வ; '' நானூறு ரூபாய் தருவே னென்றீர்கள்''.
ஜ: -'' இராதே; அப்படிச் சொன்னதாக எனக்கு ஞாபகம் இல்லையே''.
வ: ''முந்நூறு தருவேனென்றீர்கள்''.
ஜ: ''அப்படியும் சொல்லவில்லையே''.
வ - ' இல்லை; இருநூறு தருவேனென்றீர்கள்''.
ஜ '' என்ன,புலவரே பொய் சொல்லுகிறீரே!
வ; '' பொய் இல்லை ஐயா, நூறு ரூபாய் தருவதாகச் சொன்னீர்கள்.
ஜ '' பின் எதற்காக நானூறு, முந்நூறு, இருநூறென்று ஏமாற்றுகிறீர்?
வ; '' நான் உள்ளதைத் தானே சொன்னேன். நீங்கள், "நான் நூறு தருவேன்" என்று சொல்லவில்லையா? ''அதை தான் '' நான் நூறு'' என்று சொன்னீர்கள் என்றேன். முன்பு நான் வந்த போது நூறு தருவதாகச் சொல்லவில்லையா? அதை தான் ''முன் நூறு"" என்றேன். இரு உனக்கு நூறு தருகிறேன் என்றீர்கள் . காத்திரு நூறு தருகிறேன் என சொன்னதை ''இரு நூறு '' என்கிறீர்கள் என்றேன். நூறு தருகிறேன் என்று நீங்கள் சொன்னதும் பொய்யில்லையே, நானும் பாடலாக அதை சொன்னதும் பொய்யில்லை. ''
வண்டானத்தின் சாதுரியமான விடை யில் மகிழ்ந்த ஜமீன்தார் தாம் வாக்களித்த நூறு ரூபாயோடு மற்றொரு நூறு ரூபாயும் சேர்த்து இருநூறாக பரிசளித்தார்.
31.5.2026 ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை
8. திருவாலங்காடு பத்ரகாளி கோவில்.
திருவாலங்காடு சிவன் கோவிலை ஒட்டியே வெளியே பத்ரகாளிக்கு ஒரு அழகான கோவில். திறந்திருந்தது. உள்ளே சென்று அம்பாளை தரிசித்தோம். சாதாரணமாக நடந்து அல்ல.. கோடை வெயிலில் உச்சி வேலை, கொளுத்தும் உஷ்ணத்தில், ஓட்டமும் நடையுமாக, வெறும் காலோடு தீ மிதித்துக் கொண்டு ... ஆம் பௌர்ணமி ஞாயிறுக்கிழமை அம்மன் கோவில்களில் தீமிதிக்கும் வழக்கம் பல இடங்களில் உண்டு. பக்தர்கள் நெருப்பில் நடப்பார்கள்.
நாங்களும் கொஞ்சம் இந்த அனுபவம் பெற்றோம்.
இது ஒரு பிரபலமான புராதன காளி பீடம்: தந்திர சூடாமணி நூல் கூறும் தேவியின் 51 சக்தி பீடங்களில் இது காளி பீடமாகும். இங்கு அம்மன் சாந்த சொரூபியாக எட்டு திருக்கரங்களுடன் காட்சி தருகிறாள்.
ஒருகாலத்தில் சும்பன், நிசும்பன் எனும் ரெண்டு ராக்ஷஸர்களை அம்பாள் வதம் செய்த பிறகு, பார்வதி தேவி தன் பார்வையால் காளியை தோற்றுவித்து அவளையே இந்த ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.
சிவபெருமானிடம் தோல்வியுற்ற காளி, சிவனின் நடனத்தை ரசித்தபடி இருப்பதாக ஐதீகம். இத்தலத்தில் சிவபெருமானை தரிசிப்பதற்கு முன்பாக பத்ரகாளி அம்மனை வழிபட வேண்டும் என்பது மரபு. இதை தான் மேலே சொல்லி இருக்கிறேன்.
நேரமின்மை, வெயில் கொடுமை கருதி அம்பாளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு சிவ தர்சனம் ஆனபின் அவளை தரிசித்தோம்.
31.5.2026 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் யாத்திரை
12. குன்றத்தூர் நாகேஸ்வரர் ஆலயம்.
மாலை வேளை ஐந்தரை ஆகிவிட்டது. குன்றத்தூர் ஐந்து கி.மீ. தூரம். அரைமணிநேரத்துக்குள் சென்றுவிட்டோம். நாகேஸ்வரன் ஆலயம் தொண்டைமண்டல ராகுஸ்தலம். அழகான குளம் கொண்டது.
