5 ஜீவாத்மாவும் பரமாத்மாவும்
மகரிஷி உத்தவருக்கு ஸ்ரீ கிருஷ்ணன் உபதேசிப்பது அர்ஜுனனுக்கு ஏற்கனவே உபதேசித்த பகவத் கீதையின் அடுத்த பக்கம் என்று சொல்லலாம்.
அங்கு சொன்னது ''அர்ஜுனா எடுடா வில்லை விடடா அம்பை'' என்று உணர்த்த. இங்கே ''உத்தவா நன்றாக புரிந்து கொண்டு எனக்குப் பிறகு இதெல்லாம் நீ பூலோகத்தில் எங்கும் சென்று விளக்கிச் சொல்ல வேண்டும்'' என்பதற்காக.
''ஆத்மா பஞ்சபூதத்தின் சேர்க்கையில், ஈடுபாட்டில் செயல்படும் உடலில் இருந்தாலும் அதனோடு ஒட்டாமல் தனித்து இருக்கிறது. தெளிந்த நீர் போல் அமைதியாக இருக்கிறது.
''உத்தவா, ஞானி ஓடும் சுத்தமான நீர் போல. தொட்டும், ருசித்தும் அதன் தூய்மை மாறுவதில்லை. ஆனால் தன்னை அணுகியவரை தூய்மைப்படுத்துகிறது. ஞானி தன்னை அடைந்த பக்தர்களை தூய்மைப் படுத்துகிறான். பகவானின் மீது வைத்த அவனது தொடர்ச்சியான சிந்தனை, மாசுகளை எல்லாம் விலக்குகிறது .
அவனது எளிமையே அவனது பலம்.
''பிறப்பு இறப்பு எல்லாமே உடல் சம்பந்தப் பட்டவை தானே. ஆத்மா காலம் நேரம் எல்லாம் கடந்தது.
சூரியன் நீர்நிலைகளை ஆவியாக்கி மேகமாக சேர்த்து வைத்துக் கொண்டு தக்க நேரத்தில் மழையாக திருப்பி தருவதைப் போல் ஞானி, பஞ்சபூத சேர்க்கையான இயற்கை தருவதை தன்னகத்தே சுமந்து வேண்டுகிற, தேவைப்பட்ட பக்தனுக்கு அவற்றை அளிக்கிறான்.இதையே வரம் என்று சொல்கிறோம். தன்னிடத்தில் வந்து, நின்று, கிளம்பும் ரயில் போல் எந்த சம்பந்தமும் இல்லாத ரயில் நிலையமாக ஞானி உதவுகிறான்.எத்தனையோ ரயில்கள் வரும் போகும்.
எத்தனை எத்தனையோ உடல்களில் புகுந்து புறப்பட்டாலும் ஆத்மா உடல்களோடு எந்த உறவும் வைத்துக் கொள்ளவில்லை. தனித்தே இயங்குகிறது.
உபநிஷத்தில் வரும் ரெண்டு பறவைகள் போல, ஒரே மரத்தின் கூட்டில் வசித்தாலும் ஒரு பறவை அந்த மரத்தின் எந்த பழங்கள், காய்களையும் தொடவில்லை. மற்றொரு அவற்றை ருசிக்கிறது, புளிப்பு, இனிப்பு, ஆகிய ருசிகளில் திளைத்து அதன் பலனை அடைகிறது. இது தான் பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உண்டான வித்யாசம். ஆத்மா உடலில் இருந்தாலும் அது ஆத்மஞானத்தில் திளைத்து எதையும் வேண்டாமல் ஆனந்த அனுபவத்தில் மிளிர்கிறது. இந்திரியங்கள் இழுத்துச் செல்லும் பாதையில் செல்லும் உடல் சுக துக்கத்தை பெற்று அதன் விளைவுகளால் பாதிக்கப்படுகிறது.
