periyava

4 views
Skip to first unread message

Sivan Krishnan

unread,
Apr 10, 2026, 12:25:35 AMApr 10
to amrith...@googlegroups.com

பேசும் தெய்வம் -   நங்கநல்லூர்  J K  SIVAN

என்  ஒரே ஆசை  

வெள்ளைக்காரன் நம்மை  ஆண்ட காலம் கிட்டத்தட்ட நானூறு  ஆண்டுகாலம். நாலு யுகங்களுக்கான  சேதங்களை செய்து விட்டு தான்  பிசாசு புளியமரத்தை  மூன்று துண்டாக வெட்டி விட்டு சென்றது. ரெண்டு தூண்டும் கிழக்கேயும் மேற்கேயும்  பாகிஸ்தான். நடுவில் நாம்.  அதன் பாதிப்பு இன்று இதை எழுதும் வரை நம்மைவிட்டு அகலவில்லையே... மஹா பாவிகள்.  செல்வங்கள், கலாச்சாரம், பண்பு,பக்தி, படிப்பு, சகலத்தையும் சுரண்டியும், உண்ட வீட்டுக்கே  ரெண்டகம்  செய்ததன் பலன் இன்றும் அனுபவிக்கிறோம்.

நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்பு ஒரு எளிய, ஆசாரமான,வைதிக குடும்பம் காவேரி வடகரையில் திருவையாறிலிருந்து  கிழக்கே   4  மைல்   தூரத்தில் உள்ள  ஈச்சங்குடி  எனும் ஒரு கிராமத்தில் அக்ரஹாரத் தில் வாழ்ந்து வந்தது.

ஒரு பழங்கால  9ம் நூற்றாண்டு சோழன் கால சிவன் கோயில்  இன்றும் இருக்கிறது. மூலவர்  கச்சபேஸ்வரர்.அம்பாள் மங்களாம்பிகை.  அக்ராஹார மக்கள் தினமும் சென்று வழிபடும் தெய்வங்கள்.
அநேகரின்  குலதெய்வங்கள்.  

அக்ரஹாரம் என்றாலே  கோவிலை சூழ்ந்த, சார்ந்த மக்கள் வசிக்கும் இடம் என்று புரியும். வேதம்,  பாராயணம், யாகம், ஹோமம், மந்திர உச்சாடனம் கேட்டுக்கொண்டே இருக்கும்.  பூஜை, ஆலயம் சம்மந்தப்பட்ட சாஸ்திரீகமான கைங்கர்யங்களில் ஈடுபடும்  குடும்பங்கள் பாரம்பரியமாக  வாழும்  இடம். அதில்  நாகேஸ்வர சாஸ்திரி குடும்பம் ஒன்று.

 உபமன்யு கோத்ரத்தை சேர்ந்த   ராஜா  கோவிந்த தீக்ஷிதர்  வம்சம்.   நாயக்க  பரம்பரையில் முதலாவதாக தஞ்சையை ஆண்ட  சேவப்ப நாயக்க ராஜாவின் மந்திரி இந்த  தீக்ஷிதர். நன்றாக  சாஸ்திரங்கள் அறிந்தவர்.  ஐயன்  என்று எல்லோராலும்  அழைக்கப்பட்டவர்.    சோழ நாட்டில் அய்யங்குளம்,அய்யன் வாய்க்கால், அய்யன் தெரு, ஐயன்கடை , எல்லாம்  அவர் பெயரால் உண்டானவை.   காவேரி  படித்துறைகள், மண்டபங்கள் எல்லாம் முக்கால்வாசி அவர் கட்டியவை.   அருணாசலேஸ்வரர் கோவில், மற்ற பல கோவில்கள் புனருத் தாரணம்   அவரால்   நடத்தப்பட்டவை.  நிறைய  கால்வாய்கள்,  குளங்கள் கட்டியவர்.    பட்டீஸ்வரத்தில்  குடியேறினார்.  அங்கே சிவன் கோவிலில் இன்றும் அவர் தம்பதியாக சிலை வடிவில் அங்கே காணப்படு கிறார்.  
                                         
இந்த  தீக்ஷிதர் வம்சத்தில் ஈச்சங்குடியில்  வசித்த  மேலே சொன்ன   நாகேஸ்வர  சாஸ்திரி களுக்கும்  மீனாக்ஷிக்கும்  பிறந்தவர்   காஞ்சி மஹா பெரியவாவின் தாய்  மஹாலக்ஷ்மி.

