பதிவிரதமும், குருவிரதமும் -தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி-3
நமக்கு விஷயம், ஒரே குருவால் ஒருத்தனுக்குப் பூர்ண ஞானம் ஏற்படாமற் போகலாம் என்பது. அப்படிச் சொன்னால் வேறே குருமாரிடமும் போகலாம் என்று தானே அர்த்தம்?
நம்முடைய (அத்வைத) ஸம்ப்ரதாயத்தின் ஆதி ப்ரவர்த்தகர்களிலேயே ஒருத்தர் தத்தாத்ரேயர். காமாக்ஷியம்பாள் கோவிலிலிருக்கும் ஆசார்யாள் ஸந்நிதி விமானத்தில், பூர்வாசார்ய பரம்பரையில் வந்த அத்தனை பேருக்கும் பிம்பங்கள் இருக்கின்றன. அதிலே எல்லாருக்கும் மேலே 'டாப்'பில - 'தக்ஷிணாமூர்த்தி'யா என்றால் இல்லை. (நம்முடைய குருபரம்பரா) ச்லோகம் 'நாராயணம், பத்மபுவம்' என்று ஆரம்பிக்கிறதே, அந்த நாராயணா என்றால் அவரும் கீழ் வரிசைதான். 'டாப்'பில் இருக்கிறவர் தத்தாத்ரேயர்தான் அவருடைய வாக்கு என்றால் அதற்கு கனம் ஜாஸ்திதான்.
அதைவிடவுங்கூட... நமக்கு (சிரித்து) சீஃப் ஜஸ்டிஸ் யார்? ஆசார்யாள்தானே? அவர் வாக்கிலேயே பல குருமாரைக் கொண்ட ஒருவரை ச்லாகித்துச் சொல்கிறாரென்றால் அதற்கு மேல் நமக்கு ஒன்றும் வேண்டாம் தானே? 'அப்படி ஏதாவது இருக்கா?' என்றால் இருக்கு.
ப்ருஹதாரண்யகத்தில் ஒவ்வொரு ஸெக்க்ஷனுக்கும் 'ப்ராஹ்மணம்' என்று பெயர் கொடுத்திருக்கும். 'வம்ச ப்ராஹ்மணம்' என்று (இவ்வுரை) நடுவே சொன்னது ஞாபகமிருக்கலாம். (சிரித்து) மறந்தும் போயிருக்லாம்!... அப்படி 'ஷடாசார்ய ப்ராஹ்மணம்' என்றே ஒன்று இருக்கிறது, அர்த்தம் புரிகிறதா? 'ஆறு
ஆசார்யர்களைப் பற்றிய ப்ராஹ்மணம்' என்று அர்த்தம். ஒருத்தருக்கே அப்படி ஆறு ஆசார்யர்கள். அந்த ஒருத்தர் ஸாமான்யமானவர் இல்லை. ராஜரிஷி,
ராஜரிஷி என்றே ஸ்தோத்ரிக்கப்படும் ஜனகர்தான் அவர். ஒரு பெரிய ராஜாவுக்குரிய அத்தனை கார்யங்களும் செய்து கொண்டே உள்ளுக்குள்ளே ஸமாதி நிலையிலிருந்தவர் அவர். கர்மயோகிகளுக்கு 'எக்ஸாம்பி'ளாக க்ருஷ்ண பரமாத்மாவே அவரைத்தான் சொல்லியிருக்கிறார்.
ஜித்வர், உதங்கர், பர்க்கு என்றிப்படி ஆறு பேர் - அம்மா பேரில் கோத்ரம் பெற்ற ஸத்யகாம ஜாபாலர் கூட அவர்களில் ஒருத்தர், இப்படி ஆறு ஆசார்ய புருஷர்களிடம் தாம் பெற்ற உபதேசம் பற்றி அந்த ப்ராஹ்மணத்தில் ஜனகர் யாஜ்ஞவல்கியரிடம் சொல்கிறார். அப்புறம் இப்போது ஏழாவது ஆசார்யராக யாஜ்ஞவல்கியரிடமும் உபதேசம் கொடுக்கும்படி ப்ரார்த்திக்கிறார்.
அவர் ஏதோ பண்ணப்படாததைப் பண்ணினதாக யாரும் நினைக்கவில்லை. அவர் பண்ணினதை யாஜ்ஞவல்க்யர் ச்லாகித்ததாகவே ஆசார்யாள் பாஷ்யத்திலிருந்து தெரிகிறது. இங்கேதான் நம்முடைய Chief Justice -ன் ஜட்ஜ்மென்ட் வருவது!