சென்னையைத் தாண்டி 25 கி.மீ. தூரத்தில் ரெண்டு மணி நேரம் பயணப்பட்டால் கிராமங்கள் சில இன்னும் இருக்கின்றன. அப்படித்தான் பாதி நகரமாக மாறி வரும் குன்றத்தூருக்கு சென்றபோது அதிக போக்குவரத்து நிறைந்த பட்டணமாக மாறிவிட்ட பழைய கிராமம் தென்பட்டது. போலீஸ் காரர் பாவம் வாயில் விசில் வைத்து ஊதி குறுக்கும் நெடுக்கும் கட்டுப்பாடு மீறி ஓடும் பலவித வண்டிகளை திசை திருப்பி விட்டுக்கொண்டிருந்தார்.
குளக்கரையில் சேக்கிழார் கட்டிய நாகேஸ்வரர் ஆலய கோபுரம் கண்ணைக் கவர்ந்தது. ஐந்து நிலை ராஜகோபுரம். அதில் 7 கலசங்கள். நாகேஸ்வரன் நாகாபரணத்தில் ஜொலிப்பதை தரிசித்தோம். அம்பாள் காமாக்ஷி.
சேக்கிழார் ஒரு அதிசய மனிதர். 2ம் குலோத்துங்கன் (அநபாய சோழன் என்றும் அவனுக்கு பெயர்) காலத்தவர்.. 4253 பாடல்களைக் கொண்ட ''பெரிய'' புராணம் என்கிற திருத் தொண்டர் புராணம் எழுதினாலும் தன்னை ''சிறு'' த்தொண்டர் என்றே அடையாளம் கண்டவர். ஒரு மின்னஞ்சல் எதையோ எழுதி அதை நாலு பேர் பார்த்து படித்து விட்டால் என் தலை பெருத்து விடுகிறது. பார்வை மேல் நோக்கி. கர்வம். காலின் கீழே கம்பியோ, கல்லோ தெரியவில்லையே. இடி பட வேண்டி யிருக்கிறது. அப்படி இருக்க சேக்கிழாருக்கு எவ்வளவு அடக்கம் அவருக்கு!. அதனால் தான் என்றும் அவர் பெயர் நிலைத்து நிற்கிறது. நிற்கும்.தமிழ் உள்ளவரை. 63 சைவ நாயன்மாரைப் பற்றி அவரைப் போல் எவர் எழுதமுடியும். சைவ திரு முறை யில் நீங்கா இடம் பெற்றதாயிற்றே.சோழன் அவருக்கு இட்ட பெயர் ''உத்தம சோழ பல்லவன்''.
சேக்கிழார் நம் ஊர்க் காரர். பக்கத்தில் குன்றத்தூரில் பிறந்து வேதாகம சாஸ்திரம் கற்று, திருமுறைகள் ஓதிய இவர் இயற்பெயர் யாருக்கும் ஞாபகமில்லை என்பதால் நினைவூட்டுகிறேன். ''அருண்மொழி ராம தேவர்''. அநபாய
சோழன் சிவபக்தன். சிதம்பரம் நடராஜரை அனுதினமும் வழிபடுபவன். சைவத் தமிழை வளர்க்க சபை அமைத்தவன். சேக்கிழாரை அமைச்சராக்கி ''நீங்கள் தான் சைவ நாயன்மார்கள் வரலாற்றை பாடல்களாக இயற்ற வேண்டும் என்று விண்ணப்பித்தான். கரும்பு தின்ன கூலியா வேண்டும்? சேக்கிழார் சிதம்பரம் போனார். விவரங்கள் சேகரிக்கலானார் . ஆயிரங்கால் மண்டபமே அவர் இருப்பிடமாயிற்று. ஓலைச் சுவடிகள் நிரம்பின.
ரொம்ப விஷயங்கள் தெரிந்தால் இது தான் ப்ராப்ளம். எதைச் சொல்வது? எப்படி ஆரம்பிப்பது? சிவ பெருமானுக்கு இது புரியாதா? பாவம் நம் பக்தனுக்கு உதவுவோம் என்று வானில் அசரீரியாக ''தம்பி யோசிக்காதே, கலங்காதே, இந்தா இப்படி ஆரம்பி'' என்று முதலடி எடுத்துக் கொடுத்தார். சேக்கிழார் தானே பாடிக்கொண்டு பாடல்களை இயற்றினார்.
''உலகெலாமுணர்ந்து '' என்று முதலடியில் துவங்கி பெரிய புராண வண்டி ஒரே ஓட்டமாக வேகமாக நிற்காமல் ஓடியது. நமக்கு ஒரு பரிசாக பெரிய புராணம் கிடைத்தது.