 நாகேஸ்வர சாஸ்திரி  வேதாந்த உபநிஷத், கற்றவர்  கும்பகோணத்தில்   குடும்பங்களில்  ஆசார்யன்  என்று மதிக்கப்பட்டவர். அந்த குடும்பங்களில் ஒன்று  கணபதி சாஸ்திரி குடும்பம்.

ஒரு குடும்ப  நிகழ்வுக்கு   நாகேஸ்வர சாஸ்திரி  கணபதி சாஸ்திரி  வீட்டுக்கு சென்றபோது தனது பெண் மஹாலக்ஷ்மியை  கணபதி சாஸ்திரி மகன் சுப்ரமணிய சாஸ்திரிக்கு  விவாகம் செயது  கொள்ள விருப்பமா என்று கேட்டார். இப்படிப்பட்ட  ஒரு திவ்ய சம்பந்தத்தை, வீடு  தேடி வரும்  மஹாலக்ஷ்மியை   வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா?   அதுவும்  ஆசார்யன்  தனது பெண்ணைத் தருகிறேன் எனும்போது மறுக்க முடியுமா?

17வயசு  சுப்பிரமணியனுக்கு  7 வயது மஹாலக்ஷ்மி  ஈச்சங்குடியில் மனைவியானாள்.   ஸ்தோத்திரங்கள், தமிழ் தெலுங்கு,  சமஸ்க்ருத 5  பிரார்த்தனை  பாடல்கள்   நன்றாக  மகாலக்ஷ்மிக்கு தெரியும்.  பூஜைகள் விரதங்கள் எல்லாம்  அத்துபடி .  ஐந்து குழந்தைகளுக்கு தாயானாள்.   நான்கு பிள்ளைகள். ஒரு பெண்.  
பிள்ளைகலின் பெயர்கள்,   கணபதி, ஸ்வாமிநாதன்,  சாம்பமூர்த்தி, சதாசிவன். கிருஷ்ணமுர்த்தி.   பெண் லலிதாம்பாள்.

மஹாலக்ஷ்மியின்  இளைய சகோதரர்   சுப்ரமணிய  சாஸ்திரிகள்  ரிக்வேதம், சாஸ்திரங்கள், தென்னிந்திய மொழிகளில் வல்லுநர்.   60 வருஷங்களுக்கு மேலாக   காமகோடி மடத்தில்   பணியாற்றியவர்.

சாலிவாஹன  சகாப்தம் 1817,  ஜய  வருஷம்  வைகாசி மாதம், அஷ்டமி,   20.5.1894ல்   ரெண்டாவது மகனாக சுப்ரமணிய சாஸ்திரி  மஹாலக்ஷ்மி தம்பதிக்கு  மஹா பெரியவா பிறந்தார்.   குல  தெய்வம்    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி,  அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா.   ஆகவே   மஹா பெரியவாளுக்கு பிறந்த  போது இட்ட பெயர்  ஸ்வாமிநாதன்.    அப்போது சுப்ரமணிய சாஸ்திரிகள் விழுப்புரத்தில்  அரசாங்க பள்ளிகளில் மேற்பார்வையாளர்.