யாஜ்ஞவல்க்யர் ஆரம்பிக்கும்போதே ஜனகரிடம், "எவராவது ஒருத்தர் உனக்குச் சொன்னதை நானும் கேட்டுக்கொள்ளவேண்டும்" அதாவது "அதை எனக்குச் சொல்லு" என்கிறார். "உனக்குச் சொன்னது" என்பது ஏதோ ஊர் அக்கப்போரில்லை. முந்தின மந்திரத்தில்தான் அவர், அணு மாதிரி அத்தனை ஸ¨ட்சமமான ஆத்ம தத்வம் பற்றி விசாரம் பண்ணுவதற்காகத் தாம் வந்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.....
ராஜா (ஜனகர்) கல்மிஷமில்லாமல், ஹாஸ்யமும் த்வனிக்க, அவரை வரவேற்கிறபோது, "பசுவா (கோதானமா) ? ஸ¨க்ஷ்ம தத்வ விசாரமா? எதுக்கு வந்திருக்கேள்?" என்று கேட்டார். அதற்கு அவரும் கல்மஷமில்லாமல், அதே ஹாஸ்யபாவத்திலே, "இரண்டுக்காகவுந்தான்" என்று பதில் சொல்லியிருக்கிறார். அதனால் அடுத்த மந்த்ரத்திலேயே "எவராவது உனக்குச் சொன்னது" என்று அவர் சொல்கிறது அத்யாத்ம விஷயந்தான். 'எவராவது ஒருத்தர்' என்பதும் அந்த விஷயமாக ஜனகருக்கு உபதேசித்த உத்தமமான ஞானாசார்யர்களில் 'எவராவது ஒருத்தர்' என்றுதான் அர்த்தம் கொடுக்கும். அந்த ஸந்தர்ப்பத்தில் வேறே விதமாக இருக்கமுடியாது.
இங்கே ஆசார்யாள் ஸ்பஷ்டமாகவே, "c அநேக ஆசார்யர்களை ஸேவிக்கிறவனாச்சே!அவாள்ள (அவர்களில்) எவராவது ஒருத்தர் சொன்னதை நானும் கேட்டுக்கறேனே!" என்று ஜனகரிடம் யாஜ்ஙவல்க்ய்ர் சொன்னதாக பாஷ்யம் பண்ணியிருக்கிறார். "அநேகாசார்ய ஸேவி" (பல ஆசார்யர்களை வழிபடுபவர்) என்று பாராட்டு வார்த்தையாகவே போட்டிருக்கிறார். இதிலிருந்து ஆசார்யாள் அபிப்ராயமும் ஒருத்தன் பல குருமாரை ஆச்ரயிக்கலாம் என்பதாகத் தெரிகிறது. அவர் 'அபிப்ராம்' என்றால் நமக்கு அது 'ஜட்ஜ்மென்ட்'தான்!
பிற்காலத்தில் நம்முடைய அத்வைத ஸம்ப்ரதாயத்தில் ரொம்பவும் பெரியவர்களாக இருந்தவர்கள், உத்தம க்ரந்தங்கள் உபகரித்தவர்களை எடுத்துக்கொண்டாலும், இப்படிப் பல பேருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குரு
இருந்திருப்பதாகத் தெரிகிறது.
வித்யாரண்யாளுடைய முக்ய குரு வித்யா தீர்த்தரைப் பற்றிச் சொன்னேன்.
சங்கரானந்தர் என்பவரையும் அவர் குருவாக ஸ்துதித்திருப்பதையும் சொன்னேன். இந்த சங்கரானந்தரும் வித்யா தீர்த்தரின் சிஷ்யர்தான். இவருக்கும் வித்யாதீர்த்தர் மாத்திரமில்லாமல் அனந்தாத்மர் என்றும் இன்னொரு குரு இருந்திருக்கிறார் என்று அபிப்ராயமிருக்கிறது.
மதுஸ¨தன ஸரஸ்வதி ஸ்வாமிகள் என்று பரம அத்வைதி. அதே ஸமயம் க்ருஷ்ண பரமாத்மாவிடம் பக்தி உள்ளவர். இரண்டையும் இணைத்துக் கொடுத்த பெரியவர். "ஸ்ரீ ராம - விச்வேச்வர - மாதவாநதாம்" என்று அவரே (ஸ்ரீ ராமர், விச்வேச்வரர், மாதவர் என்ற) தம்முடைய மூன்று குருக்களுக்கும் நமஸ்காரம் தெரிவித்திருக்கிறார்.
ராமதீர்த்தர் என்று நம்முடைய (அத்வைத) ஸம்ப்ரதாயப் பெரியவர்களில் ஒருத்தர். அவருக்கு க்ருஷ்ணதீர்த்தர், ஜகந்நாதாச்ரமி, விச்வவேதர் என்று மூன்று குருமார் இருந்திருப்பதாகத் தெரிகிறது.