''உலகெலாமுணர்ந்து ஒதுதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் ஜோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்''
எவ்வளவு பொருள் நிறைந்த செய்யுள் இது. உலகமெல்லாம் என்றாலே பற்று நிறைந்த இந்த பிரபஞ்சம். இதன் தன்மை அறிந்து. கங்கையும் சந்திரனும் அணிந்த ஜடாமுடியன், இந்த சிதம்பரத்தில் எல்லையற்று, முடிவற்று சதானந்தத்தில் சத் சித் ஆனந்தமயமாக ஒளி வீசி அண்டவெளியின் ரஹஸ்யமாக நிற்பவன். அந்த சிவனின் அழகிய தண்டை சதங்கை ஆடும் பதமலரைப் போற்றி வாழ்த்தி வணங்குவோம்.
ஸமஸ்த்ரிதத்தில் நாகம், ஸர்ப்பம் என்றால் பாம்பு. ஒரு தீய சக்தி கொண்ட ஊறும் ஐந்து. பாம்பிற்கு இருக்கும் தெய்வீக குணத்தை கண்டுகொண்டவர்கள் நமது சித்தர்கள், ஞானிகள் ஆவர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்களான ராகு – கேது கிரகங்களும் பாம்பின் அம்சமாக கருதப்படுகின்றன. அப்படியான ராகு – கேது கிரகங்களின் தோஷங்களை போக்கும் நாகேஸ்வரர் கோயில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
இந்த குன்றத்தூர் வடநாகேஸ்வரம் நாகேஸ்வரர் கோயில் 1000 வருஷ பழமையான கோயில். மூலவர் நாகேஸ்வரர் என்றும், உற்சவர் சோமாஸ்கந்தர் எனவும் அழைக்கப்படுகிறார்.சகல பாவங்களையும் போக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம் இருக்கிறது. செண்பக மரம் ஸ்தல விருக்ஷம்.
இந்த கோயில் உருவான விஷயம்:
ஒரு சமயம் சேக்கிழார் கும்பகோணம் அருகே உள்ள நாகேஸ்வரர் கோயிலில் சிவபெருமானை தரிசித்த சேக்கிழார், தினமும் அவரை வழிபட விரும்பினார். ஆனால் அவ்வளவு தூரம் எப்படி செல்வது? ஆகவே தான் வசிக்கும் குன்றத்தூரிலேயே ஒரு கோயில் கட்டி நாகேஸ்வரர் என்கிற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடலானார் அன்று முதல் குன்றத்தூரில் இந்த ஸ்தலம் வட நாகேஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் சேக்கிழார் பிரதிஷ்டை செய்த சிவலிங்கம் சிதிலமாகி (பின்ன மாகி) விட்டதால் அதை சூரிய தீர்த்தத்தில் போட்டு விட்டார்கள். புதிய லிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்ய பட்டது. அன்றே சிவனின் அசரீரி பிரதம அர்ச்சகருக்கு கேட்டது. ''சேக்கிழார் லிங்கத்தையே பிரதிஷ்டை செய் ''. உடனே புஷ்கரணியில் போடப்பட்ட சேக்கிழார் பிரதிஷ்டை செய்த பின்ன லிங்கம் மீண்டும் வெளியே எடுக்கப்பட்டு, மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை, ஈசன் சன்னிதியின் பின்புறம் வழிபாட்டிற்காக வைத்துள்ளனர். இந்த லிங்கத்திற்கு, ‘அருணாசலேஸ்வரர்’ என்று பெயர். இன்றும் பார்த்து தரிசிக்கலாம். இந்த லிங்கமும் மூலவர் தான்.
குன்றத்தூர் நாகேஸ்வரன் ஆலயத்தில் சேக்கிழாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. அனைத்து பூச நட்சத்திர தினத்தன்றும் இவருக்கு அபிஷேகம் பூஜைகள் நடக்கின்றன. வைகாசி மாதத்தில் சேக்கிழார் சிவ தரிசனம் செய்யும் வைபவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இத்தலத்தில் ராகுவின் அம்சமாக இருக்கும் நாகேஸ்வராகிய சிவபெருமானுக்கு காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய மூன்று வேளையும் பாலபிஷேகம், இங்கு ராகு கால பூஜையின் போது ஸ்வாமிக்கு உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் படைத்து வழிபடுவோருக்கு நாக தோஷங்கள், ராகு – கேது கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நீங்குவதாக கூறுகிறார்கள். கோயிலிலேயே உளுந்து சாதம் செய்து தருகிறார்கள். நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கோவிலுக்கு வந்து ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவரான நாகேஸ்வரர், ராகுவின் அம்சம். தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணிக்கு பாலபிஷேகம் நடைபெறுகிறது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். இதனால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