சுப்ரமணிய  சாஸ்திரி  காஞ்சி காம கோடி மடம் ஜகத் குரு   66வது  பீடாதிபதி  ஸ்ரீ  சந்திரசேகரேந்த்ர  சரஸ்வதிகளை அடிக்கடி குடும்பத்தோடு  தரிசிப்பவர் . திண்டிவனம் அருகே  பெருமுக்கல்   கிராமத்தில் பெரியவாளை தரிசிக்க  சென்ற  போது  மகன்  ஸ்வாமிநாதனும் கூட இருந்தான்.   பெரியவா  நித்ய பூஜை  பண்ணும்போது  அவரது அருள் கடாக்ஷம் சிறுவன் ஸ்வாமிநாதன் மேல் விழுந்தது.  பூஜை எல்லாம் முடிந்து  சாஸ்திரிகளிடம் பெரியவா குடும்பத்தை பற்றி  விசாரித்தார்.    பெரியவா மனதில் அவருக்கு அடுத்த  படியாக  பீடாதிபதியாக இந்த சிறுவன் ஸ்வாமிநாதன்   வருவான் என்று தோன்றி இருக்குமோ?   ஞானிகளுக்கு தீர்க்க தரிசனம் உண்டே.   பெருமுக்கல் கிராமத்தில் மடத்தில்  சாஸ்திரிகள் குடும்பம் ரெண்டு நாள் தங்கி யபோது  ஸ்வாமிநாதனை பிரத்யேகமாக அழைத்து அவனிடம் நிறைய  கேள்விகளை  பெரியவா கேட்டார்.   அவனுடைய சாதுரியமான பதில், அவனது  தோற்றம், காந்தம் போல் கவரும் தேஜஸ்  பெரியவாளை மகிழ வைத்துவிட்டது.

''இவன் ஒரு மஹா புருஷன்.'' என்று ஸ்வாமிநாதனைக் காட்டி பெரியவா சொன்னபோது   சாஸ்திரி தம்பதிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.  ஆச்சார்யரை வணங்கி உத்தரவு பெற்று சாஸ்திரிகள் குடும்பம் திண்டிவனம் திரும்பும்போது

'' சாஸ்திரிகளே , ஸ்வாமி நாதனை  அடிக்கடி  மடத்துக்கு அழைச்சுண்டு வாங்கோ'' என்று சொன்னார் பெரியவா.
சாதூர் மாஸ்யம்  முடிந்து ஆச்சார்யர் பெரு முக்கலை  விட்டு செல்லும் வரை அடிக்கடி  சாஸ்திரிகள்  சுவாமிநாதனை அவரிடம் அழைத்துச் சென்றார். பல  முறை சந்திப்பு நிகழ்ந்தது. ஆச்சார்யாளின்  கருணை,  ஆசி,  சிறுவன் சுவாமிநாதனை ஒளி பெறச் செய்துகொண்டே வந்தது.

ஒருநாள்  திண்டிவனம்  வீட்டில்  ஸ்வாமிநாதனைக் காணோம்.  எங்கே போனான்  சொல்லாமல் கொள்ளா மல்?  குளம் குட்டை, கிணறு என்று எங்கெல்லாமோ அவனைத் தேடினார்கள்.  எங்கும் கிடைக்கவில்லை.  பெற்றோருக்கு  அன்ன  ஆகாரம் செல்லவில்லை.  
ரெண்டு நாள் ஆகியது.  அன்று மாலை  பெரு முக்கல்  கிராமத்திலிருந்து பெரியவா மடத்து ஆள் ஒருவன்  வந்தான்.   ஐந்து மைல்  தள்ளி இருக்கும்  ஊர்.  

''சாஸ்திரிகளே,   உங்கள் பையன் ஸ்வாமிநாதன்,    தானாகவே பெரியவாளை பார்க்க 5  மைல்  தனியா   நடந்து வந்துருக் கான்.  பெரியவா  உங்களுக்கு  அவன் அங்கே  வந்தது  தெரியுமா தெரியாதான்னு கேட்டுட்டு அவன் ஜாக்கிரதையா அங்கே இருக்கான்னு சொல்ல சொல்லி என்னை அனுப்பினார்'' என்கிறார் மடத்து சிப்பந்தி.
பெற்றோர்கள் வயிற்றில் பாலை வார்த்தது இந்த செய்தி.  ரெண்டு நாள் கழிந்தது.  ஒரு ஆள் துணையோடு ஸ்வாமிநாதனை  திண்டி வனத்துக்கு   திருப்பி அனுப்பினார்  பெரியவா.

1907ம் வருஷம்  பெப்ருவரி மாதம் .  முதல் வாரம்.  காஞ்சி  மடத்திலிருந்து  ஒரு தந்தி சுப்பிரமணிய சாஸ்திரிகளுக்கு வந்தது.
 ''உடனே  ஸ்வாமி நாதனோடு வரவும்''
 66வது  பீடாதிபதிக்கு  ஸ்வாமிநாதனை தனக்கு அடுத்த  பீடாதிபதியாக்க  விருப்பம்.  காத்திருந்தார்.  அதற்குள்  அவருக்கு  வைசூரி  என்னும்  கொடிய   பெரியம்மை  நோய் தொற்று ஏற்பட்டு  உடல் நிலை க்ஷீணமாகிக் கொண்டு வந்தது. தக்க மருந்தில்லை அப்போது.

