வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் ஆகவேண்டும்.இதற்கு சாக்ஷாத் பராசக்தியும், பரமேசுவர பத்தினியுமான அம்பாளுடைய சரணாரவிந்தத் தியானம்தான் வழி. அம்பாளின் சரணத்தைத் தியானித்துக் கொண்டே இருந்தால் அழுக்கெல்லாம் போய், குறை எல்லாம் தீர்ந்து பூரணமாக அப்படியே நிரம்பிப் போய்விடுவோம். அழுக்கும் குறையும் உள்ள ஜீவர்களாக நாம் உண்டாகியிருப்பது அவள் விளையாட்டுத்தான். எனவே இதிலிருந்து நம்மை மீட்டு நிர்மலமாக, பூரணமாகப் பண்ணுவதும் அவள் காரியம்தான்.ஆடு மாடு மாதிரி சாகாமல், சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி நம் உயிர் உடம்பிலிருந்து பிரிந்து மறுபடியும் உடம்பு எடுக்காமல் இருப்பதற்காகத்தான் இத்தனை மதங்களும் உள்ளன. அம்பாளின் தியானத்தைவிட, வேறு மதம் வேண்டியதே இல்லை; சாந்தியும், ஆனந்தமும் தந்து நம்மை பூரணத்துவம் அடையச் செய்வது அதுவே.அம்பாளைத் தியானித்து தியானித்து நம்மில் யாராவது நிரம்பிப் போய்விட்டால் நம் மதம் தானே வளரும். மதத்துக்காகப் பிரச்சாரம், வாதம் எதுவுமே வேண்டாம். நான் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? உபந்நியாசம் செய்கிற இந்த நேரத்தில் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருந்தால், அது இந்த உபந்நியாசத்தை விட மிகவும் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் ஆகும். இந்தப் பேச்சு வார்த்தைகளைவிட நிறைவுக்கு உதவுவது அதுவே. ஆனாலும் எனக்கு இந்த உண்மை இப்படிப் பேச உட்கார்ந்ததால் தெரிகிறது. ஆகவே, பேசப்பேச அதுவும் என் நினைவைச் சுத்தப்படுத்துகிறது என்று தெரிகிறது. நம்மில் ஒரு ஆத்மாவாவது பூரணமாக உயருவதற்காகத்தான் மத விஷயங்களைப் பேசுகிறேன்.இந்த மத விஷயங்களுக்கெல்லாம் முடிவு நம் குறைகளைக் களைந்து நிறைவு பெறுவதுதான். அவரவரும் அநுஷ்டானங்களைச் செய்து தன் நிறைவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் மதம். அதற்கான புத்தியும் சக்தியும் அம்பாளிடமே வேண்டிப் பெற வேண்டும்.அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.என்னிடம் தோஷம் இருந்தால் நான் பிறருக்கு உபதேசிப்பது வேஷம்தான். உங்களை ஏமாற்றுவதுதான். எனக்கு அம்பாள் அநுக்கிரகம் பூரணமாக வந்து நான் நிறைந்து போய்விட்டால், அப்புறம் உபதேசம் என்ற வாய்ப்பேச்சே தேவையில்லை. பேசாமலே அநுக்கிரஹ சக்தியானது மற்றவர்களுக்கு ஞானத்தைத் தந்துவிடும். ஆக, இரண்டு நிலையிலும் உபந்நியாசம் கூடாதுதான். இப்படி எல்லாம் நான் உபதேசம் பண்ணுகிற நேரத்தை அவளுடைய தியானத்திலேயே செலவு செய்தால் இன்னும் எத்தனையோ மடங்கு ஆத்ம சாந்தி கிடைக்கும். உபந்நியாசம் செய்கிற பொழுதை அவள் தியானத்தில் செலவிட்டால், என் தோஷங்கள் எத்தனையோ நீங்கும். இதைக் கேட்கிற பொழுதை அவளுடைய தியானத்தில் செலவிட்டால் உங்கள் தோஷங்களும் எவ்வளவோ விலகும். ஆனாலும் இப்படியெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பதற்குக் காரணம், உங்களில் யாராவது தம்மைத்தாமே இவ்வாறெல்லாம் சோதித்துப் பார்த்துக்கொண்டு, அம்பாளைத் தியானித்து பூரணத்துவம் அடைய இந்தப் பேச்சு தூண்டாதா என்ற ஆசைதான். பிரச்சாரத்தால் மதமும் ஆத்மாநுபவமும் வளராது. பிரச்சாரமும் பிரசங்கமும் தற்கால சாந்திதான்.சாந்தியே இல்லாத லோக வாழ்க்கையில் ஏதோ தாற்காலிகமாக ஒரு சாந்தி உண்டானாலும் ஒரளவுக்கு விசேஷம்தான். நான் பேசினால் உங்களுக்குத் தற்கால சாந்தியாகத் திருப்தி உண்டாகிறது என்பதால் பேசுகிறேன். நான் பேசாவிட்டால் உங்களுக்கு துக்கமாகவும், ஏமாற்றமாகவும் இருக்குமே என்பதற்காகப் பேசுகிறேன்.ஆனால் இதைவிட அவசியம் தாற்காலிகமானதைச் சாசுவதமாகப்பண்ணிக் கொள்வதுதான். அதற்கு ஒரே வழி அம்பாளின் சரணாரவிந்தத் தியானமே. எனக்கு முக்கியம் அம்பாள். லோக க்ஷேமார்த்தம் அம்பாளுடைய சரணாரவிந்தத்தைத்தான் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும்.