்டு தொப் பென்று கீழே விழுவார்.
இந்த கால கட்டத்தில் வெங்கட்ராம ஐயரென்று பக்தர். அரசாங்க அலுவலகத்தில் கணக்கர். தினமும் ப்ராமண ஸ்வாமியை தரிசித்து வணங்கி விட்டு தான் ஆபீஸ் போவார். ஒருநாள் ஒரு பேப்பர் பென்சில் ஸ்வாமிகள் எதிரே வைத்து உங்கள் பெயர் விவரங்கள் எழுதி விடுங்கள் என்று கேட்டார். ஸ்வாமிகள் பதிலளிக்க வில்லை.
''குரு நாதா, நீங்கள் எனக்கு பதில் அளிக்காவிட்டால் நான் இன்று பூரா சாப்பிட மாட்டேன், ஆபீஸ் போகமாட்டேன்'' என்று பிடிவாதமாக கெஞ்சினார். தெளிவான ஆங்கிலத்தில் அந்த காகிதத்தில் ஸ்வாமிகள் அளித்த பதில்
''வெங்கட்ராமன், திருச்சுழி''