ஸ்வாமி நாதன்  அடுத்த பீடாதிபதியாக காலம் கடந்து கொண்டு வந்தது. அதற்குள் தனது முடிவு நெருங்கிவிடும் என்று உணர்ந்த   66வது   பீடாதிபதி  தனக்கு  உதவியாளனாக  சிஷ்யனாக இருந்த   ஸ்வாமிநாதனின்  ஒன்றுவிட்ட சகோதரன்  (அம்மாவின் சகோதரி மகன் ) லட்சுமிநாதனை உடனே   அடுத்த 67வது   பீடாதிபதியாக  உபதேசித்து  அவர்  ஜகதகுரு  ஆனார்.   66வது பீடாதிபதியும்  சமாதி அடைந்தார்.   அடுத்த  பீடாதிபதி யாகிய  லட்சுமிநாதன்  குருவை நெருங்கி அவருக்கு சிச்ருஷை செய்யும் காலத்தில் அவருக்கும் அம்மை தொற்று உண்டாகி கவலைக்கிடமாக படுக்கையில் இருந்த சமயம் தான் தந்தி வந்தது.

 சுப்ரமணியசாஸ்திரி  கலவைக்கு  செல்ல முடியாதபடி   உத்யோக  விஷயமாக கட்டாயமாக  திருச்சி செல்ல வேண்டியதாயிற்று. ஆகவே  மஹாலக்ஷ்மி அம்மா குழந்தைகளோடு  கலவைக்கு  புறப்பட்டார்.  

தனது  சகோதரி கணவனை இழந்தவளுக்கு இருந்த ஒரே ஆதரவான  மகன்  லட்சுமிநாதனும்  சந்யாசியாகி விட்டதற்கு ஆறுதல் சொல்ல  மஹாலக்ஷ்மி அம்மாள் ரயிலில்  சென்றாள் . காஞ்சிபுரம்  வரை ரயில் பிரயாணம் செய்து அன்றிரவு  காஞ்சி  மடத்தில்  தங்கினார்கள்.

துரதிர்ஷ்டவசமாக  அடுத்த ஜகத் குருவாக நியமிக்கப்பட்ட  லட்சுமிநாதனும் நோய்வாய்ப்  பட்டான். இந்த  செய்தி லட்சுமிநாதன் தாய்க்கும்  மகாலட்சுமிக்கும்  பேரிடி  தலையில் விழுந்தது போல்  வாட்டியது.  
 கலவை காஞ்சிபுரத்திலிருந்து  30  மைல்  தூரத்தில் உள்ளது.  கலவையில்  67வது காமகோடி பீடாதிபதி ஜகதகுரு  ஆரோஹண வைபவம்  எப்படி நடத்துவது என்று  அதிர்ச்சி.

மஹா பெரியவா பிற்காலத்தில் இது பற்றி சொன்னது;

''இது நடந்தது குமர கோஷ்ட தீர்த்தத்தில்,.நான்  நித்யகர்மானுஷ்டானங்களில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.  அப்போது   கலவையிலிருந்து  மடத்தைச் சேர்ந்த  ஒரு குதிரை வண்டி  காஞ்சிபுரத்துக்கு வந்தது.  அந்த வண்டியில்   66வது பீடாதிபதி  சமாதி அடைந்த  10வது நாள்  காரியங்கள் மற்றும் மேற்கொண்டு நடக்க வேண்டிய  மஹா பூஜைக்கு  தேவையான சாமான்  துணிமணி  எல்லாம்  வாங்க  மட நிர்வாகிகள் சிலர்  வந்திருந்தார்கள்.  அவர்களில் ஒருவர்  மடத்தில் வம்சாவழியாக  மேஸ்திரியாக இருப்பவர்.  எனக்கு அவரை நன்றாக தெரியும்.   பார்த்திருக்கிறேன்.