அம்பாளுக்கு தெற்கு நோக்கிய தனி சன்னிதி. எதிரே சிம்ம வாகனம். சித்ரா பவுர்ணமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடக்கிறது. விழாவின் 8-ம் நாளில் சிவன், அடியாருக்கு காட்சி தரும் வைபவம் நடைபெறும். அப்போது சுவாமிக்கு முன்புறம் செல்லும் ஒரு சப்பரத்தில், அவரைப் பார்த்தபடி சைவ சமயக்குரவர்கள் நால்வர் மற்றும் சேக்கிழாரும் உலா வருவார்கள். தெப்போத்சவ விழாவில் ஒரு நாள், நாக வாகனத்தில் திருவீதி உலா நாகேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வைகாசி மாதம் பூசம் நட்சத்திரத்தை ஒட்டி, சேக்கிழாருக்கு 10 நாட்கள் குருபூஜை நடைபெறுகிறது. குரு பூஜை தினத்தன்று, காலையில் சேக்கிழார் உற்சவமூர்த்தி, இங்கிருந்து தேரடி வீதிக்குச் செல்வார். அவரை பொதுமக்கள் சிவபெருமான் சார்பில் வரவேற்று, கோவிலுக்குள் அழைத்துச் செல்வார்கள். அதன் பிறகு சேக்கிழார், கருவறைக்குள் சென்று மூலவரை தரிசிக்கும் நிகழ்வு நடைபெறும். அன்றிரவு சேக்கிழார் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்வார். பின்னர் மறுநாள் காலையில் கோவிலுக்குத் திரும்புவார். அப்போது இரவு முழுவதும் கோவில் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
31.5.2026 ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட் புனித யாத்திரை.- நங்கநல்லூர் J K SIVAN
(இத்துடன் நிறைவு பெறுகிறது)
15 சிறுகளத்தூர் அமராபதீஸ்வரர் ஆலயம்.
பதினேழு வருஷங்களுக்கு முன்பு 16.4.2009 வியாழக்கிழமை, காரில் குன்றத்தூர் பக்கம் போயிருந்தபோது ஒரு சிதிலமான கோவில் கண்ணில் பட்டு காரை நிறுத்தி அந்த சிறிய தெருவில் நடந்து கோவிலை நெருங்கி. கம்பி கதவு திறந்திருந்ததால் உள்ளே சென்றபோது . மாட்டு மேய்ப்பவர்கள் சிலர், அங்கும் இன்றும் சுற்றிக்கொண்டிருந்தார்கள். எதிரே ஒரு செங்கல் கட்டிட ஆலயம். நிச்சயம் நான் ஆயிரம் வருஷம் என பழைய செங்கல் சத்தியம் செய்தது.
என் எதிரே கேட்பாரற்று ஒரு பெரிய ஆவுடையார், லிங்கம் இல்லாமல்... வெளியே தரையில் கிடந்தது. சிலர் அதன் மேல் ஏறி நடந்து கொண்டிருந்தார்கள். கோவில் எந்தக்கணமும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. கோவிலின் வாசலில் அருள்மிகு அமராதீஸ்வரர் ஆலயம் என்று யாரோ வெள்ளை வர்ணத்தில் எழுதி இருக்கிறார்கள். அருமையான ஒரு நந்தி ஒரு மண்டபத்தில். கோவில் உள்ளே பெரிய சிவலிங்கம். சேக்கிழார் வாழ்ந்த பூமி சிறுகளத்தூர் எனும் அந்த கிராமம். மூன்று கி.மீ. தூரத்தில் குன்றத்தூர் செழிப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.
அம்பாள் , பர்வத வரத்தினி ,அழகாக நின்று கொண்டிருந்தாள். சரியான வஸ்திரம் இல்லை அவளுக்கு. விளக்கோ, பூஜையோ, பகவானுக்கும் அவளுக்கும் சரிவர நடக்க வில்லை என்று புரிந்தது. விசாரித்ததில் 13ம் நூற்றாண்டு சோழர்கள் கால கோவில் என்று அறிந்தேன். கோவிலை சுற்றி பிரகாரத்தில் நடந்தபோது காலை நெருஞ்சி முள் பதம் பார்த்தது.
கோவில் பிரகாரத்தில் வரசித்தி விநாயகர், ஆறுமுக பெருமான் சுக்ரவார அம்மன்,தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை, கால பைரவர் ப்ரம்மா, விஷ்ணு, சூர்யன். கோவில் உள்ளே சேக்கிழார் நிற்கிறார். பிள்ளையார் சிலை திருடு போய்விட்டது என்றார்கள் . உத்சவ விகிரஹங்களை கோவூர் சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் 15 வருஷங்களாக ஜாக்கிரதையாக வைத்திருப்பதாக தகவல் அறிந்தேன். அழகான நந்தி தேவர் கண்ணை விட்டு அகலவில்லை.
