ஒரே குரு என்று சரணாகதி பண்ணிவிட்டால் ரொம்ப ரொம்ப ஸரிதான். ஆனால் அப்படிப் பண்ணாததால் பதிவ்ரதத்திற்கு தோஷம் என்கிறாற்போல குருவ்ரதத்திற்கு தோஷம் என்றாகாது. ஒரு ஸ்த்ரீக்கு அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், மாமனார், மாமியார், பிறந்தகத்து - புக்ககத்து பந்துக்கள், பரம ப்ரியமான அவளுடைய ஸொந்தக் குழந்தைகள் என்று பல உறவுக்காரர்கள் இருக்கவில்லையா? ஒரு உத்தம ஸ்த்ரீ அந்த எல்லாரிடமும் ப்ரியாமாயிருந்து கொண்டு அவர்களுக்குச் செய்யவேண்டியதையெல்லாம் நன்றாகச்செய்வான். ஆனாலும் பதி என்ற உறவு தனிதானே? அவனிடந்தானே அவள் சரணாகதி என்றே கிடப்பது?
பல உறவுக்காரர்கள் மாதிரி பல குருக்கள் அவர்களிலே பதி மாதிரி முதல் ஸ்தானம் வஹிக்கிறவராக ஒருத்தர் - 'முக்ய குரு' என்று வித்யாரண்யாள் சொன்னவர். அவரொருவரிடந்தான் சரணாகதி என்பது பிய்த்துப் பிய்த்துப் பல பேரிடம் இல்லை.
மற்ற பந்துக்களிடமும் ப்ரியம் மாதிரி எல்லா குருக்களிடமும் மரியாதை, பக்தியான ப்ரியம். அதனால் மாமனார் - மாமியார் முதலியோருக்கும் ஒரு vFg கீழ்ப் படிகிறது போல இவர்களுக்கெல்லாமும் கீழ்ப்படிந்து நடப்பது.
கோவிலில் அநேக ஸந்நிதிகளில், ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்வாமி. அகத்துப் பூஜையிலும் ஆதி சாஸ்த்ரங்கள் சொல்லி, அப்புறம் ஆசார்யாளும் புத்துயிரூட்டிக் கொடுத்த பஞ்சாயதன பூஜையில் ஐந்து ஸ்வாமி. எல்லாவற்றிடமுமே தான் பக்தி என்றாலும் இஷ்ட தெய்வம் என்று ஒன்று, அதனிடமே சரணாகதி என்று இருக்கோல்லியோ? அந்த மாதிரி பல குருமார்களிடம் பக்தி செலுத்திக் கொண்டே முக்ய குருவாக ஒருவரிடம் மட்டும் ஆத்ம ஸமர்ப்பணம்.
ஏன் பல குரு வருகிறார்கள் என்றால், பரலோகத்துக்கு வழி சொல்லித் தரும் வித்யையிலேயே பல கிளைகள் இருக்கின்றன. ஆத்ம சாஸ்த்ரம் என்ற ஒன்றுக்குள்ளேயே உபாஸனை என்ற branch -குள் எத்தனை branch -கள் என்பதற்கு சாந்தோக்யம் ஒன்றைப் பார்த்தால் போதும். இப்படி அநேக கிளை சாஸ்த்ரங்கள், வித்யைகள் இருப்பதில் ஒவ்வொரு குரு ஒவ்வொன்றில் ஸ்பெஷலைஸ் பண்ணியிருப்பார். நமக்கு அகத்து டாக்டர் என்று ஒருத்தர், அவர் சொல்லியே பல ஸ்பெஷலிஸ்ட்களிடமும் போவது என்று இருக்கிறதோ இல்லையோ? அப்படி ஒரு முக்ய குரு, அநேக உபகுருமார்கள்.
க்ளாஸ் வாத்யர் என்றே ஒருத்தர் இருக்கிறார். அவர் இங்க்லீஷோ,
கணக்கோ எடுக்கிறார். ஸெகண்ட் லாங்க்வேஜுக்கு வேறே ஒரு வாத்யார்,
ஹிஸ்டரி, ஜாகரஃபி, ஸயன்ஸ் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருத்தர் என்று வருகிறார்களோல்லியோ!முக்ய குரு - க்ளாஸ் வாத்யார், உபகுருமார் - வேறே ஸப்ஜெக்ட்கள் எடுக்கிற வாத்யார்கள்.