''என்னோட வரியா  கலவைக்கு? ''  என்று  மேஸ்திரி   கேட்டதும்  நான் சரி என்று ஒப்புக் கொண்டு அவரோடு வண்டியில் புறப்பட்டேன்.  இன்னொரு வண்டியில்  என் தாயும்  மற்றவர் களும்  பின்னால்   வந்தார்கள்.  

''தம்பி,  இப்போ நீ என்னோட வரியே.  அப்புறம் கலவையிலிருந்து நீ   திரும்பி வரமுடியாதபடி  போயி  மடத்திலேயே  தங்கிடும்படி  ஆயிடி ச்சின்னா   என்ன செய்வே? பரவாயில்லையா?''   என்று மேஸ்திரி வழியில்   கேட்டார்.

''எனக்கு என்  ஒன்றுவிட்ட அண்ணா  தான் அங்கே  மடாதிபதியாச்சே.   அவன்   நான்  அங்கேயே இருக்கணும் னு ஆசைப்பட்டா  நாம  இருந்திடு வோம். படிக்க இங்கேயே  மடத்தில் வசதி  பண்ணி கொடுப்பான்னு தோணித்து.
அதனாலே ஒரு விதத்தில் சந்தோஷமாத்தான்  இருந்தது. ''

குதிரை வண்டி  ஓடியது.  மேஸ்திரி கெட்டிக்காரர்.  குதிரை  வண்டி தான் வேகமாக ஓடியதே தவிர அவர் மெதுவாக விஷயத்தை அவிழ்த்து விட்டார்.  

''நம்ம  பெரிய  சாமிக்கு  (67வது பீடாதிபதி)  அம்மை வாத்திருந்து  ஜுரம் அதிகமாகி  ஜன்னி (DELIRIUM ) கண்டுடுச்சி. அவர்  போயிடுவார் போலிருக்கு.  அதனாலே தான் தம்பி உன்னை அழைச்சுக்கிட்டு கலவைக்கு  போறேன்'' .

''எனக்கு தூக்கி வாரி போட்டது.   அப்படியே குதிரை வண்டியில் முழங்கால்களை  மடக்கி   நமஸ்கரித் தவாறு  சாய்ந்து விட்டேன். ''ராம  ராம ராமா '' என்று விடாது ஜெபித்தேன்.  அது ஒரு பிரார்த்தனை தான் எனக்கு தெரிந்தது.   அம்மாவும் மற்றவர்களும்  அப்புறமாக கலவை வந்தார்கள்.  அம்மா  அவள் அக்காவுக்கு  ஆறுதல் சொல்ல வந்தவளுக்கு அவள் அக்காவே  தங்கைக்கு  அவள் மகன் சன்யாசியானதற்கு  ஆறுதல் சொல்லும்படியாக  நிலைமை மாறிவிட்டது''.......

தந்தி அனுப்பிய சிறிது நாட்களில்   66வது பீடாதிபதி    பிரபவ  வருஷம்  மஹா க்ரிஷ்ணாஷ் டமி அன்று  சித்தி அடைந்துவிட்டார்.  35 வருஷங் கள்  மட்டுமே  வாழ்ந்தவர்.  அவர்  சித்தி அடையும் முன்பு  தனது சிஷ்யன்  18 வயது  லட்சுமி நாதன் எனும்   ரிக்வேதம்  கற்றுத் தெரிந்த  மாணவனை   அவசரமாக  அடுத்த  67வது  பீடாதிபதியாக  பட்டம் கட்டி விட்டார்கள்.   ஆச்சார்ய  பரம்பரை யில்  பீடாதிபதியாக  பட்டமேற்பவர்கள் ரிக்வேதிகளாக இருக்க வேண்டும். சன்யாசம்  மேற்கொண்ட ப்ரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும்.  ஆகவே   காஞ்சி காமகோடி  மட  67வது  பீடாதிபதியாக லட்சுமிநாதன் ஜகத் குருவானார் . ஏழு நாட்கள் மட்டுமே  அவர் பீடாதிபதியாக இருந்து  வைசூரி நோயிலிருந்து மீளாமல் சமாதி அடைந்தார்.