ஒருகாலத்தில் இந்த ஆலயத்துக்கு 55 ஏக்கர் நிலம் இருந்ததாம். கோபுரமோ, ஸ்தூபமோ காணோம்.வெளியே கிடக்கும் ஆவுடையாருக்கான பெரிய லிங்கம் கோவில் உள்ளே சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. சண்டிகேஸ்வரர் இடிந்து விழும் நிலையில். சுமார் 25 பேர் ஏழை உள்ளூர் ஜனங்கள் இந்த ஆலயத்தை ஒருவாறு பாதுகாத்து வருகிறார்கள். மாரி எனும் ஒரு நபர் தினமும் சிவனுக்கு குடம் ஜலம் கொட்டி அபிஷேகம் செய்கிறார். வீட்டில் சாதம் சமைத்து கோவிலுக்கு கொண்டு வந்து தனக்கு தெரிந்தவரை நைவேத்யம் செயது காக்கைக்கு போடுகிறார். பிரதோஷம், சஷ்டி, பௌர்ணமி களங்களில் அண்டை ஊரிலிருந்து ஒரு அர்ச்சகரை வரவழைத்து ஒரு வேளை பூஜை நடக்கிறது.
பாலசேகரன் எனும் ஒரு பள்ளி ஆசிரியர், குணசேகரன் எனும் ஒரு துணி தைப்பவர் ஆகியோர் முழு முயற்சி எடுத்து இந்த ஆலயத்தை புனருத்தாரணம் பண்ண முனைகிறார்கள். நானும் பலரை தொடர்பு கொண்டு நிதி உதவி சேர்ந்து கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் புனருத்தாரணம் பெற்றது. கும்பாபிஷேகம் அன்று தரிசித்தபின் முடிந்த போது கோவிலுக்கு சென்று வணங்குவேன்.
31.5.26 அன்று நண்பர்களோடு அங்கே இரவு 7.30மணிக்கு சென்றோம். அமராபதீஸ்வரருக்கு ஒரு வேஷ்டி, அம்பாளுக்கு புடவை சாத்தினோம், இவற்றை அளித்த பானுமதி அம்மையாரால் இந்த யாத்திரையில் கலந்து கொள்ள முடியவில்லை. என்னை, திரி, கல்கண்டு, வஸ்திரங்கள் புத்தகங்கள் எல்லாம் அளித்தோம்.
அர்ச்சகர் என்னையே பூஜை பண்ண சொன்னார்...ருத்ரம் சமகம் த்ரிசதி மந்திரங்கள் உச்சரித்து அர்ச்சனை செய்தேன் . குணசேகரன் ரவா கேசரி நைவேத்தியம் கொண்டுவந்தார். பிரசாதம் அனைவருக்கும் வழங்கி, எங்கள் இரவு உணவுக்காக பூரி சட்னி, கிழங்கு தயார் செய்திருந்தார்கள். எட்டு மணிக்கு அங்கிருந்து கிளம்பி நங்கநல்லூர் இரவு 9மணிக்கு நங்கநல்லூர் திரும்பி வந்து 15 கோவில்களில் தரிசனம் செய்தபின் இந்த ஒருநாள் யாத்திரை நிறைவு பெற்றது.
2009ல் நான் சிதிலமான நிலையில் இந்த ஆலயத்தை பார்த்தபோது எடுத்த சில படங்கள் கிடைத்தது. அதையும் ஞாபகத்துக்காக இணைக்கிறேன்.
--
பஞ்ச தந்திர கதைகள். - நங்கநல்லூர் J K SIVAN
என் சின்ன வயதில் நான் மூன்றாவது படிக்கும்போது சரோஜினி டீச்சர் பஞ்ச தந்திர கதைகள் சொன்னது ஞாபகம் இருக்கிறது. ரொம்ப அழகாக விறுவிறுப்பாக சரோஜினி டீச்சர் சொல்வா. ஆக் ஷனோடு அவள் சொல்வது நேரே பார்ப்பது போல் இருக்கும். சில பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் கூட சிலர் வீட்டில் குழந்தைகளுக்கு இவற்றை கதைகளாக சொல்வதை அறிவேன். .
இப்போது ஆங்கிலத்த்தில் சில பெற்றோர்கள் இந்த மாதிரி கதைப் புத்தகங்கள் வாங்கி சில சிறுவர்கள் சிறுமிகள் இவற்றை அறிந்து குழந்தைகளுக்கு பரிசளிக்கிறார்கள். ;என் வீட்டில் என் பேத்திக்கு இந்த புத்தகம் படத்தோடு இருக்கிறது.
அநேகருக்கு இவை யூட்யூபில் சித்திரமாக வீடியோ காட்சியாக வந்து மகிழ்விக்கிறது எனலாம்.
ரெண்டாயிரம் வருஷத்துக்கு முந்தியவை பஞ்ச தந்திர கதைகள் எனலாம். நான் சமீபத்தில் வாட்ஸாப்ப் புத்தகமாக ஒரு புத்தகம் படித்தேன். ஸ்ரீ G. L. Chandiramani Copyright © Sheila
G. Chandiramani அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருந்ததை ஆர்வமாக படித்து ஒரு சில கதைகளை குழந்தைகளுக்கு உங்கள் மூலம் தமிழில் சொல்ல ஆர்வம். மேற்படி மொழி பெயர்ப்பாளர்கள், பதிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றியோடு இதை அவர்கள் அனுமதி
யாக கருதி எழுதுகிறேன்.