வேறே விதமாகவும் உண்டு, இங்கே வாய்ப்பாட்டு வித்வானம் பக்க வாத்தியங்களும் மாதிரி முக்ய குருவும், உபகுருக்களும். முக்ய குரு சொல்லிக் கொடுக்கிற ஸப்ஜெக்டே நமக்கு நன்றாக ஏறிப் பூர்ணமாக ஆகும்படி போஷித்துக் கொடுப்பவர்களாக உபகுருமார். பக்க வாத்யக்காரர்களில் ஃபிடில்காரர் அதே ராகம், பாட்டு தாளத்துக்குத்தான் வாசிக்கிறார். ம்ருதங்கக்காரர் அதே தாளத்துக்குத்தான் வாசிக்கிறார். அது வாய்ப்பாடகர் பாடுவதற்கு இன்னும் சோபை தந்து கான ரஸத்தை பூர்த்தி பண்ணி நமக்குள்ளே ஏற்றுகிறது. அப்படி முக்ய குருவின் ஸப்ஜெக்டைப் பண்ணித்தர உபகுருமார்.
உபகுருமார்களின் உபதேசத்தோடு கலந்து கலந்து எடுத்துக் கொள்ளும்படியாகவே முக்ய குருவின் உபதேசங்கள் இருப்பதுண்டு. முக்யமாக சாதத்தை வைத்துக்கொண்டு அதோடு போட்டுக்கொள்ள, தொட்டுக்கொள்ள அநேக வ்யஞ்ஜனக்ஙள் மாதிரி! (சிரித்து) நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடும்படியாக எள்ளுகாய்ப் பொடியும் கொத்ஸும் இருந்தாலும் 'ஸாது' இட்லிதான் 'மெய்ன்' என்கிற மாதிரி ஒரே சாந்தமாக, ஸிம்பிளாக முக்ய குரு மூல தத்வத்தை உபதேசித்து -வாயில் உபதேசம் என்று பண்ணுவதேகூட இங்கே குறைவாக இருக்கலாம். அப்படிப் பண்ணி -நம்முடைய அபக்வ ஸ்திதியில் அது உள்ளே போகாததால் விவரமாக சாஸ்திரங்களிலிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் கேட்டுக்கொண்டு அதோடு இதைக் கலந்தாலே உள்ளே போவதாகவும் உண்டு.
ஒருத்தருக்கு முக்ய குருவாக இருப்பவரே இன்னொருத்தருக்கு உபகுருவாக இருக்கலாம். நமக்கு ஜாகரஃபி வாத்தியாராக மாத்திரமே இருப்பவர் வேறே பசங்களுக்கு க்ளாஸ் வாத்யாராக இருக்கலாமோல்லியோ ஆகையினாலே, ஒருத்தனுடைய முக்ய குருதான் பெரியவர், உபகுரு அவ்வளவுக்கில்லை என்று இருக்கணும் என்றில்லை.
ஆகக்கூடி, குருவிடம் சரணாகதி அவச்யந்தான். பதிவ்ரதாபங்கம் மாதிரி குருவ்ரத பங்கம் ஏற்படாமல் ஆத்மாவை அவரிடமே அபின்னமாக - பிய்த்துப் பிய்த்து இல்லாமல் அபின்னமாக - அர்ப்பணிப்பது என்பது அத்யாவச்ய்ந்தான். ஆனால் அப்படி குரு என்று இருப்பவர் முக்ய குரு என்பவராக இருந்து, வேறே உபகுருமாரும் இருக்கலாம். இருந்தால் தப்பேயில்லை.
சில ஸமயத்தில் என்ன ஆகிறதென்றால் - அபூர்வமாக இப்படி ஆகிறது. ஆனால் நிச்சயமாக ஆகிறது, என்ன ஆகிறதென்றால் - ஒருவரிடம் அவரே ஆத்ம ரக்ஷகர் என்று பரிபூர்ணமாக நம்பி சரணாகதி செய்து நன்றாக முன்னேறுகிற ஒருவரே கூட, உபகுரு என்று புதிசாக வேறே யாரிடமும் எள்ளவும் உபதேசம் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாதபோதிலும், உபகுரு என்ற அளவுக்கு மாத்திரமில்லாமல் இந்த முக்ய குருவுக்கு ஸரிஸமானராகவே இன்னொருத்தரை ஆச்ரயிக்கும்படியும் ஆகிறது. இப்படிப்பட்டவர்கள் இரண்டு பேரையும் முக்ய குருவாகவே பூஜித்து, பக்தியில் இரண்டு பேரிடமும்
கொஞ்சங்கூட ஏற்றத்தாழ்வில்லாமல் இருந்துகொண்டிருப்பார்கள்.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536