''/67வது பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட லட்சுமி நாதன் தன்னுடைய முடிவு நெருங்கியதை அறிந்து மனதில் ஒரு சங்கல்பம் செய்தார்.     அடுத்த  ஏழு நாட்களில்   சித்தி அடையும்  முன்பு   தனது  66வது பீட  குருவை மனதில்  நிறுத்தி ஒரு சங்கல்பம் எடுத்தான்.?  அது என்ன?

தனக்குப் பிறகு   தனது தாயின் சகோதரி மகன் ஸ்வாமிநாதன் அடுத்த  68 வது  காஞ்சி காம கோடி  பீடாதிபதியாக  பட்டம் பெறவேண்டும்  என்பது தான் சங்கல்பம்.   நிச்சயம்  66வது பீடாதிபதியின் மனதில் இருந்த  விருப்பமும் அது தான் என்பதில் சந்தேகம் இல்லை.  

 சன்யாசியாவது ரொம்ப  கடினமான ஒரு  கட்டுப் பாடுகள் கொண்ட  வாழ்க்கை நெறிமுறை.    உணவில் அநேக கட்டுப் பாடு,  காலை முதல் இரவு வரை கடினமான  பூஜை,  த்யானம், ஸ்னானம், விரத முறைகள்,  விதிகள்.  இதை திடீரென்று ஒரு 13 வயது சிறுவனுக்கு திணித்தால்  எப்படி அவன் மனோநிலை இருக்கும்.   எப்படி  அவற்றை ஏற்று  முழுமையாக நிறை வேற்றமுடியும்?  அதற்கு   எவ்வளவு மனோதிடம் வேண்டும்?   இவ்வளவு  கடின வாழ்க்கை முறையை தங்களது 13 வயது மகன்  ஸ்வாமிநாதன்  மேற்கொள்ள  வேண்டுமே என்ற கவலை   மஹா லட்சுமி அம்மாளுக்கும்   சுப்ரமணிய சாஸ்திரிகளுக்கும் கவலை தந்தது.  

ஸ்வாமிநாதனை விட்டு பிரிய  மனம் இடம் கொடுக்கவில்லை.  சன்யாசம் மேற்கொண்டால் உறவு பந்தம் எல்லாம்  விடுபட்டு விடும்.  இனி அவன் அவர்கள் மகனாக வீட்டுக்குள் நுழைய முடியாது. எதிர்பார்க்காத  சூழ்நிலை  அல்லவா இது.  

''இனி என்குழந்தை  சன்யாசியா??'' இந்த எண்ணத்தை ஏற்றுக்கொள்ள  திட மனது  தாயிடம் இல்லை.  அவர்கள் சம்மதம்  வேண்டுமே.

 காஞ்சி மட அதிகாரிகள், பண்டிதர்கள் எல்லோரும்  ஸ்வாமிநாதன்  சாஸ்திரிகளை, மஹாலக்ஷ்மி அம்மாளை  சூழ்ந்துகொண்டு  எப்படியாவது  ரெண்டாவது மகன் ஸ்வாமிநாதனை  மடத்துக்கு 68வது  பீடாதிபதியாக அளிக்க வேண்டியபோது  முடிவெடுக்க முடியவில்லை.  தவித்தார்கள்..

''உங்களுக்கு மற்ற மூன்று பிள்ளைகள் இருக்கிறார்களே, இந்த  மகத்தான வாய்ப்புக்கு ஒரு மகனை அளிப்பதில் என்ன தயக்கம் ? இது   66வது பீடாதிகளின் விருப்பமும் அல்லவா?   67வது  பீடாதிபதிலின் விருப்பமும் அல்லவா? இது லோக க்ஷேமத்துக் காகத்தானே, என்று அறிவுறுத்தி ஒப்புதல் அளிக்க  தைர்யம்    ஊட்டினார்கள்.  இதனால் எத்தனை ஆயிரம்  பக்தர்கள்,  ஆஸ்ரம வாசிகள் உலகமெங்கும்  மகிழ்வார்கள் என்றும்   உணர்த்தினார்கள்.  இருந்தும்  மஹா லக்ஷ்மி அம்மாள் சாஸ்திரிகள் இருவராலும்  உடனே ஒப்புதல் அளிக்க இயலவில்லை. அப்போது தான்  ஒரு ஆச்சர்யம் நடந்தது.