வேதகாலத்தில் இருந்து இந்த பஞ்ச தந்திர கதைகள் இருந்தாலும் பண்டிட் விஷ்ணு ஷர்மா என்பவர் இதை முதலில் சமஸ்க்ரிதத்தில் ஸ்லோகங்களாக எழுதி இருக்கிறார். யார் யார் மூலமோ இந்த கதைகள் மேலைநாடுகளுக்கு சென்று அங்குள்ள குழந்தைகளை மகிழ்வித் திருக்கிறது. எல்லாமே நீதி கதைகள்.பஞ்ச தந்திரங்கள் என்பவை மனிதனுக்கு வாழ்வில் உதவும் சக்திகள்; தத்துவம், உளவியல், அறிவியல், இசை, வானசாஸ்திரம் ராஜ தந்திரம் சகலமும் சேர்ந்த கலவை. இதில் பறவைகள், மிருகங்கள் சகலமும் மனிதனோடு சரிசமமாக பேசும். அறிவுரை கூட வழங்கும். நேராக முதல் கதைக்குள் செல்கிறேன்.
ஒருகாலத்தில் தெற்கே மஹிளாரோப்யம் என்று ஒரு ஊருக்கு அமர சக்தி என்கிற ராஜா. சிறப்பாக அதை ஆண்டுவந்தான். ராஜா ரொம்ப கெட்டிக்காரன். அவனுக்கு மூன்று பிள்ளைகள், பஹுசக்தி, உக்ர சக்தி, ஆனந்த சக்தி என்ற பேர்கொண்ட முட்டாள்கள். ராஜாவுக்கு ரொம்ப ஏமாற்றம், வருத்தம், ஒருநாள் மந்திரிகளை கூப்பிட்டு மனம் திறந்தான்
'' மந்திரிகளே, பிறக்காத, செத்துப்போன பிள்ளைகள் ஒரு முறை தான் துக்கம் தருவார்கள். உயிருள்ள முட்டாள் பிள்ளைகள் ஒவ்வொரு வினாடியும் துன்பம் தருபவர்கள். எனக்கு கடைசி வரை இந்த நிலை தான். என் பிள்ளைகளை எப்படி அறிவுள்ளவர்களாக ஆக்குவது என்று ஏதாவது வழி கூறுகிறீர்களா?. பல வருஷங்கள் குருவிடம் கல்வி கற்று தான் ஒருவன் ஞானம் பெற முடியும். இவர்களுக்கு படிப்பில் புத்தி போகவில்லை,. ஏதாவது குறுக்கு வழி உண்டா?
''அரசே, விஷ்ணு ஷர்மா என்கிற கெட்டிக்கார பிராமணர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் இவர்களை ஒப்புவித்தால். அவர் இவர்களை மாற்றுவார் '' என்றான் ஒரு மந்திரி.
ராஜா விஷ்ணுசர்மாவை அழைத்தான்.
‘’குருநாதா, என் பிள்ளைகளை புத்திசாலிகள் ஆக்குங்கள். ஞானம் பெற செய்யுங்கள், நூறு கிராமங்களை உங்களுக்கு தானமாக அளிக்கிறேன்’’ என்றான் ராஜா.
‘’மஹாராஜா, எனக்கு எண்பது வயதாகிவிட்டது. நான் சிஷ்யர்களுக்கு வித்யை கற்று தருவதற்கு காசு வாங்குபவன் இல்லை. ஆறே மாதத்தில் இவர்களுக்கு நீதி சாஸ்திரம் புகட்டி மாற்றி காட்டுகிறேன். எல்லாம் பகவான் அனுக்ரஹம் ’
மூன்று பிள்ளைகளும் விஷ்ணு சர்மாவோடு, காட்டுக்கு சென்று, ஆஸ்ரமத்தில் அவரிடம் ஐந்து தந்திரங்கள் கற்றார்கள்.
மித்ரன் பேதம் எனப்படும் நண்பர்களிடையே துரோகம்.
. நண்பர்களுக்கு இடையே விரிசல், நண்பர்களை வெல்வது.
காக்கைகளும் ஆந்தைகளும்.
லாபத்தை இழப்பது.
பலனெதிர் பார்க்காமல் காரியம்.
விஷ்ணு சர்மா ராஜாவின் பிள்ளைகளுக்கு சொன்ன நீதி கதைகளை நாமும் கேட்போம்.
மித்ரபேதம் எனப்படும் நண்பர்களிடையே வேறுபாடு.காட்டில் ஒரு சிங்கமும் காளை மாடும் நண்பர்கள். அதை ஒரு குள்ளநரி கெடுத்த கதை இது.