இப்போது சொன்ன பெரியவர்களுக்கெல்லாம் முந்தி ஆனந்தபோதர் என்று ஒருவர் இருந்தார். அவருக்கு விமுக்தாத்மர், ஆத்மாவாஸர் என்று இரண்டு குருமார் இருந்ததாகத் தெரிகிறது.
ஒருத்தர் முக்யகுரு - மற்றவர் உபகுரு, ஒருவர் ஆச்ரம குரு - மற்றவர் வித்யாகுரு என்றும் இந்தப் பல குருமாரில் இருந்திருக்கலாம்.
எப்படியானாலும் ஒருத்தருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குரு இருப்பதில் ஒன்றும் தோஷமில்லை என்று ஆகிறது.
ஸ்ரீ வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தை எடுத்துக் கொண்டாலும் ராமாநுஜருக்கே ஆளவந்தார் முக்யகுரு பெரிய நம்பி, திருக்கச்சி நம்பி, திருக்கோஷ்டியூர் நம்பி ஆகிய மூன்று பேரும் உபகுருக்கள் என்கிறாற்போலச் சொல்கிறார்கள்....
எங்கேயோ இருந்து எங்கேயோ வந்துவிட்டேன்!எங்கேயானாலும் குரு - சிஷ்ய ஸமாசாரந்தான். அதிலும் முக்யமான ஒரு ஸமாசாரந்தான் என்ற மட்டில் ஸந்தோஷந்தான்.....
அஞ்ஞானத்தால் கண் கட்டப்பட்டு, மாய ப்ரபஞ்சக் காட்டில் விடப்பட்ட ஜீவாத்மா ஒரு முக்ய குரு - பல உபகுருமாரால் ஞானப்பார்வை பெற்று இந்தக் காட்டிலிருந்து 'வீடு' என்றே சொல்லப்படுகிற பெரிய வீட்டுக்கு 'மோக்ஷத்திற்கு) த் திரும்புவதாக, இந்த நாளில் 'உருவகக் கதை' என்கிற மாதிரி உபநிஷத்தே கதை சொல்லியிருப்பதைப் பார்த்தோம்.
அந்தக் கதை யாருக்கு உபதேசிக்கப்பட்டதோ அந்த சிஷ்யனே இப்படிப் பல குருமார் படைத்தவன்தான் என்று சொன்னேன்.
உத்தாலகர் என்று ஒரு KS. அருணர் என்பவரின் பிள்ளையானதால் உத்தாலக 'ஆரூணி' என்று அவரைச் சொல்வது. அவர் பிள்ளைக்குப் பேர் ச்வேதகேது. உத்தாலகரே நல்ல வித்வானானாலும், பிறத்தியார் கண்டிப்பிலே படித்தால்தான் வித்யையை நன்றாக உள்ளே ஏற்றிக்கொள்ள ஜாஸ்தி இடமுண்டு என்பதால் அவர் பிள்ளையை வேறே குருகுலத்தில் படித்துவிட்டு வருவதற்காக அனுப்பினார். அவனும் அப்படியே போய் குருகுலத்தில் அநேகப்
பெரியவர்களிடம் அநேகவித்யைகள் பன்னிரண்டு வருஷம் படித்துவிட்டுத் திரும்பி வந்தான்.
தன்கிட்டேயே படித்தால் அவன் உருப்படியாய் வரமாட்டானென்றுதான் அப்பா வெளியிலே அனுப்பி வைத்தது. ஆனால் அப்படிப் போயும் அவன், 'தானாக்கும் இத்தனை வருஷம் இத்தனை விஷயம் படிச்சிருக்கோம்!' என்ற மண்டை கனத்தோடேயே திரும்பி வந்தான்.
பொதுவாக ஸகல ஜனங்களுமே விநயமாக இருந்த காலம் அது. அதிலும் சின்ன வயஸுக்காரர்கள், சிஷ்யர்கள் ரொம்பவுமே தழைந்து இருப்பார்கள். ஆனால் எந்தக் காலமானாலும் மநுஷ்ய பலஹீனங்கள் எங்கேயாவது கொஞ்சம் தலை தூக்கிக்கொண்டுதான் இருக்கும் போலிருக்கிறது படிக்கப் படிக்க மேலும் மேலும் 'தான்' (அஹங்காரம்) என்று நாம் பார்க்கிறதற்கு மறுகோடியாக, படிக்கப் படிக்க மேலும் மேலும் அடக்கம் என்பதையே ஸதாவும் குருமார்கள் சிஷ்யர்களிடம் சொல்லிச் சொல்லி அப்படிப் பழக்கிய அந்த நாளிலும் இந்தப் பையன் ச்வேதகேது அதற்கு வித்யாஸமாக, ரொம்பவும் கர்வியாகியிருக்கிறான்... 'பையன்' என்றால் அவ்வளவு ஸரியோ? என்னமோ? அவனுடைய பன்னிரண்டாம் வயஸில் அப்பாக்காரர் வேறே குருமாரிடம் படிக்க அவனை அனுப்பினார், அவன் பன்னிரண்டு வருஷம் அப்படிப் படித்து இருபத்துநாலு வயஸில் திரும்பி வந்தான் என்று இருக்கிறது. அவனைப் 'பைய'னில் சேர்க்கலாமா?...