''என் அருமைத் தாய் தந்தையரே,  நீங்கள் கொஞ்சமும்  கவலை கொள்ளவேண்டாம்.  எனக்கு  என் குருநாதர் முன்பே   இது பற்றி  சூசகமாக  பெருமுக்கலில்   உணர்த்தி இருக்கிறார். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.    நீங்கள் கொஞ்சமும் யோசிக்கவே  வேண்டாம்.    உங்கள் ஒப்புதலை மனப்பூர்வமாக  மட நிர்வாகிகளுக்கு கொடுங்கோ . எனக்கு இதில் பூர்ண திருப்தி.    நான் ஆனந்தமாக இந்த  சன்யாச வாழ்க்கை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்''   என்று  சொல்லி  பெற்றோர் காலடியில் விழுந்து அவர்கள் ஆசியும் ஒப்புதலும் வேண்டினான்  ஸ்வாமிநாதன்.

ஒருவாறு மனம் கல்லாக்கிக்கொண்டு  பெற்றோர் சம்மதித்தனர். அதன் பிறகு  ஆதி சங்கரரைப் போல  மழித்த தலையோடு  ருத்ராக்ஷ மாலை ,  கமண்டலத்தோடு, காவி வஸ்திரம் தண்டம்  அணிந்த  சங்கராச்சார்யராக  அந்த பெற்றோர்  சுவாமிநாதனை பார்க்கவே இல்லை. ஒருவேளை  தங்கள் மகன்  சன்யாசியான அதிர்ச்சியில் அவனை மீண்டும் பார்க்கவில்லையா, அல்லது லோக சம்ரக்ஷணத்துக்காக  ஜகத் குருவான  மகனை பழைய  உறவு சம்பந்தப்பட்ட உணர்ச்சிகளோடு    சென்று பார்க்கக் கூடாது என்ற சங்கல்பத்துக்கு,  விதிக்குட்பட்டு  பார்க்கவில்லையா  என்பது தெரியாது. ஆனால் யார்  தங்களது மகனைப் பற்றி விசாரித்த போதும்  அவர்கள் மௌனம் அனுஷ்டித்தார்கள்.

பிரபவ வருஷம்,  மாசி மாசம்  மூல நக்ஷத்தி ரத்தில் ரெண்டாவது  புதன் கிழமை அன்று    13.2.19007  அன்று    68வது  காஞ்சி காமகோடி பீடாதிபதியாக  ஸ்வாமிநாதன் ஜகதகுரு பட்டம் ஏற்க வேகமாக  ஏற்பாடுகள் நடந்தது.  13 வயது  ஸ்வாமி நாதனுக்கு சன்யாச  ஆஸ்ரமம்   வழங்கப்பட்டது  இனிமேல்  ஸ்வாமிநாதன் என்ற சிறுவன்  ஸ்ரீ  சந்திரசேக ரேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள்  என்று  உலகம் அறிந்த  நமது மஹா பெரியவா.

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு காலடியில்  தனது 7 வயது மகன் சங்கரனை காஷாய உடையில் தாய் ஆர்யாம்பா பார்த்தாள் .  அன்று கலவையில்  13வயது மகனை தூர இருந்து  காஷாய உடையில், பார்த்த தாய்  மஹா லக்ஷ்மி பார்த்து  உறைந்து நின்றாள்.  மகனை இழந்தவள்  அவனை மக்களுக்கு ஜகத் குருவாக  68வது காஞ்சி  காமகோடி பீடாதிபதியாக தந்து தானும் அவரை  வணங்கினாள் . எப்படிப்பட்ட தாய் ஈச்சங்குடி  மஹாலக்ஷ்மி அம்மாள்.

தான் பிறந்த ஈச்சங்குடியில் மஹாலக்ஷ்மி  அம்மாள் வாழ்ந்த பழைய வீட்டை இபோதுள்ளவர்களிடமிருந்து வாங்கி, அதில் ஒரு பாடசாலை நிறுவி அதிலிருந்து வேத கோஷம் எங்கும் எதிரொலிக்கவேண்டும் என்று மஹா பெரியவாளுக்கு ஆசை. 100வயது ஆகியும் வெளிப்படுத்தப்படாமல்  நிறைவேறாமலிருந்தது.