மேலே சொன்ன மஹிளாரோப்யம் ஊரில் வர்த்தமானகன் என்ற ஒரு பணக்கார வியாபாரி ஒருநாள் பாதி ராத்திரி தூக்கத்தில் இருந்து எழுந்து உட்கார்ந்தான். ஏதோ ஒரு எண்ணம் அவன் மனதை குடைந்தது. ‘’எவ்வளவு தான் பணம் இருந்தாலும் இன்னும் சேர்க்கணும். அப்போது தான் அவனுக்கு நண்பர்கள் கூடுவார்கள். உறவினர்கள் அண்டுவார்கள் , முன் பின் தெரியாதவர்களும் நெருங்குவார்கள். பணமில்லையானால் மனைவியும் மதிக்க மாட்டாள். படிப்பில்லை என்றாலும் பணம் இருந்தால், மற்றவர்கள் அவனை ஞானி பண்டிதன் என்பார்கள, ஆகவே வெளியூர் சென்று பணம் திரட்ட பொருள்களை எடுத்துக்கொண்டு விற்பதற்கு அந்த வியாபாரி மதுரா போனான்.
அவனிடம் ரெண்டு காளை மாடுகள். சஞ்சீவகன், நந்தகன் என்று பேர் கொண்டவை. அவன் வீட்டிலேயே பிறந்து வளர்ந்த வண்டி மாடுகள். உதவியாளர்களோடு, நிறைய விற்பதற்கு சாமான்கள் ஏற்றிக்கொண்டு வண்டி புறப்பட்டது. யமுனா நதிக்கரை செல்லும்போது சஞ்சீவகன் கால் உடைந்து விட்டது. காட்டு வழி, மேலே போகமுடியாமல் மூன்று நாள் தங்கினான்.வழிப்போக்கர்கள் வர்த்தமானகன் நிலைமையைப் பார்த்து விட்டு
' ஐயா,இது காட்டு பாதை, சிங்கங்கள் கொடிய மிருகங்கள் இருக்கிறது. ஒரு மாட்டுக்காக உங்கள் உயிரைப் பயணம் வைக்காதீர்கள் . புத்திசாலியாக இங்கிருந்து தப்பித்து செல்லுங்கள்’’ என்றார்கள். ரெண்டு மூன்று ஆட்களை சஞ்சீவகனோடு இருக்கவைத்து விட்டு வர்த்தமானகன் மீதி பேரோடு வண்டியை ஒரு மாட்டாது சேர்த்து இழுத்துக்கொண்டு புறப்பட்டு விட்டான். அந்த ரெண்டு மூன்று ஆட்கள் மூன்று நாட்கள் கழித்து வர்த்தமானகனிடம் வந்து சேர்ந்து கொண்டார்கள்.
‘’என்னாச்சு சஞ்சீவகனுக்கு?.ஏன் அதை விட்டு விட்டு வந்தீர்கள்? .
‘’எஜமான், அதை ஏன் கேக்கறீங்க, மாடு செத்து போச்சு. அதை எரிச்சுட்டு வரோம்.’’ என்று அழுதார்கள். ஆனால் அது பொய் . வர்த்தமானகன் அவர்களை நம்பினான். இத்தனை வருஷம் தனக்கு உழைத்த சஞ்சீவகனுக்கு அந்திம யாத்திரை மந்திரங்கள் சொல்லி வணங்கிவிட்டு வர்த்தமானகன் அவர்களை வாழ்த்தினான்.
உண்மையில் நடந்த விஷயம் வேறே. சஞ்சீவகன் கொஞ்சம் ஒய்வு பெற்று, நல்ல புஷ்டியான ஆகாரங்களை காட்டில் சாப்பிட்டு உடல் தேறியது . யமுனா நதிக் கரையில் செழிப்பான தாவரங்கள் உண்டு உடல் பலம் பெற்றது.
அந்த காட்டுப்பகுதியில் பிங்கலகன் என்ற சிங்கம் ராஜா. ஒரு நாள் தாகம் தீர நீர் பருக யமுனைக் கரை பகுதியில் சஞ்சீவகன் இருந்த இடம் வந்தது.
‘’அம்மா என்று சஞ்சீவகனின் உரத்த குரல் கட்டான தேகம், கூரான கொம்புகள், பார்த்து பயந்து தண்ணீர் குடிக்காமல் ஒரு ஆல மரத்தடியில் அமர்ந்தது. கூடவே அதன் நண்பர்கள்.
சற்று தூரத்தில் கரடகன் தமனகன் என்ற ரெண்டு குள்ளநரிகள். இதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன . இதற்கு முன் இருந்த சிங்கத்தின் மந்திரியின் பிள்ளைகள். ரெண்டும் பேசின;
‘’டேய் , கரடகா, பார்த்தாயா நமது ராஜா தண்ணீர் குடிக்காமல் தாகத்தோடு ஆலமரத்த டியில் நண்பர்களோடு உட்கார்ந்திருப்பதை?’’