அவனுடைய மண்டைக் கனத்தை இறக்கி அவனுக்கு புத்தி கற்பிப்பதற்காகவேதான் பிற்பாடு பிதா அந்த கந்தார தேசக் கதை சொல்லும்போது கதாபாத்ர ஜீவன் இவன் மாதிரியே பலபேரிடம் கேட்டு வழிதெரிந்த கொண்டதாகச் சொல்லியிருப்பார் போலிருக்கிறது. இப்படி ஒருத்தன் தெரிந்துகொண்டால் மாத்திரம் போதாது, அதிலே கர்வம் உண்டாகி வீணாயும் போகலாம் என்றே அந்தக் கதையில் சிஷ்யனுக்கு இருக்கவேண்டிய 'பண்டிதத்தன்மை பற்றியும், 'மேதை' பற்றியும் சொல்லியருக்கலாம். உபதேசத்தை நன்றாக புத்தியில் நிறுத்திக் கொள்வதே 'மேதை'. புத்தி என்றால் மூளை மட்டுமில்லை, ஜீவனை நல்ல முறையில் பக்குவப்படுத்தும் 'நல்லறிவு' என்பது. பண்டிதத்தன்மை என்றாலும் 'ஸ்காலர்ஷிப்' மட்டுமில்லை. "நிற்க அதற்குத் தக" என்று திருவள்ளுவர் சொன்னாற் போல கற்ற வித்யை தன்னுடைய வாழ்க்கையிலேயே, நடத்தையிலேயே ப்ரகாசிக்கும்படி ஒழுகுவது. கர்வத்துக்கு இடம் கொடுத்தால் இந்த இரண்டும் ஸித்திக்கவே ஸித்திக்காது. மூளையோடு நிற்கிற படிப்பு 'மநுஷன்' என்று ஒருத்தனை ஆக்கிவிடமுடியாது, அதாவது குணசாலியாகக் முடியாது. இதற்கு லாயக்கற்ற மூளையைத் தாழப் படுக்கப்போட்டு விநயமாயிருந்தாலே அப்படி ஆக முடியும்.
பின்னால் நாம் பார்க்கிறதிலிருந்து ச்வேதகேதுவுக்கு உசந்த மூளைத் திறமை இருந்தது தெரிகிறது. அதனால் நேராகக் குத்திக்காட்டிச் சொல்லாமல் மறைமுகமாக 'ஹின்ட்' பண்ணினாலே புரிந்துகொண்டு விடக்கூடியவன். நேரே குத்திக்காட்டினால் கோபம் வரலாம், 'ஹின்ட்' பண்ணினால்தான் எடுத்துக்கொள்ளத் தோன்றும் என்றே அப்பா அப்படி (உருவகக் கதை) சொல்லி,
மறைமுகமாக விட்டிருக்கலாம்.
'குருவே என்னவும் பண்ணிக்கட்டும்' என்று தன்னைப் பூர்ணமாக அவனிடம் ஒப்புக்கொடுத்துவிட்டு சராணாகதி செய்ய எல்லாராலும் முடியாதுதான். முடிந்த
மட்டும் அதைப் பண்ணி, சிஷ்யனானவன் தானே ஸ்வய முயற்சியும் நிறையப் பண்ணத்தான் வேண்டும். அதனால் தான் கட்டையவிழ்த்துவிட்ட குருவே முழு வழியும் தானே கூட இருந்து அழைத்துப்போனதாகச் சொல்லாமல், அவன் மட்டுமே போனதாகச் சொல்லியிருக்கிறது என்று வைத்துக்கொள்ளலாம். ஆனாலும் அவர் சொல்லிக் கொடுத்த வழியில்தான் போனான் என்பது முக்கியம்.
திசை- வழி- காட்டுகிறவர் 'தேசிகர்' என்ற டெஃபனிஷனுக்கு உபநிஷத்தில், திசை திசையாகத் திரும்பி உதவி கேட்டவனுக்கு வழி சொல்லித் தந்தவனைக் காட்டி, அதுதான் ஆசார்யனின் கார்யம் என்று சொல்லியிருப்பது அழுத்தமான சான்றாக இருக்கிறது.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536