எப்படியோ அதை அவர் ஆயுள்காலத்திலேயே நிறைவேற்றும் பாக்யம் பெங்களூர் ஹரி எனும் அருமையான பக்தருக்கு கிடைத்தது.

எவ்வளவு பெரிய  பாக்கியசாலி அவர். மஹா பெரியவாளை கடைசியாக பார்த்து பேசி, அவர் அருள் ஆசியை மனநிறைவோடு பெற்றவர் ஹரி ஸ்வாமிகள். ஏழு வருஷம் முன்பு நடந்த சம்பவ  FLASHBACK  இது;

1993 பெரியவா பக்தர் ஹரி காஞ்சி பெரியவாளை தரிசனம் பண்ண வந்தார்.
”ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலுக்குப் புனருத்தாரணம் பண்ணணும்னு ஆசைப்படறியா ?சந்தோஷமா  பண்ணு!” -- பெரியவா அனுக்கிரஹம் கிடைத்ததில் ஹரிக்கு பரம ஆனந்தம்.
''ஸ்ரீகச்சபுரீஸ்வரர் ஸ்ரீகாருண்யவல்லியின் கருணை பற்றி நிறைய சொன்ன பெரியவா ''நான் சின்ன வயசிலே அந்தக் கோயிலுக்குபோய் உட்கார்ந்துண்டு தான் வேதம் எல்லாம் கத்துண்டேன்.''
சற்று நேரம் மௌனம்.....
 திடீரென்று ஹரியிடம் ''நீ ஒரு உபகாரம் பண்ண முடியுமோ?”
''பெரியவா ஆஞை '' என்கிறார் ஹரி.
''என் பூர்வாஸ்ரம அம்மா பிறந்த ஊர் ஈச்சங்குடி.அங்கே அவளுக்கு ஒரு பழைய வீடு இருக்கு. அந்த இடத்தை ஒரு வேத பாடசாலையாக அமைக்கணும். எல்லாருக்கும் உபயோகமா இருக்கும்”
”பெரியவா இது என் பாக்கியம்! என் பாக்கியம்!’ என்று சொல்லி, ஆனந்தத்தில் ஹரி அழுதுவிட்டார்.
‘எத்தனையோ கோயில்களைப் புனரமைத்தவர் மகாபெரியவா! பூமிக்குள் மறைந்து கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டி, அந்தக் கோயிலை வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான். தான் சம்பந்தப்பட்ட எண்ணம், தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால் 61 வருஷங்களாக தன்  எண்ணத்தை விருப்பத்தை எவரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறாரே!’
அந்த வீட்டை சொந்தக்காரரிடம் பேசி விலைக்கு வாங்கப்பட்டு பக்தர்களால் வேத பாடசாலையாக மாறியது.
சுமார் 61 வருஷ பெரியவாளின் ஆசை ஒரே வருஷத்தில் நிறைவேறியது. வேத பாடசாலை கட்டி முடித்து குரு பூஜை நடத்த பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் ஹரி.
அன்று யாருக்குமே தரிசனம் தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலிருந்தார். பிரபலங்களின் வருகையும் பெரியவாளுக்குத் தெரிவிக்கப்பட்டது.

‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்’ என்றும் மஹா பெரியவாளிடம்  சொல்லப் பட்டது. ஈச்சங்குடி .... ஹரி....சட்டென்று கண் திறந்த பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் வரச்சொன்னார். பாதுகைகளை அணிந்துகொண்டார். ஹரியை ஆசீர்வதித்தார். வேத பாடசாலை துவக்க பத்திரிகையை வாங்கிப் படித்தவர், அதிலிருந்த அப்பா அம்மா படத்தை கண்களில் ஒற்றிக்கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை ஹரியிடம் தந்தார்.
”இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!’ என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
ஈச்சங்குடி வேத பாடசாலை பெரியவா அனுகிரஹத்தால் ஆசிர்வாதத்தால் இன்றைக்கும் இயங்கி வருகிறது.

Reply all
Reply to author
Forward
0 new messages