‘’அதை எதுக்கு சொல்றே? அதனால் நமக்கென்ன? அவனவன் தனது ஜோலியை பார்த்துக்கொண்டு போவது தான் நல்லது. தேவையில்லாத விஷயத்தில் தலை இட்டால் ஆப்பசைத்த குரங்கு கதையாகி விடும்.’’ என்றது தமனகன்’’
‘’ஏய் தமனகா, என்ன சொல்கிறாய் புரியும்படியாக சொல்லேன்”” என்று கேட்டது கரடகன்.அடுத்த பதிவில் தமனகன் சொல்லும் குரங்கு கதை நாமும் கேட்போம்.
யார் முக்கியம்?-- நங்கநல்லூர் J K SIVAN
ரொம்ப வேடிக்கையான விஷயம் இது. ஒரு சமயம் குப்புஸ்வாமி நன்றாக சாப்பிட்டு விட்டு ஆற்றங்கரை அரசமரத்தடி பிள்ளை யார் திண்ணையில் ஓரமாக மேல் துண்டை விரித்து படுத்தான். அவன் கண்ணை மூடிக்கொண்டிருந்தாலும் அவனுக்குள்ளே ஒரு போராட்டம். பஞ்ச பூதங்களும் மனித
னுக்குள்ளே இருக்கிறதல்லவா? அவை தான் இந்த போராட்டத்தை நடத்தியது. ஆகாயம், அக்னி, ஜலம் , காற்று, மண், அதோடு கூட மனம் வாக்கும் வேறு சேர்ந்து கொண்டது.. என்ன போராட்டம்? இந்த குப்புசாமியை யார் இயக்குவது? நான் தான் முக்கியம், நான் தான் எல்லோரிலும் பெரியவன் என்று அக்னி, வாயு, ஆகாசம், நிலம் நீர் எல்லாமே கூச்சல். இந்த சத்தம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆகவே ப்ராணன் மெதுவாக குரல் கொடுத்தது. எல்லோரும் கொஞ்சம் அமைதியாக இருக்கிறீர்களா? நான் தான் உங்கள் எல்லோரையும் இயக்குபவன், நீங்கள் எல்லோரும் என்னால் தான் இயங்குபவர்கள் என்று புரிந்து கொண்டு பேசாமல் இருங்கள், அவரவர் வேலையை பாருங்கள்’’ என்றது.
மேலே சொன்ன எல்லாமும் இதை ஒப்புக்கொள்ளவில்லை. அதெப்படி எங்கள் சக்தி
அறியாமல் பேசுகிறாய் நீ’’ என்றன. சரி இபோபோது பாருங்கள் நான் இந்த குப்புசாமியை விட்டு போகிறேன் என்று ப்ராணன் அவன் உடலை விட்டு போய்விட்டது. அடுத்த கணமே அவனுள் இருந்த ஐம்பூதங்களும் செயல் இழந்தன. காணாமல் போயின. அப்புறம் மீண்டும் ப்ராணன் அவன் உடலுக்குள் புகுந்தது. மீண்டும் அனைத்தும் பழையபடி இடம் பெற்றன. உண்மையைப் புரிந்து கொண்டு பழையபடி தத்தம் வேலையைத் புரிய ஆரம்பித்தன.
குப்புஸ்வாமி திடீரென்று ஏன் மாரடைத்தது?. மூச்சுநிற்பது போல் ஆகிவிட்டதே. தடுமா
றினேனே, ஏன்? எப்படியோ இந்த பிள்ளையார் அருளால் மீண்டும் சரியாகி விட்டது. இனிமேல் இலவசமாக கிடைக்கிறதே என்று அதிகம் சாப்பிடக்கூடாது என்று தற்காலிக வைராக்யம் பூண்டு, எழுந்து கீழே கிடந்த துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டு எதிரே கல்யாண மண்டபத்துக்குள் நுழைந்தான். சாயந்திரம் ஆகிவிட்டதே. போண்டா காபி கிடைக்குமே….. சே. இந்த மனிதனுக்கு நாக்கு எவ்வளவு நீளம். பேசுவதிலோ, சாப்பிடுவ திலோ, எல்லையே இல்லாமல் போகிறதே…
பிராணன் தான் முக்ய சக்தி. தேகத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு என்னத்துக்கு செயலுக்கும் அதன் சேவை அளவற்றது. சமஸ்க்ரிதத்தில் பிராணன் ரெண்டு எழுத்து கொண்டது. ‘’ப்ரா’’ ‘’ணா’’. நிலையானது. சகல ஜீவராசிகளையும் இயக்குவது.