கனவில் மலைமேல் இருந்து உருண்டு பாதாளத்தில் விழுபவன் ஆ ஊ என்று கத்திக்கொண்டு வியர்த்து விறுவிறுக்க பெருமூச்சு விட்டு மனைவியிடம் திட்டு வாங்கிக்கொண்டு தான் கண்டது கனவு என்று அறிகிறான். கனவில் கண்ட உடல் அநித்யமானது என்று அறிந்து கொள்ளும் வரை அந்த கற்பனை உடலின் இன்ப துன்பம் அந்த உடலின் ஜீவனை பாதிக்கிறது. கனவில் வந்து மறைந்தது போல் நினைவிலும் உள்ள உடல் அனித்யமானது என்று அறிபவனே ஞானி.
செயல் புரிவது உடலை ஆட்டிவைக்கும் பஞ்ச இந்திரியங்களே என்று உணர்பவன் ''நான் தான் காரணம். நான் தான் செய்தேன்'' என்று சொல்லமாட்டான். உடலை தானாக எண்ணுபவன் வாயில் வரும் வார்த்தைகள் அவை.
ஞானி தனது உடல் புரியும் கர்மங்களுக்கு ஒரு சாட்சியாக மட்டுமே இருக்கிறான். இந்த உடல் தான் புரியும் செய்கைகளுக்காக போற்றப்படலாம், தூற்றப் படலாம். போகட்டும் கண்ணனுக்கே என்று விடுபவன் தான் ஞானி.
என்ன தான் நிறைய வேதம் உபநிஷதங்கள் நெட்டுருப் போட்டு படித்து ஒப்பித்தாலும் பரமாத்வின் மீது நிலைக்காத மனதை உடைய பண்டிதன் எதற்கு சமானம் தெரியுமா? பால் சுரக்காத பசுவை தேய்த்து குளிப்பாட்டி அழகு செய்து வைத்துக் கொள்பவன் போல.
''பிறர்க்குதவாத சரீரம், பக்தியில்லாத குடும்பத்தினர், உணவையே பிரதானமாக கொண்டவர்கள் ஆகியோரின் படிப்பு என்ன பயன் தரும்? என்னை என் செயல்களை உணர, அறியமுடியாத புத்தகங்களை கற்று என்ன பலன் பெறுவான்? ஆக்கல் காத்தல் அழித்தல் மூன்றும் செயலாக கொண்ட எனது அவதாரங்களிலேயே நான் விரும்பியது இந்த கிருஷ்ணன் பலராமன் அவதாரங்களே.
''என் மீது மனதை வை என்று சொல்வதன் அர்த்தமே, எல்லாவற்றிலும் நான் தான் இருக்கிறேன் என்று உணர்வதால் விளையும் எண்ணம் ஒன்றே'' . எண்ணம் சிதறி உலக அனுபவம் தரும் வஸ்துகளாக அனுபவிப்பவன் அந்த மாயையில் சிக்கி அதற்குண்டான பலனை அடைகிறான்.
இன்னொன்றும் சொல்கிறேன். என் வாழ்க்கை, என் செயல்கள், என் லீலைகள், என் உபதேசங்கள் இதை பூரணமாக நம்பி அதையே பின்பற்று பவன் நானாகவே ஆகிறான். அதாவது என்னை சேர்ந்து விடுகிறான்.. நான் வேறு அவன் வேறு இல்லையே.''
''ப்ரபோ, கிருஷ்ணா, யாரை நீ உண்மையான பக்தன் என கருதுகிறாய்? எத்தகைய சேவை செய்யவேண்டும்? எனக்கு உன்னைவிட்டால் யாரும் தெரியாது. உன்னையே ஸ்மரணை செயது கொண்டிருக்கும் எனக்கு இதை விளக்கவேண்டும்.'' என்கிறார் உத்தவர்.
கிருஷ்ணன் புன்முறுவலுடன் பதிலளிக்கிறார்.